கட்டுரைகள்பிரதான செய்திகள்

முஸ்லிம்களிடமிருந்து பறிபோயுள்ள தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினை மீட்டெடுப்பது எவ்வாறு? முஸ்லிம் சமூகத்தினர்களே! இது உங்கள் மீது கடமையாகும்.

(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது)

முஸ்லிம்களுக்கென்று இருக்கின்ற ஒரே ஒரு அரச பல்கலைக்கழகமென்று நாங்கள் பெருமை பட்டுக்கொண்டிருக்கும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் திட்டமிட்டவகையில் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்பட்டு வருவதனை முஸ்லிம் கல்வி சமூகத்தினர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது கவலை தருகின்றது.  

எமது நாட்டில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின்கீழ் பதினைந்து பல்கலைக்கழகங்கள் உள்ளன. அதில் முஸ்லிம்களின் நிருவாகத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழகமும், தமிழர்களின் நிருவாகத்தில் யாழ், கிழக்கு ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களும் தவிர்ந்த, இந்நாட்டின் ஏனய அனைத்து பல்கலைக்கழகங்களும் சிங்களவர்களின் நிருவாகத்தில் இயங்குகின்றன.

சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் பல்கலைக்கழகங்கள் இருக்க முடியுமென்றால் இந்நாட்டில் எட்டு சதவீதமாக வாழ்கின்ற முஸ்லிம்களுக்கென்று ஏன் ஒரு பல்கலைக்கழகமாவது இருக்கக்கூடாது என்று மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் காலத்தில் நிலவிய இனப்பிரச்சினையை துரும்பாக வைத்து அன்றைய அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியதன் பயனாக, முஸ்லிம்களின் எதிர்கால கல்வி வளர்ச்சிக்காகவும், உருவாக்கப்பட இருக்கின்ற முஸ்லிம் மாகாணசபையினுள் ஒரு நாட்டுக்குரிய அனைத்து அம்சங்களும் உள்ளடங்கப்பட்டிருக்க வேண்டும் என்ற தூர நோக்கோடும் 1995 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதுதான் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகமாகும்.

எமது சமூகத்தின் உயர்கல்விக்கான நிறுவனமாக மட்டுமல்லாது எமது சமய, கலாச்சார, பண்பாட்டு பாரம்பரியங்களை பேணிப்பாதுகாக்கின்ற ஒரு களஞ்சியமாகவும் தென்கிழக்கு பல்கலைக்கழகம் கருதப்படுகிறது. அத்துடன் இப்பல்கலைக்கழகத்தில் கலை கலாச்சாரம், வர்த்தக முகாமைத்துவம், பிரயோக விஞ்ஜானம், இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி, பொறியியல் ஆகிய ஐந்து பீடங்கள் காணப்படுகின்றது.

கடந்த காலங்களில் அதிக எண்ணிக்கையில் முஸ்லிம் மாணவர்களே காணப்பட்டார்கள். ஆனால் நிலைமை இப்போது தலைகீழாக மாறியுள்ளது. அதாவது 2009 இல் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதன் பின்பு மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தில் அவரது இனவாத நிகழ்ச்சி நிரலுக்கு அமைய, முதன்முதலாக 2009 ஆம் ஆண்டின் கல்வி ஆண்டுக்காக தெ.கி. பல்கலைக்கழகத்தில் மட்டுமல்லாது யாழ். கிழக்கு ஆகிய பல்கலைக்கழகங்களுக்கும் சிங்கள மாணவர்கள் பலவந்தமாக அனுப்பி வைக்கப்பட்டார்கள். யாழ், கிழக்கு ஆகிய பல்கலைக்கழகங்களில் சிங்கள மாணவர்களுக்கு எதிராக இடம்பெற்ற சில அசம்பாவித சம்பவங்கள் காரணமாக அங்கு அனுப்பப்படுகின்றவர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் தொடர்ந்து அண்மைய சில வருடங்களாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இருக்கின்ற ஐந்து பீடங்களில் தமிழ்மொழி மூலமான கலை கலாச்சாரம், இஸ்லாமிய கலாச்சார அரபு ஆகிய இரண்டு பீடங்களை தவிர, ஏனய ஆங்கிலமொழி மூலமான மூன்று பீடங்களிலும் சிங்கள மாணவர்களே அதிகமாக காணப்படுகின்றார்கள். அதாவது திட்டமிட்டவகையில் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

கலை கலாச்சார பீடம் தமிழ் மொழியில் கற்பிக்கப்படுவதனால் அப்பாடநெறிக்கு சிங்கள மாணவர்களை இங்கே அனுப்ப முடியவில்லை. தொண்ணூறு சதவீதமாக தங்களது மாணவர்களை இங்கே நிரப்பும் இனவாதிகளின் திட்டத்துக்கமைய, கலை கலாச்சார பீடத்தினை ஆங்கில மொழி மூலமாக கற்பிக்கும்படி பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழு அதிகாரிகளினால் தொடர்ந்து இங்குள்ள நிருவாகத்தினர்களுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றது. இதன் பின்னணியில் ராவய பலய, பொதுபலசேனா, ஹெலஉறுமய போன்ற சிங்கள இனவாத அமைப்புக்கள் இருப்பதாக நம்பப்படுகின்றது.

வெளிப்பார்வையில் முஸ்லிம்களின் பல்கலைக்கழகம் என்று கருதப்பட்டாலும் முஸ்லிம் மாணவர்கள் அங்கு சிறுபான்மையினராகவே உள்ளார்கள். பெரும்பான்மையினராக அங்கு சிங்கள மாணவர்கள் காணப்படுவதனால் எதிர்காலங்களில் நிர்வாக மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களாக சிங்களவர்கள் நியமிக்கப்படுவதற்குரிய வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றது.

ஒரு தேசிய பல்கலைக்கழகத்தில் குறிப்பிட்ட ஒரு இனத்தினர் மட்டும்தான் கல்வி கற்கவேண்டும் என்று இனவாதம் பேசவில்லை. அப்படி இனவாதம் பேசவும் முடியாது. பல்லின மாணவர்கள் இங்கே கல்வி கற்பது ஒரு ஆரோக்கியமானதும், வரவேற்க கூடியதுமான விடயமாகும். அத்தோடு இப்பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் விளையாட்டு துறையிலும் சிறந்து விளங்குகின்றார்கள். அவர்களை பாராட்டவேண்டும்.

சிங்கள மாணவர்கள் தாமாகவே விரும்பி இப்பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க வந்தால் அவர்களை நாங்கள் வரவேற்போம். ஆனால் இங்கே பெரும்பான்மயிணராக இருக்க வேண்டிய முஸ்லிம் மாணவர்களின் செறிவினை குறைக்கும் பொருட்டு, திட்டமிட்டவகையில் சிங்கள மாணவர்களை அவர்களது விருப்பமின்றி அரசியல் நோக்கங்களுக்காக பேரினவாதிகளினால் திணிக்கப்படுவதுதான் தவறு.

தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பிரதேசங்களில் அம்மக்களின் இனப்பரம்பலை குறைப்பதற்காக திட்டமிட்ட சிங்கள குடியேறத்தினை மேற்கொண்டது போன்றே இதுவும் காணப்படுகின்றது.

இதுசம்பந்தமாக ஆராயும்பொருட்டு கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு நீதி அமைச்சராக இருந்த ரவுப் ஹக்கீம் அவர்கள் பல்கலைகழக மானிய ஆணைக்குழுவின் தலைவரிடம் வினவியபோது, பல்கலைக்கழகங்களுக்காக விண்ணப்பிக்கும் முஸ்லிம் மாணவர்கள் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினை தெரிவு செய்வதில்லையென்று பழியை எமது மாணவர்கள்மீது போட்டது மட்டுமல்லாது, சில முஸ்லிம் மாணவர்களின் விண்ணப்பப் படிவங்களினை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடம் காண்பித்துள்ளார்.

ஆனால் முஸ்லிம் மாணவர்கள் மட்டுமல்ல. இப்பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்படுகின்ற சிங்கள மாணவர்களும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினை ஒருபொழுதும் தெரிவு செய்ததில்லை. பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை தெரிவு செய்கின்ற குழுவில் எந்தவொரு சிறுபான்மை சமூகம் சார்ந்தவர்களும் நியமிக்கப்படவில்லை. அதனால் அக்குழுவில் உள்ள இனவாத சிந்தனை உள்ளவர்கள் தாங்கள் நினைத்தவாறு செயற்படுகின்றார்கள்.

எதுவும் அறியாத அப்பாவி சிங்கள மாணவர்கள் இனவாதிகளினால் திணிக்கப்பட்டு இங்கே அனுப்பப்படுகின்றார்கள். பின்பு அவர்கள் இங்கே வந்ததும், தங்களுக்கு விருப்பமில்லாமல் வேறு பல்கலைக்கழகங்களுக்கு மாற்றம் செய்ய முற்படுவதும், பின்பு அவர்களுக்கு அங்கு இனவாத சிந்தனைகள் விதைக்கப்பட்டு இடமாற்றத்துக்கான முயற்சியை மழுங்கடிக்க செய்வதும் வழக்கமானதொன்றாகும்.

முற்றத்து மல்லிகை மணப்பதில்லை என்பார்கள். அதுபோல் எமது பல்கலைக்கழகத்தில் இருக்கின்ற விரிவுரையாளர்களினதும், பயிற்சி கூடத்தினதும் தரமும், பெறுமதியும் காலடியில் இருப்பதனால் விளங்குவதில்லை. அத்துடன் வர்த்தக முகாமைத்துவபீட விரிவுரை மண்டபம் முழுவதும், மற்றும் ஏனைய பீடங்களின் சில விரிவுரை அறைகளும் குளிரூட்டப்பட்டுள்ளது. இவ்வாறாக குளிரூட்டிய விரிவுரை மண்டப வசதிகள் இந்நாட்டின் வேறு எந்த அரச பல்கலைக்கழகத்திலும் இல்லை.

இங்குள்ள ஏராளமான விரிவுரையாளர்கள் வெளிநாடுகளில் உள்ள உலகின் தலைசிறந்த முன்னணி பல்கலைக்கழகங்களில் முதுமாணி, கலாநிதி பட்டங்களை பெற்றவர்கள். அவர்கள் எமது சமூகத்தினர்கள் என்பதற்காக அவர்களின் தரத்தினை நாங்கள் குறைத்து மதிப்பிட கூடாது.

எனவேதான் இவ்வருடம் புதிதாக பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கும் முஸ்லிம் மாணவர்கள் தங்களது விண்ணப்பப்படிவத்தில் பல்கலைக்கழகத்தினை தெரிவு செய்வதில் எமது தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினை முன்னிலைப்படுத்துவது உரிய பாடங்களுக்கு பொருத்தமான மாணவர்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகும். இதன்மூலம் எமது பல்கலைக்கழகத்தின் பெரும்பான்மை பலம் எம்மைவிட்டு செல்வதனை தடுக்க முடியும்.

இதனை எமது சமூகத்திலுள்ள கல்விமான்களும், அரசியல் மற்றும் சிவில் சமூகத்தினர்களும், சமூக ஒற்றுமை பற்றி வாய்நிறைய பேசுகின்ற அடிமை காக்காமார்களும் புதிதாக பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்கின்ற மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது கடமையாகும்.

Related posts

எமது ஐக்கியத்தையும் பலத்தையும் காட்டி ஜனாதிபதியை வெளியேற்றுவோம்-றிஷாட்

wpengine

பிள்ளையான் பழிவாங்குவாரென அசாத் மௌலானா மிரட்டல்! பல கோடி மோசடிகள் ஆதாரத்துடன் அம்பலம்

wpengine

ஐக்கிய மக்கள் சக்தி பாரிய வெற்றியைப் பெற்று இந்த நாட்டை ஆட்சி செய்யும்

wpengine