பிரதான செய்திகள்

முறைகேடுகளை பேசுவதற்கு கூட தவிசாளர் அனுமதி மறுக்கப்படுகிறது.

கிளிநொச்சி – கரைச்சி பிரதேச சபையின் அபிவிருத்தி மற்றும் ஏனைய நடவடிக்கைகளின் போது இடம்பெறுகின்ற முறைகேடுகளை பேசுவதற்கு கூட தவிசாளர் அனுமதி மறுக்கப்படுகிறது என சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.


சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் மாவட்ட அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

மேலும் தெரிவிக்கையில்,

நேற்று சபையில் கடந்த ஓராண்டு கால அபிவிருத்தி மீளாய்வு கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது ஒராண்டுக்குள் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகள் விபரங்கள் காட்சிப்படுத்தப்பட்டதோடு, அவற்றின் தொகுப்பும் உறுப்பினர்களிடம் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் குறித்த ஓராண்டுக் கால அபிவிருத்திப் பணிகளில் பல முறைகேடுகள் ஊழல்கள் இருந்தமை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே நாம் இதனை சுட்டிக்காட்ட முற்பட்ட போது தவிசாளர் அனுமதி வழங்கவில்லை.

சபையில் தான் இது தொடர்பில் பேச முடியும். இந்த இடத்தில் பேசுவதற்கு அனுமதியில்லை என்றார் இது கண்டிக்கதக்க விடயம். ஒரு விடயம் அது பேசப்படுகின்ற போது கருத்துக் கூற முடியும். அதனை விடுத்து பிரிதொரு இடத்தில் பேசுவது என்பது பொருத்தமற்றது எனவும் தெரிவித்துள்ளனர்.

கரைச்சி பிரதேச சபையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கம்பெரலிய திட்டத்தின் கீழ் புனரமைப்புச் செய்யப்படுகின்ற வீதி அபிவிருத்தியில் ஊழல்களும், முறைகேடுகளும் இடம்பெற்று வருகின்றன.

இதனை பல தடவைகள் சபையில் எடுத்துக் கூறியும் பார்கின்றோம் என பதிலளிக்கும் தவிசாளர் பின்னர் அவற்றை கண்டுகொள்வதில்லை. அபிவிருத்தி திட்ட மதிப்பீட்டில் குறிப்பிட்டமைக்கு அமைவாக வீதி அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படவில்லை. தரமற்ற அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் கட்சி சார்ந்து அபிவிருத்திப் பணிகள் இடம்பெறுகின்றன. தமிழரசு கட்சியினர் தோற்றுப்போன வட்டாரங்களில் தோல்வி அடைந்து தங்களது கட்சி உறுப்பினர்களை கொண்டு பிரதேச சபையின் அபிவிருத்திப் பணிகளை தவிசாளர் முன்னெடுக்கின்றார்.

அத்தோடு தாங்கள் வெற்றிப் பெற்ற வட்டாரங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடுகளும், அதிகளவான அபிவிருத்திப் பணிகளும் இடம்பெறுகின்றன. ஆளும் தரப்பு உறுப்பினர்களை ஒரு விதமாகவும் எதிர்தரப்பு உறுப்பினர்களை மாற்றாந்தாய் மனப்பாங்குடனும் தவிசாளர் நடத்துகின்றார் எனவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Related posts

அரசாங்கம் மக்கள் நினைத்தவாறு செயல்படுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Maash

பேருந்து மற்றும் இராணுவ லொரி நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒருவர் பலி .

Maash

வைத்தியர் இல்லாத சிலாவத்துறை வைத்தியசாலை! இல்லையென்றால் சாகும்வரை உண்ணாவிரதம்

wpengine