பிரதான செய்திகள்

மினி சூறாவளியால் பொலிவேரியன் சிட்டியில் 51 வீடுகள் சேதம்; 214 பேர் பாதிப்பு

(அஸ்லம் எஸ்.மௌலானா, யூ.கே.காலிதீன், எம்.வை.அமீர்)
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக சாய்ந்தமருது பொலிவேரியன் சிட்டியில் 51 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 214 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்திலும் உறவினர்களின் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளனர்.

அத்துடன் எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தின் வகுப்பறை கட்டிடமொன்றின் கூரைகளும் சேதமடைந்துள்ளன. இதனால் நோன்பு கால விடுமுறையின் பின்னர் இன்று முஸ்லிம் பாடசாலைகள் திறக்கப்பட்டபோதிலும் இப்பாடசாலை இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்பின் அறிவுறுத்தலின் பேரில் மாநகர சபையின் ஆணையாளர் ஜே.லியாகத் அலி, பொறியியலாளர் ர்.சர்வானந்தன், சுகாதாரப் பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.அஹ்சன், கல்முனை மாநகர முதல்வரின் பிரத்தியேக உத்தியோகத்தர் ஏ.ஆர்.எம்.முஜாஹித் உள்ளிட்டோர் இப்பகுதிக்கு விஜயம் செய்து, பாதிப்புகள் தொடர்பில் ஆராய்ந்தனர். இதன்போது சேதமடைந்த வீடுகளை உடனடியாக துப்பரவு செய்தல் மற்றும் புனரமைப்புக்கான ஏற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தினர்.

அத்துடன் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.கே.எஸ்.ஜெயநதி, கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஆர்.எம்.அஸீம் எம்.ஏ.றபீக், எம்.ஐ.அஸீஸ் ஆகியோரும் இங்கு வருகை தந்து, பாதிக்கப்பட்ட மக்களின் சேம நலன்கள் தொடர்பில் அவசர நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

அதேவேளை கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தூஷித்த வணசிங்கவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பொலிவேரியன் உட்பட கல்முனை மாநகர பிரதேசங்களில் மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகள் குறித்து எடுத்துரைத்தார்.

இதன்போது பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் அவசர உதவியாக பத்தாயிரம் ரூபா பணத்தையும் உலர் உணவையும் வழங்க உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் சேத மதிப்பீட்டின் பின்னர் உரிய நஷ்டஈடு வழங்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் தூஷித்த வணசிங்க, கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்களிடம் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்னால் அமைச்சர் றிஷாட் மீண்டும் 13ஆம் திகதி வரை

wpengine

பயணத்தடை தொடர்பில் மீண்டும் புதிய நடைமுறை அத்தியாவசிய தேவைகள் எவை

wpengine

நீங்கள் ஒரு பட்டதாரியா? விண்ணப்பம் 31ஆம் திகதி இறுதி

wpengine