கட்டுரைகள்பிரதான செய்திகள்

“மாகாணசபை, ஜனாசாவை புதைத்தல்” போன்றவற்றை அமைச்சர் சரத் வீரசேகர எதிர்ப்பது ஏன் ? இது அவரது அடிப்படைகொள்கையா ?

ஒவ்வொரு அரசாங்கத்திலும் ஆட்சித் தலைவருக்கு நெருக்கமான சில எடுபிடி அமைச்சர்கள் இருப்பது வழமை. சர்ச்சைக்குரிய விடயங்கள் அல்லது ஆட்சி தலைவரின் எண்ணங்களை இவ்வாறானவர்களே வெளிப்படுத்துவார்கள்.

இன்னும் சிலர் ஆட்சி தலைவருக்கு நெருக்கத்தை ஏற்படுத்தி தனது அரசியல் உச்சத்தை அடைவதற்காக ஆட்சியாளரின் மனோநிலைக்கு ஏற்ப கருத்து கூறுவார்கள். அந்தவகையில் அமைச்சர் சரத் வீரசேகர அவர்கள், அவரது தனிப்பட்ட சுயநல அரசியல் முன்னேற்றத்திற்காக சிறுபான்மை சமூகத்திற்கெதிரான விசம பிரச்சாரத்தினை முன்னெடுக்கின்றார்.  

கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று இராஜாங்க அமைச்சராக பதவியேற்றதிலிருந்து இந்த நாட்டுக்கு மாகாணசபை முறைமை தேவையில்லை என்றும், மத்திய அரசாங்கத்தின் கீழேயே அனைத்து அதிகாரங்களும் நிருவகிக்கப்படல் வேண்டுமென்றும் அடிக்கடி கூறிவந்தார்.

இந்த கருத்து சரத் வீரசேகரவின் சொந்த கருத்தல்ல. மாறாக இது ஜனாதிபதியின் உள்ளத்தில் இருப்பதனை சரத் வீரசேகர வெளிப்படுத்திவருகின்றார் என்பது பின்னாட்களில் தெரிந்தது.

அதாவது இவ்வாறு “மாகாணசபை முறைமை அவசியமில்லை” என்று சர்ச்சையை ஏற்படுத்தியதன் காரணமாக ஏனைய அமைச்சர்களைவிட, இவர் ஜனாதிபதியிடம் மிகவும் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார்.

அதன் வெளிப்பாடுதான் ராஜாங்க அமைச்சராக இருந்த சரத் வீரசேகர அவர்கள், மிக விரைவாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதியினால் பதவி உயர்த்தப்பட்டார்.

அதுபோல் இன்று முஸ்லிம்களின் ஜனாஸா புதைக்கப்படல் வேண்டுமென்ற கோரிக்கைக்கு எதிராக கருத்து கூறிவருகின்றார்.

அதாவது, நிபுணர் குழுவின் அறிக்கைக்கு அமைவாகவே ஜனாஸா எரிப்பு பற்றிய இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படுமென்று ஜனாதிபதி கூறியபோது, தான் எந்தவித கருத்தினையும் கூறாமல் அடக்கிவாசித்த சரத் வீரசேகர அவர்கள், இன்று நிபுணர் குழுவினர் முஸ்லிம்களுக்கு சாதகமான அறிக்கையை வழங்கியுள்ளார்கள் என்ற செய்தி வெளியானதன்பின்பு ஜனாஸா எரிப்பினை நியாயப்படுத்துவதானது, இதுவும் சரத் வீரசேகரவின் சொந்த கருத்தாக இருக்க முடியாது.

கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றம் சென்றபோது, இவரது வெற்றிக்கு முஸ்லிம்களின் வாக்குகளும் பங்களிப்பு செய்தது.

மாகாணசபை முறைமையை எதிர்த்து கருத்து தெரிவித்ததன் விளைவாக அமைச்சராக முழு அதிகாரத்துடன் உயர்த்தப்பட்ட இவர், இன்று ஜனாஸா விடயத்தில் முஸ்லிம்களுக்கெதிராக கருத்து கூறியுள்ளதன் காரணமாக இன்னும் என்ன பதவி உயர்வினை அடையப்போகின்றார் என்பதனை எதிர்காலம்தான் பதில் கூறும்.

இவ்வாறு தனது சுயநல அரசியலுக்காக தமிழ், முஸ்லிம் ஆகிய சிறுபான்மையின மக்களின் மனங்கள் புண்படுகின்ற விதமாக பெரும்பான்மை மக்களை சூடாக்குகின்றவர்கள் இருக்கும் வரைக்கும் இந்த நாட்டில் இன ஐக்கியம், சமாதானம், சகோதரத்துவம் என்பதெல்லாம் காணல்நீராகவே இருக்கும்.

முகம்மத் இக்பால் ,சாய்ந்தமருது   

Related posts

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்டின் முயற்சியில் 7 கோடி ரூபா செலவில் அமைக்கப்படும் பாடசாலைக் கட்டிடம்

Editor

குருணாகல் மாவட்ட சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர் அ.இ.ம.கா உடன் இணைவு…

wpengine

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் துல்ஸான் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையை விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது.

wpengine