பாராளுமன்றத்தில் நடைபெற்ற மாகாணசபை தேர்தல் திருத்த சட்டமூல வாக்கெடுப்பு தொடர்பில், அன்றைய தினம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் ஆலோசகர் ருஸ்தி ஹபீபின் கருத்துகளை அடிப்படையாக வைத்து அமைச்சரின் ஊடகப்பிரிவில் பணியாற்றும் சுகைப் எம்.காசிம், 25ஆம் திகதி நவமணியில் கட்டுரையொன்றை எழுதியிருந்தார்.
அதில் முஸ்லிம்களுக்கு ஓரளவேணும் சாதகமாக அமையக்கூடிய நான்கு அம்சக் கோரிக்கைகளை எழுதியது, திருத்தியது, அது சட்டமூலமாக அங்கீகரிக்கப்படுவதற்கு பாடுபட்டது எல்லாமே சட்டத்தரணி ருஸ்தி ஹபீபின் ஆலோசனையும், அமைச்சர் றிஷாதின் விடாப்பிடியான அழுத்தமுமே காரணமாக இருந்தது என்றும், ஏனைய முஸ்லிம், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெறும் பார்வையாளர்களாக இருந்தார்கள் என்றும் ஒரு தோற்றப்பாட்டை உருவாக்குவதற்கு முயற்சித்துள்ளமை அதன்மூலம் தெளிவாகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை 22ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற அஷ்ரப் சிஹாப்தீனின் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பிரதியமைச்சர் அமீர் அலி, அமைச்சர் றிஷாத் பதியுதீனை ரவூப் ஹக்கீம் பிரதமரிடம் காட்டிக்கொடுத்துள்ளதாக தெரிவித்திருந்தார். இதனால் றிஷாத் பதியுதீனுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுகின்ற நிலை உருவாகியதாகவும் கூறியிருந்தார்.
பிரதியமைச்சர் அமீர் அலி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளர். அறிக்கையை வழங்கியதாக கூறும் சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் அமைச்சரின் சட்ட ஆலோசகர். அதனை எழுதியவர் அமைச்சரின் ஊடகப்பிரிவில் பணியாற்றுபவர். எப்படியாவது அமைச்சரை திருப்திப்படுத்துகின்ற வேலையைச் செய்வதே அவர்களின் வாடிக்கை. அதை அவர்கள் செவ்வனே செய்துமுடித்துள்ளார்கள்.
மாகாணசபை தேர்தல் திருத்த சட்டமூலம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தனது பேஸ்புக் பக்கத்தில் நடுநிலையான கருத்தொன்றை பதிவுசெய்திருந்தார். அதாவது அமைச்சர் ரவூப் ஹக்கீமும் இந்த விடயத்தில் இறுதிவரைக்கும் ஒத்துழைப்பு வழங்கினார். நாங்கள் இணைந்து செயற்பட்டமையினால்தான் இந்த விடயத்தில் பிரதமர் தனது நிலைப்பாட்டை மாற்றி சட்டத்திருத்தத்துக்கு சம்மதித்தார் என்கிறார்.
அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமுடன் தான் முதலில் வாக்குவாதப்பட்டார். கடுமையான தொனியில் இடம்பெற்ற இந்த வாக்குவாதமானது, அமைச்சர் பழனி திகாம்பரத்தின் முன்னிலையில்தான் நடைபெற்றது.
அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், றிஷாத் பதியுதீன், பழனி திகாம்பரம், இராஜாங்க அமைச்சர்களான இராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பிரதியமைச்சர்களான பைசால் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான திலகராஜ், அரந்விந்த்குமார், எம்.ஐ.எம். மன்சூர், அலிசாஹிர் மௌலானா, எம்.எஸ். தௌபீக், அப்துல்லாஹ் மஃரூப்,வேலுகுமார் ஆகியோர் மாகாணசபை தேர்தல் திருத்த சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிப்பது தொடர்பில் கலந்துரையாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது, அமைச்சர் பழனி திகாம்பரத்துக்கு அரசாங்கத்திலுள்ள முக்கிய அமைச்சர் ஒருவர் தொலைபேசியூடாக தொடர்புகொண்டு எங்கிருக்கின்றீர்கள்? அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் சேர்ந்துகொண்டு அரசாங்கத்தை இல்லாமலாக்க நினைக்கின்றீர்களா என்று மிரட்டும் தொனியில் கேட்டுள்ளார். இதற்கு அமைச்சர் பழனி திகாம்பரமே சாட்சியாக உள்ளார்.
பிரதமர் சார்பில் பலரிடமிருந்து தூதுகள் வந்தபோதும், எவ்விதமான அழுத்தங்களுக்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீமோ அல்லது மனோ கணேசன், திகாம்பரம், ஹிஸ்புல்லாஹ், றிஷாத் பதியுதீன் உள்ளிட்ட யாரும் தலைசாய்க்கவில்லை.
விவாதங்கள் இப்படி சூடுபிடித்துக்கொண்டிருந்த நிலையில், ரவூப் ஹக்கீமின் பாராளுமன்ற அறைக்குள் வந்த பாராளுமன்ற உறுப்பினர்களான ஜயம்பதி விக்கிரமரத்ன மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர், அமைச்சர் ரவூப் ஹக்கீமை பிரதமர் உடனடியாக சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்ததாக கூறினார்கள். அவரது அழைப்பையேற்று ரவூப் ஹக்கீமும் பிரதமரை சந்திப்பதற்கு சென்றார்.
ஆனால், சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் தான் மாத்திரமே இவற்றையெல்லாம் செய்ததாகவும், அவர் இல்லாவிட்டால் அங்கு எதுவும் நடந்திருக்காது என்பதுபோல, பிரதமருக்கு ஒருபடி மேலே சென்று அறிக்கை விட்டிருப்பதானது அங்கிருந்த தமிழ்,முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை மலினப்படுத்தும் ஒரு செயலாகவே பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர்களால் சாதிக்கமுடியாதவற்றை தான் சாதித்துள்ளதாக காட்டுவது எந்தளவுக்கு நியாயம் என்று புரியவில்லை.
ஒரு சாதாரண சட்டத்தரணியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எனும் அரசியல் ஜாம்பவான் அங்கீகாரம் வழங்கினார் என்றால் அது எத்தனை அபத்தமான விடயம். இன்னும் சொல்லப்போனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேரம்பேசும் சக்தியும், சமூகநலன்கருதி இணைந்து செயற்பட்ட சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒற்றுமையுமே இந்த நான்கு அம்ச கோரிக்கை அங்கீகாரத்துக்கான காரணமாகும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பல்டியடித்தாக கூறுகின்ற இவர், தனது கொள்கையை விட்டுக்கொடுக்காமல் சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்திருந்தால், அடுத்த நிமிடமே அமைச்சர் றிஷாத் பதியுதீனும் அவரின் கட்சியும் முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்குரலாக முத்திரை குத்தப்பட்டிருக்குமே. அவற்றை ஏன் செய்யவில்லை என்பதுதான் கேள்வி. அப்படி செய்திருந்தால் இப்படி மலினமான அரசியல் அறிக்கைகள் விடவேண்டிய எந்த தேவையும் வந்திருக்காது.
இயாஸ்தீன் எம். இத்ரீஸ்