எம்.றொசாந்த் , வி. நிதர்ஷன்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட கடும் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக, நல்லூர் கந்தசுவாமி கோவிலை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழிபட இருந்த நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இன்று (20) காலை 9.30 மணியளவில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலுக்குச் சென்ற பிரதமர், அங்கு வழிபட்டில் ஈடுபட்டார்.
முன்னதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் விஜயத்தை முன்னிட்டு, நல்லூர் கோவில் சூழலில் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டதுடன், வீதிகளும் மூடப்பட்டிருந்தன.
கோவிலுக்குச் செல்லும் பிரதான வீதிகளான பருத்தித்துறை வீதி, கோவில் வீதி என்பன பொலிஸாரால் மூடப்பட்டு, மாற்றுப்பாதை ஊடாக பொதுமக்கள் அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில், நல்லூருக்கான பிரதமரின் விஜயம் இரத்து செய்யப்பட்டதை அடுத்து பாதுகாப்புத் தரப்பினர் அங்கிருந்து விலகிச் சென்றனர்.

இதேவேளை, பிரதமரை வரவேற்கும் முகமாக யாழில் கட்டப்பட்டிருந்த பதாதைகளை கிழித்து, தீயிட்டு எரித்து தமது எதிர்ப்பையும் ஆற்றாமையையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வெளிப்படுத்தினர்.

மேலும், நல்லூர் கந்தசுவாமி கோவில் மற்றும் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்கள் முன்பாக பொலிஸ், இராணுவம் மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
