மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பேசாலை கிராமத்தில் மீனவர்களுக்கு, ஒரு தொகுதி மீன் பிடி வலைகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த மீனவர்கள் தெப்பத்தை பயன்படுத்தி மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களின் நலனை கருத்தில் கொண்டு வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.பிறிமூஸ் சிறாய்வா தனது பன்முகப்படுத்தப்பட்ட பாதீட்டு நிதியில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தொகுதி வலைகளை இவ்வாறு வழங்கிவைத்தார்.
குறித்த பகுதியிலுள்ள, மீனவர்களில் முதற் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 80 மீனவர்களுக்கே இவ்வாறு வலைத்தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், இன்று வழங்கப்படாத ஏனைய மீனவர்களுக்கு இரண்டாவது கட்டமாக வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, குறித்த நிகழ்வில் பேசாலை பங்குத்தந்தை அருட்தந்தை செபமாலை அடிகளார்,மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மாட்டின் டயேஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.