மன்னார் தீவு பகுதிகளில் ஏற்படும் வெள்ள அனர்த்தம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலாளர் திரு. க.கனகேஸ்வரன் தலைமையில் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஒருங்கிணைப்பில் 6.2.2025 அன்று நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், மன்னார் அனர்த்த முகாமத்துவ உதவி பணிப்பாளர், மேலும் தொடர்புபட்ட திணைக்களங்களின் பொறியியளாளர்கள், மன்னார் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் ஏனைய பொறியியலாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.
குறித்த கலந்துரையாடலில் வெள்ள அனர்த்தம் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் இந்த வெள்ள அனர்த்தம் ஏற்படுவதற்கான காரணங்களை ஆராய்வதுடன் அதை குறைப்பதற்கான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
1. மன்னார் தீவுப் பகுதிகளில் அதிகளவு வெள்ளத்தினால் பாதிக்கப்படுகின்ற பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டு குறித்த பிரதேசங்களுக்கான சமவுயரக் கோட்டு வரைபடம் தயாரித்தல் அதற்கமைய நீரியல் ஆய்வு மேற்கொள்ளுதல் இதன் அடிப்படையில் வடிகாலமைப்பு அமைத்தல் தொடர்பாக தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது.
2. ஏற்கனவே தீவுப் பகுதியில் காணப்பட்ட சிறு குளங்கள், குட்டைகள் மண்ணிறப்பப்பட்டு அடாத்தாக பிடிக்கப்பட்டு வருவதால் அவை அழிவடைந்த நிலையில் காணப்படுகின்றன. எனவே அவைகளை புதுப்பிப்பதற்காக கமநல அபிவிருத்தி திணைக்களம் குறித்த நீர்நிலைகளை பராமரிக்க வேண்டும் எனவும் அதற்கான எல்லைகள் இடப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது இதன் மூலம் வெள்ள அனர்த்தத்தை குறைப்பதுடன் வறட்சியையும் தாங்கக்கூடிய நிலைக்கு கொண்டு வரலாம் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
3. மேலும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் யாவும் அனர்த்த ஆபத்தை அடிப்படையாகக் கொண்டே மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் குறித்த அபிவிருத்தி திட்டங்களின் போது சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் ஆலோசணைக்கு ஏற்பவே மேற்கொள்ளுதல் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

