பிரதான செய்திகள்

மக்களை ஏமாற்றுகின்ற செயற்பாடுகளை அரசாங்கம் செய்யக்கூடாது

  • அரசாங்கம் அறிவிக்கும் நிர்ணய விலையில் பொருட்களை விற்பனை செய்வதற்கான நடைமுறையினை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மக்களை ஏமாற்றுகின்ற செயற்பாடுகளை அரசாங்கம் செய்யக்கூடாது, மக்கள் தற்போதைய அரசாங்கம் மீது நம்பிக்கை இன்றி உள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளார். 

மன்னாரில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் அவசர கால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ள அதே நேரத்தில் அவசரக்கால சட்டத்தின் ஊடாக முழு அதிகாரங்களையும் பெற்றுக்கொண்ட ஜனாதிபதி அவசர கால சட்டத்தை கோவிட் தொற்றை நீக்கும் சாட்டாக வைத்துக் கொண்டு கையில் எடுத்துள்ளனர்.

இராணுவத்தினருடைய அதிகாரங்களை இராணுவத்திற்கு வழங்கி இப்போது உள்ள போராட்டங்கள் ஜனநாயக ரீதியாக இடம்பெறுகின்ற போதும், போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்களைக் கைது செய்வதற்கான ஒரு அத்திவாரமாக இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஜனநாயக நாடு எனக் கூறிக் கொண்டு ஒரு சர்வாதிகார ஆட்சியை நடத்துவதற்கான அத்திவாரத்தை இந்த சட்டத்தின் ஊடாக ஜனாதிபதி நிரூபித்துள்ளார்.

அண்மைக்காலமாக இந்த சட்டத்தின் ஊடாக ஓய்வு பெற்ற இராணுவ தளபதியைக் குறித்த குழுவிற்கு ஜனாதிபதி நியமித்துள்ளார்.

பொருட்களின் விலையை நிர்ணயம் செய்கின்ற சட்டம் உள்ளது. இந்த சட்டங்களை வழுவாக்காமல் அவசர கால சட்டத்தை அரசாங்கம் கையில் எடுத்ததன் காரணம் ஜனநாயக போராட்டங்களை மழுங்கடிப்பதற்கான திட்டமாக அமைந்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை பார்க்கிலும் அவசரக்கால சட்டம் அன்றாடம் குரல் கொடுக்கின்ற எமது மக்களின் குரல்வளையை நசுக்குகின்ற ஒரு சட்டமாக அமைந்துள்ளது.

எனவே மக்களைப் பாதிப்புக்கு உள்ளாக்குகின்ற அவசர காலச்சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும். ஜனநாயக நாட்டில் மக்கள் சுதந்திரமாகச் செயல்பட வழி முறைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

அவசரக்கால சட்டம் மிக மோசமானது. ஜனநாயக ரீதியில் போராடுகிறவர்களைக் கைது செய்வதற்கான சட்டமாகவே இச்சட்டம் எதிர் காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும்.

மேலும் சதொச மற்றும் விற்பனை நிலையங்களில் பொருட்களை மலிவு விலையில் கொள்வனவு செய்ய முடியும் என்று அரசாங்கம் கூறுகிறது.

வெளிப்படையாக ஊடகங்கள் மூலமாக அரசாங்கம் அறியப்படுத்தி உள்ள போதும் உரிய முறையில் நடைமுறையில் இல்லை.

மக்கள் ஏமாறும் நிலை காணப்படுகின்றது. சதொசவில் 130 ரூபாவிற்கு சீனியைப் பெற்றுக்கொள்ள முடியும் என ஏற்கனவே அறிவித்த போதும், அதனை உரிய முறையில் மக்கள் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சீனி உரிய முறையில் மக்களுக்குப் பகிர்ந்து வழங்கப்படவில்லை. வன்னி மாவட்டத்தில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் மக்கள் உரிய முறையில் சதொச ஊடாக சீனியைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்பட்டுள்ளது.

தற்போது அரசாங்கம் சீனி உட்பட அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றிற்கு நிர்ணய விலையை அமுல் படுத்தியுள்ளனர்.

எனினும் நிர்ணய விலைக்குப் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படுவது இல்லை. அரசாங்கம் அறிவிக்கும் நிர்ணய விலையில் பொருட்களை விற்பனை செய்வதற்கான நடைமுறை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும்.

மக்களை ஏமாற்றுகின்ற செயற்பாடுகளை அரசாங்கம் செய்யக்கூடாது. மக்கள் தற்போதைய அரசாங்கம் மீது நம்பிக்கை இன்றி உள்ளனர்.

எனவே அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள விலை நிர்ணயத்தை மக்கள் உரிய முறையில் பயனடைய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

துணை சுகாதார மந்திரி இராஜுக்கு நடந்த கொரோனா வைரஸ் பரிசோதனை

wpengine

மத சுதந்திரத்தை முஸ்லிம்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது- கண்டி முதல்­வர்

wpengine

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை, நாளை திறந்து வைக்கவிருந்த நிலையில் துணைவேந்தருக்கு திடீர் மாரடைப்பு!

Editor