பிரதான செய்திகள்

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்திலிருந்து ஊழல் மோசடிகள்

மத்திய வங்கியில், மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்திலிருந்து ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கண்டறிவதற்காக இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

1000 பில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என தெரிவிக்கப்படும் மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி 2002, 2003ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியிலேயே இடம்பெற்றுள்ளதாக மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை கைது செய்வதற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்ற உத்தரவின்படி அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு இலங்கை அரசாங்கம் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.

எனினும், சிங்கப்பூர் அரசாங்கம் இதுவரையில் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் இந்த கலந்துரையாடலின்போது தெரிவிக்கப்பட்டது.

இந்த பிணைமுறி மோசடி தொடர்பாக தற்போது சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக இதுவரையில் குற்றப்பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படாதுள்ளமையால் அவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரங்களை விரைவாக சமர்ப்பிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான முறைகேடுகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு பொய் சாட்சியளித்தமை தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் மற்றும் இந்த விசாரணையுடன் தொடர்புடைய சாட்சிகளை அழித்த குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் இதுவரை தாமதமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர்களுக்கெதிராக விரைவாக வழக்கு தாக்கல் செய்ய வேண்டியதன் அவசியம் பற்றியும் வலியுறுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மத்திய வங்கி கொள்ளை தொடர்பில் வகை கூற வேண்டியவர்களுக்குரிய விசாரணைகளை நிறைவு செய்து, குறிப்பிட்ட காலப்பகுதியில் அவர்களுக்கெதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதவேளை இந்த வழக்குகள் தொடர்பான சட்ட திருத்தத்தில் நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவினால் இதற்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளமை பற்றியும் இந்த கலந்துரையாடலின்போது தெரியவந்துள்ளது.

மேலும் இந்த பாரிய நிதி மோசடி பற்றி சரியான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவினால் தடயவியல் கணக்காய்வொன்று மேற்கொள்ளப்பட வேண்டுமென்று கடந்த 18ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டிருந்தபோதும், ஒருவருட காலமாகியும் அந்த கணக்காய்வு இதுவரையில் மேற்கொள்ளப்படாமை பாரிய தவறாகும் என்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.

பிரதிவாதிகள் பயன்படுத்திய தொலைபேசிகளின் குரல் பதிவுகளில் இந்த விசாரணை நடவடிக்கைகளுடன் தொடர்புடைய முக்கிய பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளன என்றும் அந்த குரல் பதிவுகள் நிபுணர்களினால் நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி கண்டறிவதற்காக இதுவரையில் வெளிநாட்டுக்கு அனுப்பப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேற்படி விடயங்களின்படி மத்திய வங்கி பிணைமுறி நிகழ்வுடன் தொடர்புடைய விசாரணைகளை துரிதமாக மேற்கொள்வதற்கு முடியாத வகையில் குறித்த நிறுவனங்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அனைத்து விடயங்களையும் கவனத்திற்கொண்டு, இந்த விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கும் உரிய காலப்பகுதியில் வழக்குத்தாக்கல் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் தாமதமின்றி தடவியல் கணக்காய்வை ஆரம்பிப்பதற்கும் முன்னுரிமையளிக்கப்பட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாடு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. தாய் நாட்டுக்காகவே போராடுகின்றோம்”

wpengine

மூதூர் பகுதியில் முஸ்லிம்,தமிழர் மீது அதிகாரிகள் தாக்குதல்

wpengine

விசாரணை இல்லாமல் அனுர சேனாநாயக்க

wpengine