அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

போதைவஸ்துக்களை அரசாங்கமே தனது சொந்த மக்களிற்கு விநியோகிக்கும் மிகமோசமான நிலை.

போதைவஸ்துக்களை அரசாங்கமே தனது சொந்த மக்களிற்கு விநியோகிக்கும் மிகமோசமான நிலைமை இந்த நாட்டில் நிலவுவதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார். 

நேற்றையதினம்பாராளுமன்றத்தில் நடைபெற்ற பாதீட்டு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

போதைவஸ்து பாவனை என்பது நாடு முழுவதிலும் காணப்பட்டாலும் போருக்கு பின்னரான காலப்பகுதியில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மிகவும் அதிகமாக காணப்படுகின்றது. 

இது போரிற்கு பின்னரான சமூகவிளைவாகவே நான் பார்க்கின்றேன். 

அந்த வகையில் இந்த போதைவஸ்த்து பிரச்சனையை கட்டுப்படுத்தவேண்டுமாக இருந்தால் நாட்டினுடைய சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படல் வேண்டும். 

சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படாமல் போதைவஸ்த்து பாவனையை கட்டுப்படுத்த முடியாது. 

தடுப்பதற்கான சட்டங்கள் இருந்தபோதபோதிலும் அதனை கடந்த காலங்களில் அரசாங்கங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை என்பதை மறுக்கமுடியாது.

போர் முடிவடைந்த பின்னர் குறிப்பாக 2010 ம் ஆண்டில் பாடசாலைகளில் உயர்தரத்தில் கல்விகற்கின்ற மாணவர்களுக்கு அரச இயந்திரத்தில் இருந்த படையினர் போதைவஸ்த்துக்களை விநியோகித்தார்கள் என்பது உண்மை.

அதன் தொடர்ச்சியான நிலைமையை தற்போதைய அரசாங்கமும் தொடர்ந்து செய்யாது என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. 

அந்த வகையிலே போதைவஸ்த்துக்களை அரசாங்கமே தனது மக்களிற்கு விநியோகிக்கும் நிலைமையை இந்த அரசு தொடரக்கூடாது என்பது எனது வேண்டுகோளாகும்.

ஆகவே இருக்கின்ற சட்டங்களை இறுக்கமாக நடைமுறைப்படுத்த வேண்டும். மதுப்பாவனைக்கான வயதுக்கட்டுப்பாடு கட்டாயமாக பின்பற்றப்படல் வேண்டும். 

எமது பிரதேசங்களில் மக்கள் தொகைக்கு மேலதிகமாக மதுபான நிலையங்கள் காணப்படுகின்றன. பொது இடங்களில் மதுபாவனை நடைபெறுகின்றது. 

சட்டவிரோத போதைப்பாவனையை கட்டுப்படுத்தகூடிய சட்ட அதிகாரம் பொலிசாரிடம் இருக்கின்றது. அதனை அவர்கள் பயன்படுத்துகின்றார்களா என்றால் இல்லை. இதனை நான் பகிரங்கமாக சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் மதுப்பாவனை போதைப்பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ புனர்வாழ்வு நிலையங்கள் எமது மாகாண சுகாதார அமைச்சினால் அமைக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரி கிளிநொச்சியில் தர்மபுரம் , முல்லைத்தீவில் ஒட்டுசுட்டான் , வவுனியாவில் பூவரசங்குளம்,  மன்னாரில் அடம்பன் ஆகிய இடங்களில் மருத்துவ புனர்வாழ்வு நிலையங்கள் காணப்படுகின்றது. 

எனினும் அவை சீராக இயங்குவதற்கான ஆளணிப்பற்றாக்குறை காணப்படுகின்றது. 

எனவே சுகாதார அமைச்சர் அதற்கான தீர்வினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

Related posts

நோன்பு குறித்த சுற்றறிக்கைக்கு முஸ்லிம் எம்.பிக்களின் நிலைப்பாடு என்ன?

Editor

லக்க்ஷபான நீர்தேக்கத்தின் வான் திறந்து! களனி ஆற்றுபகுதி மக்கள் கவனம்

wpengine

சுலைமான் சகீப் கொலை! 8 வருட ஊழியன் பிரதான சூத்திரதாரி

wpengine