பிரதான செய்திகள்

பொது பல சேனாவை கட்டுப்படுத்துங்கள்! அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கையில் சிறுபான்மை மதங்கள் மற்றும் மத சுதந்திரத்திற்கு எதிராக குற்றங்களை மேற்கொள்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கையை கையாளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர் மட்டத்தினரை  கேட்டுக் கொண்டுள்ள அமெரிக்கா , பொதுபலசேனா  தொடர்ந்தும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தையும் சிறுபான்மையினருக்கு எதிரான பகைமை உணர்வையும் ஏற்படுத்துவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான 2015 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின்  அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

இலங்கையின் அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள மத உரிமைகள் அனைத்து பிரஜைகளுக்கும் சமமாக கிடைக்கப்பெற வேண்டும். ஆனால் கடந்த காலங்களில் துரதிஷ்டவசமாக இலங்கையில் சிறுபான்மை இன மக்களின் மத வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

பல சந்தர்ப்பங்களில் இவ்வாறான தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை நடத்துவதில் எதிர்மறையான சூழலே காணப்பட்டது.

பல தரப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 2014 ஆம் ஆண்டில் மாத்திரம் 87 சிறுபான்மையின மத ஸ்தலங்கள் தாக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான மத ரீதியான அடக்குமுறைகள் மற்றும் தாக்குதல்களை ஏற்றுக் கொள்ள முடியாது.

பொதுபலசேனாவினர் தொடர்ந்தும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக செயற்படுகின்றனர்.

2015 ஆம் ஆண்டில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு கருத்துக்கள் உள்ளிட்ட மத ரீதியான அச்சுறுத்தல்கள் தொடர்பில் 82 சம்பவங்கள் இலங்கையின் முஸ்லிம்களுக்கான செயலகத்தினால் அறிக்கையிடப்பட்டுள்ளன.

பல சந்தர்ப்பங்களில் பௌத்த பிக்குகள் நாட்டின் ஆட்சியாளர்களின் பாதுகாப்புடன் செயற்பட்டு மத சுதந்திரத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.

எனவே மத சுதந்திரம் மற்றும் உரிமைகள் தொடர்பில் அமெரிக்காவின் கொள்கை தெளிவாக உள்ளது.இலங்கையின் மத சுதந்திரத்திற்கும் உரிமைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் முன்வர வேண்டும்.

சிறுபான்மை இன மக்களின் மத பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் .

நல்லிணக்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்க தூதரகம் இந்த விடயம் தொடர்பில் உள் நாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களுடனும் சர்வ மத தலைவர்களுடனும் இணைந்து செயற்படுகின்றது என்றும் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

நுால் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக அமைச்சர் ஹக்கீம் (படம்)

wpengine

ஆயுத கலாச்சாரம் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.

wpengine

அ.இ.ம.கா.கட்சியின் சுகாதார சேவைகள் ஒருங்கிணைப்பாளர் நியமனத்தை வழங்கிய அமைச்சர் றிஷாட்

wpengine