கட்டுரைகள்பிரதான செய்திகள்

புதிய அமைச்சர்கள் : மாறாத மாற்றம்..!

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.

இன்று புதிய அமைச்சர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருந்தனர். இதனை ஜனாதிபதி மாற்றமாகவும் குறிப்பிட்டுள்ளார். இதில் அப்படி என்ன மாற்றம் நிகழ்ந்துவிட்டது என்ற கேள்விக்கு சில விடைகள் இருந்தாலும், அது இக் காலத்துக்கு பொருத்தமான மாற்றமா என்பதற்கு யாரிடமும் தெளிவான பதிலிருக்காது.

தற்போதைய சூழ் நிலையில் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்த மாற்றம் நிகழ்ந்திருந்தால், அதுவே பொருத்தமான மாற்றமாக இருந்திருக்கும். குறைந்தது ஐ.தே.கவை வளைத்து போட்டிருக்கலாம். என்ன நடந்தாலும் பிரதமரை கூட விட மனமற்ற இவர்களோடு, எக் கட்சி தான் இணைந்துகொள்ளும். தற்போதும் மொட்டு கட்சிக்குள்ளேயே அமைச்சர்கள் பகிரப்பட்டுள்ளனர். தற்போதைய நியமணத்தில் ஒவ்வொரு துறைக்கும் பொருத்தமான நபர்களாவது தேடி பிடித்து உள் வாங்கப்பட்டிருந்தால் கூட, அது பெரிய மாற்றமாக இருந்திருக்கும். அப்படி கூட எதுவும் நடந்ததாக தெரியவில்லை. தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையிலான எவ்வித மாற்றமும் நடைபெறவில்லை என்பதை உறுதியாக குறிப்பிட முடியும்.

மாற்றம் ஏதும் நிகழ்ந்துள்ளதா என்றால், எப்போதே நிகழ்ந்திருக்க வேண்டிய சில மாற்றங்கள் நடைபெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது.

மாற்றம் – 01

இவ் அமைச்சர்களின் மாற்றத்தில் சிரேஸ்டமானவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாது, பல இளம் பா.உறுப்பினர்கள் அமைச்சர்களாகியுள்ளனர். இளம் பா.உறுப்பினர்களை நியமித்ததன் மூலம் துடிப்பான ஒரு செயற்பாட்டை ஜானாதிபதி எதிர்பார்க்கலாம். இதனை ஜனாதிபதி மாற்றமாக கருதினால், இத்தனை காலமும் சிரேஸ்டமானவர்களே நாட்டை அழித்துள்ளதாகவும் பொருள் எடுக்கலாம்.

சிரேஸ்டமானவர்கள் இவ் அரசோடு மிக நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள். இளம் பா.உறுப்பினர்கள் காற்று வீசும் பக்கம் சாய கூடியவர்கள். நாடு தற்போதிருக்கும் நிலையில் அரசு பெரும்பான்மையை தக்க வைப்பது மிக அவசியமானது. இதற்கு இளம் பா.உறுப்பினர்களை தக்க வைக்க வேண்டும். இளம் பா.உறுப்பினர்களுக்கு அமைச்சை கொடுத்தால், அவர்கள் அதனை பெரும் வரமாக கருதுவர். இளம் பா.உறுப்பினர்களை தக்க வைக்கும் சிந்தனையிலும் இச் செயற்பாடு நடந்ததாக கூறப்படுகிறது.

சிரேஸ்டமானவர்கள் உட்பட பல பா.உறுப்பினர்கள் அமைச்சை எடுத்து, தங்களது அரசியல் வாழ்வுக்கு ஆப்பு வைத்துகொள்ள விரும்பவில்லை. அமைதியாக ஒதுங்கி இருப்பதையே பொருத்தமாக கருதுகின்றனர். நீண்ட அரசியல் வரலாறு கொண்ட மஹிந்தானந்த இன்று மக்கள் முன் தலை காட்ட முடியாத நிலையில் உள்ளார். இதனை யாரும் விரும்ப போவதில்லை. இதுவரை அமைச்சை காணாத இளம் உறுப்பினர்களே பதவி ஆசையில் அமைச்சை ஓடிச் சென்று பொறுப்பெடுப்பர். பல பா.உறுப்பினர்கள் அமைச்சை ஏற்க மறுத்துள்ளமையை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாற்றம் – 02

2015ம் ஆண்டு நடைபெற்றிருந்த தேர்தலில் ராஜபக்ஸவினரின் தோல்விக்கு, அவர்கள் செய்த குடும்ப ஆட்சி பெரிய காரணமாக இருந்தது. 2015 இல் காணப்பட்டதை விட பல மடங்கு அதிகாரங்கள் இவ் ஆட்சியில் ராஜபக்ஸவினருக்கு வழங்கப்பட்டிருந்தன. இந் நிலையில் தற்போதைய அமைச்சரவையில் எந்த ராஜபக்ஸவினரும் அமைச்சர்களாக நியமிக்கப்படவில்லை. ஜனாதிபதியும், பிரதமரும் ராஜபக்ஸவினராக இருக்கையில், இதனை விட குடும்ப ஆட்சி தேவையா? தற்போதைய இக்கட்டான நிலையை சமாளிக்கும் தேகாரோக்கியத்துடன் பிரதமர் இருப்பதாக கூட தெரியவில்லை. இவ் விடயம் கூட பெரும் மாற்றம் போன்று வெளியில் காட்டப்பட்டாலும், அப்படி எதுவும் நடைபெறவில்லை என்பதே உண்மை.

இது ராஜபக்ஸவினருக்கு எதிரான மக்கள் எதிர்ப்பை சமாளிக்கும் சிந்தனையில் வரையப்பட்ட திட்டமாகவே நோக்கப்படுகிறது. அல்லாது போனால், ராஜபக்ஸவினரே இந்த நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டு சென்றுள்ளார்கள் என்பதை ஜனாதிபதி மறைமுகமாக கூற வருகிறாரோ தெரியவில்லை.

சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. தற்போதைய இக்கட்டான சூழ்நிலையை கையாளும் வகையிலான எம் மாற்றமும் நடந்தேறவில்லை என்பதே உண்மை. ஜனாதிபதியின் உரையில், அமைச்சர்கள் அமைச்சர்களுக்கான வரப்பிரசாதங்களை பயன்படுத்த கூடாது, அது இதுவென சில மாற்றங்களை குறிப்பிட்டிருந்தார். அவைகளாவது வாய் வார்த்தைகளாக இராது, செயல் வடிவங்களில் வரட்டும். இவைகள் கூட தற்போதைய இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க தேவையான மாற்றங்களல்ல. எதிர்காலத்தை வளம்பெறச்செய்ய தேவையான மாற்றங்களே!

Related posts

கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

wpengine

அரசு சரியான மருத்துவ உபகரணங்களை வழங்காமையேபேராதனை யுவதியின் மரணத்திற்கு காரணம்! -தாதியர் சங்க பொதுச் செயலாளர்-

Editor

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாட்டில் இஸ்லாமிய சொற்பொழிவு

wpengine