பிரதான செய்திகள்

பிரதேச செயலாளரின் அசமந்த போக்கு! அவசர அறிவுறுத்தல்களோ, வெள்ள நிவாரண ஏற்பாடுகளோ செய்யவில்லை

இத்தனை வருடங்களாக இடம்பெயர்ந்த மக்களுக்கு தற்போது வெள்ளம் ஏற்பட்டால் எங்கே போவது என்று அறிவுறுத்தல் வழங்க வேண்டுமா? என மன்னார் பிரதேச செயலாளர் ஊடகவியலாளர் ஒருவருக்கு அசட்டையாக வழங்கிய பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில நாட்களாக மன்னார் மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாழ் நில கிராமங்களான ஜீவபுரம், ஜிம்றோன் நகர் , சாந்திபுரம் ஆகிய கிராமங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன.

இந்த நிலையில் மக்கள் கடந்த சில நாட்களாக நீர் நிறந்த வீடுகளில் இடம்பெயர முடியாத நிலையில் வசித்து வருகின்றனர். வீடுகள், பாதைகள், முன்பள்ளிகளில் அதிகளவிலான நீர் தேங்கி காணப்படுகின்றபோதிலும் இது தொடர்பில் இதுவரையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் எந்த ஒரு அவசர அறிவுறுத்தல்களோ, வெள்ள நிவாரண ஏற்பாடுகளோ செய்யவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரிடம் ஊடகவியலாளர் ஒருவர் தொடர்பு கொண்டு வினவிய போது, இதுவரை மன்னார் பிரதேச செயலகத்தின் ஊடாக வெள்ளப் பாதிப்புக்கள் தொடர்பாக எந்த வித பதிவுகளும் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த ஊடகவியலாளர் மன்னார் பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொண்ட போது, இதுவரை எந்தவித பாதிப்புக்களும் பதிவு செய்யப்படவில்லை. மக்கள் இடம்பெயர்ந்தால் மாத்திரமே மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் என பிரதேச செயலாளரினால் தெரிவிக்கப்பட்டது.

பொது இடங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் எங்கே இடம் பெயர்ந்து வசிப்பது? வெள்ளப் பாதிப்பின் போது எவ்வாறு பதிவு செய்வது? என்பது தொடர்பாக தங்களுக்கு எந்தவித அறிவித்தல்களும் கிராம சேவகர்களினால் வழங்கப்படவில்லை என்ற மக்களின் கேள்வியை பிரதேச செயலாளரிடம் வினவிய போது இத்தனை வருடம் இடம் பெயர்ந்த மக்களுக்கு எங்கே போவது என்று அறிவுறுத்தல் வழங்க வேண்டுமா? என அசமந்தமாக பதிலளித்துள்ளார்.

அத்துடன் குறித்த பகுதிகளின் கிராம அலுவலரும் வெள்ள அனர்த்த நிவாரணம் தொடர்பில் அசமந்தமாக பதிலளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்கள் தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கும் நிலையில் தகவல் வந்த பின்னரே நடவடிக்கை மேற்கொள்ளலாம் என தெரிவிப்பது எந்த விதத்தில் நியாயமானது?

அதுவரையில் எமக்கு ஏற்படும் பாதிப்புக்களுக்கு யார் பொறுப்பு கூறுவது?வெள்ள நீர் புகுந்த வீடுகளுக்குள் எவ்வாறு வசிப்பது என அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் கவலையுடன் கேள்வியெழுப்பியுள்ளனர்.

Related posts

டெங்கு ஒழிப்பு சிறமதானத்தில் ஈடுபட்ட மன்னார் நகர பிரதேச செயலக ஊழியர்கள்

wpengine

சஜித் விலகல்! டளஸ்சுக்கு ஆதரவு

wpengine

விக்னேஸ்வரனை நம்பி வாக்களித்தவர்களின் நிலை என்ன? வரதராஜப் பெருமாள்

wpengine