பிரதான செய்திகள்

பஷீரின் நீக்கம் சரியானதா?

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை)

மு.காவின் தவிசாளராகவிருந்த பஷீர் சேகுதாவூத் நேற்று 04-02-2017ம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற மு.காவின் உயர்பீடக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் நீக்கப்பட்டுள்ளார்.முதலில் பஷீர் ஏன் நீக்கப்பட்டார்? என்ற வினாவிற்கான விடையை பெறுதல் அவசியமாகிறது.அண்மைக் காலமாக பஷீர் சேகுதாவூத் கட்சிக்குள் இடம்பெற்ற சில தவறுகளை பகிரங்கமாக ஊடகங்களில் வெளிப்படுத்தியிருந்தார்.இதனடிப்படையிலேயே அவர் தவிசாளர் பதவியிலிருந்தும் உயர் பீட உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

 

பஷீர் சேகுதாவூத் கூறுவது உண்மையாக இருந்தால் அவர் கட்சியை அபகீர்த்திக்கு உட்படுத்தவில்லை.கட்சியை தூய்மைப்படுத்தும் போராட்டத்தில் உள்ளார் எனக் கூறலாம்.அதே நேரம் அவர் கூறும் விடயங்கள் பொய்யாக இருக்குமாக இருந்தால் அவர் பொய்யான வதந்தியை கூறி மு.காவை மக்களிடையே செல்லாக் காசாக மாற்ற முற்பட்டார் என்ற குற்றச் சாட்டை முன் வைக்கலாம்.இதற்கான சரியான தீர்மானத்தை யாராவது எடுக்க வேண்டுமாக இருந்தால் அது  பஷீரை வைத்து விசாரிக்கும் போதே பெற்றுக்கொள்ளலாம் என்பதை மிக இலகுவாக அறிந்து கொள்ளலாம்.

 

நேற்று இடம்பெற்ற மு.காவின்  உயர்பீடக் கூட்டத்திற்கு பஷீர் செல்லவில்லை.அப்படியானால் அவர் மீதான எந்த இறுதி முடிவிற்கும் மு.காவின் உயர்பீடம் வந்தது சரியான தீர்மானமாக ஒரு போதும் இருக்காது.ஏன் பஷீர் செல்லவில்லை? எனக் கேட்கலாம்.ஒரு உயர்பீடக் கூட்டத்திற்கு செல்லாமல் இருப்பது தவறல்ல.மேலும்,பஷீர் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைக்கே இவ் உயர்பீடக் கூட்டம் கூட்டப்பட்டது என்பது தொடர்பில் யாரும் அறிந்திருக்காத போது பஷீர் குறித்த உயர்பீடக் கூட்டத்திற்கு செல்லாததை பெரிய விடயமாக தூக்கி பிடிக்க முடியாது.விசாரணை இன்றி எப்படி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும்? இங்கு மு.காவின் உயர்பீடம் ஒரு தலைப்பட்சமாக நடந்ததை மிக இலகுவாக அறிந்து கொள்ளலாம்.

 

பஷீர் தனக்கெதிராக அமைச்சர் ஹக்கீமால் எதுவித நடவடிக்கையும் எடுக்க முடியாது என்ற துணிவிலேயே அத்தனையையும் செய்தார்.தற்போது அவர் உயர்பீடத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதால் எதிர்வரும் பேராளர் மாநாட்டில் பஷீர் அணியினர் தலைவருக்கு ஒருவரை பரிந்துரை செய்ய திட்டமிட்டுள்ளதாக கருதப்படும் திட்டம் இலகுவில் பிசு பிசுத்துப் போகும்.இவரை கட்சியை விட்டும் நீக்குதல் அமைச்சர் ஹக்கீம் அவருக்குள்ள சவாலை எதிர்கொள்ள மிக இலகுவான வழியாகும்.இதனை நான் எனது முந்திய கட்டுரை ஒன்றில் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

பஷீர் செகுதாவூதை பொறுத்தமட்டில் அவர் பல தடவைகள் கட்சித் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்ட சந்தர்ப்பங்கள் உண்டு.இப்போது அமைச்சர் ஹக்கீம் பஷீருக்கு எதிராக மேடைகளில் முன் வைக்கும் குற்றச் சாட்டுகளை நன்கு அவதானியுங்கள்.அவைகள் எல்லாம் எப்போதே நடந்தேறியவைகள் தான்.அப்போதெல்லாம் பேசாமல் இருந்த மு.காவின் உயர்பீடம் அவர் அமைச்சர் ஹக்கீமிற்கு எதிராக போர் முரசைக் கொட்டியவுடன் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது கட்சியை விட கட்சித் தலைமைக்கே முக்கியத்துவம் வழங்குவதை துல்லியமாக்குகின்றது.சுளகு தனக்கென்றால் படக்கு படக்கென அடிக்குமாம்.

 

எது எப்படி இருப்பினும் பஷீரின் மிகப் பெரும் எச்சரிக்கைக்கு மத்தியில் மு.காவின் உயர்பீடம் இந்த முடிவை எடுப்பதற்கு அலாதித் துணிவு வேண்டும்.இந்த முடிவு மு.காவினரின் மடியில் கனமில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.பஷீர் புஸ்வனாமாவாரா? பொங்குவாரா என்பதை காலம் தான் பதில் தரும்.

 

 

Related posts

இன்று பிரதமர் ஹரிணி யாழ் விஜயம் .!

Maash

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு பீல்ட் மார்ஷல் பொன்சேகா விஜயம்

wpengine

மடு திருத்தலம் அமைந்துள்ள பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனம்

wpengine