பிரதான செய்திகள்

பட்டிக்காட்டான்

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை)

தனது பக்கத்து ஆசனத்திற்கு “யார் வரப்போறானோ?” என்ற சிந்தனையில் தனதூரிற்கு செல்ல இரவு எட்டு மணி பஸ்ஸில் ஏறிய அஜ்வத்தின் உள்ளம் மிகுந்த எதிர்பார்ப்போடிருந்தது.

“நானா..!! இந்த சீட்ட யாரு புக் பண்ணிருக்காங்க?”

“தெரியா தம்பி யாரோ முஸ்தபா மாமா புக் பண்ணினதா புக் பன்ற பொடியன் சொன்னான்,அந்த ஆள இன்னும் காணல்ல.காசி புள்ளா கட்டிருக்காரு.இனி வந்தாலும் ஒண்டுதான் வராட்டியும் ஒன்டு தான்.தம்பி..!! உங்கட பலன்ஸ் கொஞ்சம் கிடக்கு போல”

பெயரை கேட்டவுடனே சரியான வயதான ஒருவர் தான் என கற்பனையை ஓட விட்ட அஜ்வத்,தாடி தொப்பியோடு அவரை தனதுள்ளத்தில் அலங்கரித்தும் வைத்திருந்தான்.பஸ்ஸின் முன் கதவு வழியாக வாயினுள் வெற்றியலை குதப்பிக் கொண்டு அதன் பாட்டிற்கு சிலவை எழுந்தும் சிலவை படுத்துறங்கியுமான நரைத்த முடிகளுடன்  ஒரு கையில் பெரிய பையோடு ஒரு வயோதிபர் ஏறினார்.

“இந்த நாத்த ஊத்தம் வரப்படாதென்டு  லக்சரி பஸ் புக் பண்ணினா அதிலயும் இந்த தொல்ல இல்லாம இல்ல””

என சற்று ,முகச் சுளிப்போடு அஜ்வத் தனக்குள் கூறிக் கொண்டான்.அவ் வயோதிபரும் பின் வரிசை நோக்கி படிப்படியாக நகர்ந்தார்.தனக்கருகில் வருவதைப் பார்த்த அஜ்வத்திற்கு தனது பக்கத்து ஆசனத்தில் வந்தமர்ந்து விடுவாரோ என அருவருப்புடனான அச்சம் மேலிட்டது.

“தம்பி..!! அந்த சீட்டு புக் பன்ற பொடியன் இந்தப் பக்கம் தான் என்ட சீட்டாம் என்டு கையக்காட்டினான்.கொஞ்சம் இந்த துண்டைப் பார்த்து எங்க என்டு சொல்லும்பி” என்றார்  அஜ்வத்திடம் அந்த வயோதிபர்.

அஜ்வத் அதனைப் பார்த்தவுடன் தனது பக்கத்து சீட்டு என்பதை அறிந்து கொண்டான்.வேறு சீட்டை காட்டலாமா என சிறுது தயங்கிய போது “நீங்களா மாமா..!! இதான் உங்கட சீட்டு இரிங்க” என்றான் நடத்துனர்.

அஜ்வத்தைப் பார்த்து புண் முறுகல் பூர்த்த முஸ்தபா மாமா

“இன்டைக்கு தம்பியோடதான் நம்மட பிரயாணம் போல” என நிறைவான மனதோடு கள்ளம் கபடமற்ற சிரிப்பொன்றை அள்ளி வீசினார்.

அஜ்வத்தும் தலையினால் ஏனோ தானோவென பதிலளித்தான்.வேறு இடம் மாறலாமா என சிந்தித்து அங்கும் இங்கும் பார்த்தான்.பஸ்ஸின் அனைத்து சீட்டுக்களும் புக் செய்யப்பட்டிருந்தன.தான் இறங்கிச் செல்லுவோமா எனவும் சிந்தித்தான்.நாளை எப்படியாவது ஊரிற்கு சென்றாக வேண்டுமென்ற நிலை இருந்ததால்  இவ் வாகனத்தில் அஜ்வத் சென்றாக வேண்டிய நிர்ப்பந்தம்.

மிகவும் சொகுசாக முஸ்தபா மாமா தனது சீட்டில் இருந்தார்.அவரின் சொகுசிருப்பு அஜ்வத்தின் சீட்டின் எல்லயை சற்றுக் கடந்தும் விட்டது.எனினும்,அதனை வெளிக்காட்ட முடியாமல் அஜ்வத் உள்ளுக்குள்  வெம்பிக்கொண்டிருந்தான்.

“தம்பி எங்க போக?” என கதையைத் தொடுத்தார் முஸ்தபா மாமா

“நான் கல்முனைக்கு போக மாமா”

அஜ்வதும் ஒரு சம்பிரதாயத்திற்கு

“நீங்க இங்க எதுக்கு மாமா வந்தியள்?”

என்றான்.இப்படியானவர் எதுக்கு வந்திருப்பார் என்ற சிந்தனையும் அஜ்வத்தின் உள்ளத்தை சற்று உலுக்கிக்கொண்டுமிருந்தது.அஜ்வத் ஆராய்ச்சியில் சற்று ஈடுபாடு கொண்டவனும் கூட.

“நம்மட புள்ளை இங்க தான் படிக்குது.என்ன செய்ற? பொம்புளைப் புள்ளைய இங்க விட்டிட்டு ஊட்ட  நிம்மதியா இருக்க பொண்டாட்டி விடுறாள்லில்ல.நாமளும் எப்படி தம்பி ஊட்ட நிம்மதியா இருக்குற? அதான் கெழமைக்கு ஒரு வாட்டி இங்க வந்து பாத்துட்டு போவன்.”

“உங்கட மகள் என்ன படிக்கா?” என அஜ்வத் மறு கேள்வியைத் தொடுத்தான்.

“இந்த வைத்தியப் படிப்பு படிக்கா.நீங்கள் ஏன்டா மகள் பத்தி கேள்வி பட்டிருப்பிங்க.நம்மட மாவட்டத்திலேயே என்ட புள்ளைதானாம் முதல் கெட்டி எண்டு கதைத்தாங்க”

இதனை அறிந்தவுடன்

“இவரின் மகள் இப்படியா?”

என ஆச்சரியத்துடன் அஜ்வத் இருந்தான்.இதன் பிறகு முஸ்தபா மாமாவின் முகச் சுழிப்புத் தோற்றங்கள் கூட அவனுக்கு சற்று செப்பமாய் தெரிந்தது.விஞ்ஞானத் துறையை தெரிவு செய்து,அத் துறையில் தன்னால் சிறப்பான அடைவுகளை அடைய முடியாமல் இருந்த அஜ்வத்திற்கு ஒரு வைத்திய மாணவின் தந்தை ஞானி போன்று காட்சியளிப்பதில் தவறில்லையே !

இப்படியே இருவருக்குமிடையிலான உரையாடல் தொடர்கையில் முஸ்தபா மாமா சற்று கண்ணயர்ந்தார்.சாப்பாடிற்காய் பஸ் நின்றது.

“மாமா..! சாப்பிட இறங்குறல்லியா..?? இந்த கடையில நல்ல சாப்பாடு”

“தம்பி அந்த பேக்க கொஞ்சம் கீழ ஏறக்கித் தா தம்பி!”

அஜ்வத் மேலிருந்த பேக்கை  இறக்கி கொடுத்துவிட்டு அவசரமாக சென்ற முஸ்தபா மாமா அஜ்வதை

“கொஞ்சம் நில்லு தம்பி,எப்பயும் நான் வரும் போது மகள் சமைத்து கட்டித் தருவாள்.எனக்கி இந்த கடை சாப்பாடெல்லாம் ஒத்து வராது.அதுல உப்பும் இருக்காது உறைப்பும் இருக்காது.நான் எப்பயும் குறைஞ்சது ரெண்டு பேருக்கு சாப்பாடு எடுத்து வருவன்.”

அஜ்வத்திற்கு முஸ்தபா மாமா மீது மரியாதை வந்தாலும் அவரின் உணவை வாங்கி உண்ண உள்ளம் ஏற்றுக்கொள்ளவில்லை.

“பிரயாணத்துல நான் சாப்பிடுறல்ல மாமா,சும்மா டீ குடிக்கப் போறன்” என்று கூறிவிட்டு அஜ்வத் இறங்கினான்.

மீண்டும் அனைவரையும் ஏற்றிக்கொண்டுக் கொண்டு பஸ் கிளம்பியது.அனைவரும் தூக்கம் கலைந்த முகத்தோடு இருந்தனர்.

“என்ன வேலை மாமா செய்றிங்க?” என்றான் அஜ்வத்

“நமக்கென்ன வெள்ளாமை தான்.தம்பி நீங்க?”

“நான் சிவில் எஞ்சினியர்”

இன்று கணிதத் துறை பக்கம் தலை வைத்து படிக்காதவர்களும் தொழில் நுட்பக் கல்லூரிகளில் கல்வி பயின்ற சான்றிதழை (followed certificate) வைத்துக் கொண்டு தன்னை பொறியியலாளராக அழைத்துக் கொள்ளும் காலமல்லவா இது?

“”ஓ.. தம்பியும் பெரிய படிப்பு தான் படிச்சிருக்கிங்க போல”

“மாமா,வெள்ளாம செய்து கஸ்டப்படாம நான் வேல செய்ற எடத்த சும்மா சின்ன சின்ன வேல செய்ய ஆள் வேணும் வாறிங்களா?”

“தம்பி,உன்னோடு வந்தா பணம் கிடைக்கும் நிம்மதி இருக்காது.நான் வெள்ளாமை செய்கிறேன்.நான் தொழிலாளியான ஒரு முதலாளி.என்ன யாரும் அதிகாரம் பண்ண முடியாது.நான் யாருக்கும் துரோகம் செய்ய வேண்டிய அவசியம் வராது.இயற்கையுடன் இன்புறுவேன்”

இப்படி அடிக்கிக் கொண்டே சென்றார் முஸ்தபா மாமா.அப்போது தான் அஜ்வத் ஒரு விவசாயி கேவலமானவன் அல்ல.ஒரு மனிதனை அவனது முகத் தோற்றம் கொண்டோ அல்லது தொழில் கொண்டோ மட்டிடக் கூடாது என்பதை உணர்ந்து கொண்டான்.அப்படி கதைத்துக்கொண்டிருக்கும் போதே இருவரையும் தூக்கம் பிடித்துக்கொண்டது.அஜ்வத் முஸ்தபா மாமாவின் தோளில் சாய்ந்துறங்கிக் கொண்டே தனது பிரயாணத்தை சிந்தனையுடன் தொடர்ந்தான்.

 

 

Related posts

காலத்தில் காலூன்றிய பதியின் பரிணாமங்கள்

wpengine

2020 இற்குள் 15,000 கிராமங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி திட்டம்

wpengine

11 ஆண்டுகளாக ராஜபக்ஷக்களுக்கு தான் கடைக்கு சென்றோம் -மேல்மாகாண முதலமைச்சர்

wpengine