பிரதான செய்திகள்

நேர்முக தேர்வில் வவுனியா தெற்கு வலய பாடசாலை தொண்டர் ஆசிரியர்கள் விடயத்தில் பக்கசார்பு!

தொண்டர் ஆசிரியர் நேர்முகத் தேர்வில் வலயக் கல்விப் பணிப்பாளரினால் உறுதிப்படுத்தப்பட்ட சம்பவ திரட்டு புத்தக பதிவுகளில் பிழை இருப்பதாக கூறி நிரந்தர நியமனம் வழங்குவதில் இருந்து ஓரம் கட்ட முனைவதாக வவுனியா தெற்கு வலய தொண்டர் ஆசிரியர்கள் பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த பல வருடங்களாக தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றியவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் முகமாக கடந்த 28ஆம் திகதி முதல் மூன்று தினங்கள் நேர்முகத் தேர்வு யாழ். பொது நூலக மண்டபத்தில் நடைபெற்று வந்தது.

இது தொடர்பில் தொண்டராசிரியர்கள் தெரிவிக்கையில்,

அங்கு பிரசன்னமாகியிருந்த நேர்முகத் தேர்வு அதிகாரிகள் வவுனியா தெற்கு வலய பாடசாலைகளில் கடமையாற்றிய தொண்டர் ஆசிரியர்களை நிரந்தர நியமனத்தில் உள்வாங்கக்கூடாது என்ற அடிப்படையில் செயற்படுவது போன்று கடும் போக்குடன் செயற்பட்டனர்.

தொண்டர் ஆசிரியர்களாக நாம் பாடசாலைகளில் இணைந்த போது பதிவு செய்யப்பட்ட பாடசாலை சம்பவ திரட்டு புத்தகத்தின் (லொக் புக்) பிரதி பாடசாலை அதிபர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளரினால் உறுதிப்படுத்தி கொண்டு வருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதற்கு அமைவாக அவ்வாறே கொண்டு செல்லப்பட்டது.

சம்பவ திரட்டு புத்தகத்தை வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் அதிபர்களிடம் இருந்து பெற்று அதனை பார்வையிட்டு சரியென உறுதிப்படுத்தியவர்களுக்கு மட்டுமே பிரதியில் கையொப்பமிட்டிருந்தார்.

இந்த நிலையில் அதனை நாம் நேர்முகத் தேர்வுக்கு எடுத்துச் சென்ற போது அதிபர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளரின் உறுதிப்படுத்தல்களை மீறி தேர்வாளர்கள் சம்பவத் திரட்டு புத்தகப் பதிவில் இடைச்செருகல் உள்ளது எனக் கூறி பலரை நிரந்தர நியமனத்தில் உள்வாங்க முடியாத வகையில் செயற்பட்டுள்ளனர்.

இதனால் கடந்த பல வருடங்களாக கற்பித்த தொண்டர் ஆசிரியர்கள் பலரும் நிரந்தர நியமனத்தில் உள்வாங்கப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், சம்பவத் திரட்டு புத்தகத்தின் வலய கல்விப் பணிப்பாளரின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதியை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அல்லது புத்தகத்தின் மூலப் பிரதியை பார்க்க வேண்டும். இரண்டும் செய்யாது இடைச் செருகல் எனக் கூறுவது திட்டமிட்ட வகையில் எம்மை உள்வாங்காது விடுவதற்காக செய்யும் ஒரு நடவடிக்கை என்றே தோன்றுகிறது என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும், இது தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரோஹிங்கிய முஸ்லிம்களை பூஸா சிறையில் அடைத்த நல்லாட்சி

wpengine

பிரதி,இராஜாங்க அமைச்சர்கள் விபரம் இதோ

wpengine

மட்டு-பழைய கல்முனை காத்தான்குடி ஊர் வீதியின் இரண்டாம் கட்ட காபட் இடும் பணிகள் ஆரம்பம்.

wpengine