கட்டுரைகள்பிரதான செய்திகள்

துருவங்களாகும் இருமுனைச் சித்தாந்தங்கள்

சுஐப் எம்.காசிம்

நாட்டின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளில் இரு நிலைப்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

பௌத்த சித்தாந்தம்,சிறுபான்மைச் சித்தாந்தம் என்பவையே அவை.இந்த சிறுபான்மைச் சிந்தனைகளில் தமிழ்,முஸ்லிம் என்ற அக முரண்பாடுகள் ராஜபக்ஷக்களை எதிர்க்கும் நோக்கில் தற்காலிகமாக ஒன்றித்தாலும் அதிகாரப் பகிர்வுகளில் முரண்படுவது வழமையே.இந்த நிலைப்பாடுகளின் சித்தாந்தங்களில் இலங்கையின் அரசியல் களம் எத்தனை காலங்களுக்கு நகரும் என்பதை இப்போது கட்டியம் கூற முடியாது.ஆனால் ஒரு தசாப்த காலத்துக்கு பௌத்த சித்தாந்தம் தென்னிலங்கையில் நிலைக்கப்போவது உறுதியாகிவிட்டது.

எனவே இரண்டாவது நிலைப்பாடான சிறுபான்மைத் தளங்களின் நிலைப்பாடுகளை மாற்ற வேண்டிய தேவையே இத்தசாப்தத்தில் எழப்போகிறது.இவ்வாறு சிந்தனைகளை மாற்றாமல் சிறுபான்மையினர் மறுதலிப்பது தமிழ்,முஸ்லிம் சமூகங்களை தென்னிலங்கைச் சமூகத்திலிருந்து அந்நியப்படுத்துவதுடன் மாத்திரம் நின்றுவிடாது இச்சமூகங்களை அடிப்படைவாதிகள்,பிரிவினைவாதிகளாகவும் முத்திரை குத்திவிடும்.தென்னிலங்கையின் மொத்த எழுச்சிக்குள் இவ்வாறான முத்திரைகளுடன் சிறுபான்மையினர் நிம்மதியாக வாழும் நிலை ஏற்படுமா என்பது சந்தேகம்தான்.எனவே வடக்கு,கிழக்கிற்கு வெளியில் வாழும் சிறுபான்மையினரின் நலன் கருதி குறிப்பாக அங்குள்ள 13 இலட்சம் முஸ்லிம்களின் நிம்மதியான இருப்புக்கள் குறித்துச் சிந்திக்க வேண்டிய வரலாற்றுச் சந்திக்கு முஸ்லிம் தலைமைகள் வரவேண்டியுள்ளன.

ராஜபக்ஷக்களின் பௌத்தவாத மேலாண்மைப் போக்குகள் எமது சமூகத்தை மண்டியிட வைக்குமோ என்ற சிறுபான்மைத் தலைமைகளின் அச்சம் பெரும்பான்மைச் சமூகத்துடன் பொருந்திப்போவதைத் தடுத்து விடக்கூடாது.சிறுபான்மையினரின் ஒட்டுமொத்த ஒன்றித்தல்களே ராஜபக்ஷக்களைத் தூக்கி நிமிர்த்தியுள்ளதைச் சிந்தித்தால் தனித்துவ தலைமைகளுக்கு இந்த அச்சமும் தடைகளும் ஒரு பொருட்டாக அமையப்போவதில்லை.பௌத்த எழுச்சியை முன்னிறுத்தி முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரங்களுக்கு முன்னால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 13 அம்சக் கோரிக்கைகளும் ராஜபக்ஷக்களின் தனிப்பட்ட அந்தரங்கங்களை கிளறிய விமர்சனங்களும் புஷ்வாணமாகிற்று.

எனவே இலங்கையின் இப்புதிய அரசியல் நீரோட்டத்தில் இணைவதே எஞ்சியுள்ள உரிமைகளையாவது சிறுபான்மையினர் பெற்றுக் கொள்வதற்கான வாசல்களைத் திறக்கும்.இதைவிடுத்து உரிமைகளுக்காகப் பிறரிடம் கையேந்தப்போவதில்லை என்ற பேச்சுக்கள் வடக்கில் கணிசமான வாக்குகளைப் பெற்றுத் தந்தாலும் தெற்கில் கடும்போக்கர்களையே பலப்படுத்தும்.பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள ராஜபக்ஷக்களிடமிருந்து எதையாவது பெறுவதையே இன்றைய நிலைமைகள் யதார்த்தமாக்கியுள்ளன.எதைச் செய்தாலும் ராஜபக்ஷக்கள் தென்னிலங்கையை நட்டாற்றில் விடார் என்பது 2009 இல் நிரூபிக்கப்பட்டுள்ளதால் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ராஜபக்ஷக்களின் நகர்வுகளை பௌத்தர்கள் சந்தேகிக்கப் போவதுமில்லை,எதிர்க்கப் போவதுமில்லை.இதையே தமிழ்,முஸ்லிம் தனித்துவ தலைமைகள் சிந்திக்க வேண்டியுள்ளன.அந்த வகையில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ்,ஆறுமுகன் தொண்டமானின் இலங்கை தொழிலாளர் .

காங்கிரஸ்,டக்ளஸ்தேவானந்தாவின் ஈ,பி,டி,பி என்பன ராஜபக்ஷக்களின் எழுச்சிக்குள் எதையாவது சாதிக்க முயல்வது பொருத்தப்பாட்டு அரசியலாகவும் பொருந்திச் செல்லும் போக்காகவும் நோக்கப்படுகிறது.பயங்கரவாதத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் பிரிவினைவாதம்,அடிப்படைவாதம்,ஆயுதப் போராட்டங்கள் ஆயுளை இழந்துவிட்டதென்பதே இக்கட்சிகளின் நிலைப்பாடுகள்.இந்நிலைப்பாடுகள்தான் எதிர்காலக் களங்களை நகர்த்தவுள்ளன.எனினும் இத்தலைமைகளுக்கான மக்கள் அங்கீகாரம் அமோகமாக இல்லையென்பது கவலையளித்தாலும் அமோக ஆதரவுள்ள முஸ்லிம் தனித்துவ தலைமைகளின் கடந்தகால முதலீடுகள் இலாபம் தராத வைப்பீடுகளாக இருக்கப்போவது இரட்டிப்புக் கவலையளிக்கிறது.

மேலும் இந்நிலையில் விடுதலைப் போராட்டம் பெற்றுக் கொண்ட ஆகக் குறைந்த அதிகாரப்பகிர்வான மாகாண சபைகளின் ஆயுளை அடியோடு இல்லாமல் செய்யும் எத்தனங்களை வலுவிழக்கச் செய்ய வேண்டியுமுள்ளது.எனவே இதற்குள்ள வழிகள் பற்றி பெரும்பான்மைவாதிகளுடன் பரஸ்பர பேச்சுக்களை நடத்துவதே சாலச்சிறந்தது.

Related posts

தற்போது அந்த வாக்குறுதி ஜனாதிபதிக்கு மறந்து போயுள்ளது.

wpengine

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor

ஊடகங்களை எச்சரிக்கும் பிரதமர் ரணில்

wpengine