பிரதான செய்திகள்

தாதியர்கள் பற்றாக்குறை! விண்ணப்பம் கோரல்

வட மாகாண தாதியர் பற்றாக்குறையை தீர்க்க தகுதியானவர்களை இந்த மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு வட மாகாண தாதிய உத்தியோகத்தர் சங்கத்தின் செயலாளர் க.நதீஸ் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும், வட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகள் அனைத்தும் மேல் மாகாண தாதியர் உத்தியோகத்தர்களை நம்பியே இயங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலும் சகோதர மொழி பேசும் தாதியர்களே எமது மாகாணத்தில் பணியாற்றி வருகின்றார்கள். இதனால் எமது மாகாண வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் சில நோயாளர்கள் மொழிப் பிரச்சினையால் அவதிப்பட்டும் வருகின்றனர்.

அதேநேரம் மேல் மாகாண தாதியர்கள் தமது மாகாணத்தை விட்டு பல்வேறு கஸ்ரங்களுக்கு மத்தியிலும் எமது வட மாகாணத்தில் பணியாற்றுகின்றமை பாராட்டத்தக்க விடயமாகும்.

இருப்பினும் அவர்கள் குறிப்பிட்ட காலப்பகுயின் பின்னர் அவர்கள் தமது மாவட்டங்களை நோக்கி இடமாற்றலாகி செல்கின்றனர். மீண்டும் அதே அளவிலான மேல் மாகாண ஆளணியை நம்பியே குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே எமது மாகாணத்தின் தாதியர் சேவையானது நிரப்பப்படாது பற்றாக்குறையாகவே தொடர்ந்தும் காணப்படுகின்றது.

இதனால் எமது மாகாணாங்களில் புதிய அலகுகளை நிர்மாணிக்க முடியாமலும், நிர்மாணிக்க முடிந்தாலும் அதனை தொடர்ந்தும் இயக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைக்கு காரணம் எமது மாகாணத்தில் பலர் தாதியர் சேவைக்கு விண்ணப்பிப்பது இல்லை. கடந்த வருடம் கோரப்பட்ட விண்ணப்பங்களில் எமது மாகாணத்தின் சில மாவட்டங்களில் மிகக் குறைந்தளவிலானவர்களே விண்ணப்பித்துள்ளனர்.

ஆகவே, இம்முறை வடக்கின் வுவுனியா, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிகளவிலானவர்கள் விண்ணப்பிப்பதன் மூலம் தாதியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும்.

ஆகவே, எமது மாகாணத்தில் கடந்த 2015, 2016 ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவில் தோற்றி மூன்று பாடங்களிலும் (3 எஸ்) சித்தியும், கல்வி பொது தராதர சாதாரணதரப் பரீட்சையில் ஆங்கிலத்தில் சீ சித்தி பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

தகுதியானவர்கள் இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்ப படிவங்களை புத்தக நிலையங்களில் பெற்று விண்ணப்பித்து எமது மாகாண தாதியர் பற்றாக்குறையை தீர்க்க முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

வவுனியா, ஓமந்தை பகுதியில் ரயிலில் மோதி 16 எருமைகள் பலி!

Editor

கல்முனை ஐ.தே.க.அமைப்பாளராக றஸ்ஸாக் நியமனம்; இணைப்பாளர் அஸ்வான் மௌலானா பாராட்டு

wpengine

முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கான நோன்புகால சுற்றறிக்கை

wpengine