பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

ஞானசார தேரரை புதிய அரசாவது கட்டுப்படுத்துமா

இனவாத ரீதியில் அடாவடித்தனத்தில் ஈடுபடும் ஞானசார தேரரை புதிய அரசாவது கட்டுப்படுத்துமா என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் கேள்வி எழுப்பியுள்ளார்.


இன்று அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அண்மைக்காலங்களில் சமூக ஊடகங்களில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் ஞானசார தேரர் தன்னுடைய கடமை முடிந்து விட்டதாகவும் நடைபெறப்போகும் பொதுத் தேர்தலுடன் பொதுபலசேனாவை கலைத்துவிடப் போவதாக தெரிவித்திருந்தார். இதிலிருந்து அவரது சுய ரூபம் வெளிப்பட்டு நிற்கின்றது.

முன்னர் ஞானசார தேரர் தலைமையில் தர்கா நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலின் போது அதன் பின்னணியில் இவர் இருந்தார் என்பது வெளிப்படையான உண்மை இருந்தும் அப்போதிருந்த அரச தலைவர்கள் ஞானசாரதேரருக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே சிறுபான்மை இனத்தவர்கள் மீது தனது அடாவடிகள் மூலம் இனவாதங்களை தூண்டிவிட்டு தனிச்சிங்கள ஆட்சியை அமைப்பதே இவரது நோக்கம் என்பது இப்பொழுது வெளிப்படையாகிவிட்டது.மேலும் இவரது பிண்ணனியில் நின்று செயற்பட்டவர்களின் முகத்திரைகளும் வெளியாகி வருகிறது.

அன்று தேர்தல் காலத்தில் நீராவியடிப் பிள்ளையார் ஆலய சர்ச்சையில் ஞானசார தேரர் அவர்கள் மூக்கை நுழைத்தது எதற்காக என்ற சந்தேகம் எழுகிறது?
நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் ஏற்படுத்தப்பட்ட கலவரத்திற்கு மூல காரணமான இவர் அதே விடயத்தை வைத்து சிங்கள தேசத்தை உசுப்பேத்தி விட முயன்றிருக்கின்றாரா?
ஒரு தேரருக்கு தேவையான எந்த ஒரு அடிப்படை நல்லொழுக்க விழுமியங்களும் இவரிடம் இருப்பதாக தெரியவில்லை.

சண்டியராக செயற்படும் ஞானசார தேரரை, வந்திருக்கும் புதிய அரசாவது கட்டுப்படுத்துமா? என்பதை அரசு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

இந்த நாடு தமிழ், சிங்கள மொழி பேசும் மக்களுக்கான நாடு, இரண்டு ஆட்சி மொழிகளைக் கொண்ட நாடு, இங்கு சிங்கள என்ற வார்த்தையை மட்டும் பேசுவது என்பது இனவாத கருத்துக்களை கதைப்பதாகும்.

உரிமைகளுக்காக போராடுபவர்கள் இனவாதி அல்ல, தமிழ்மொழிக்கான அங்கீகாரத்தை வழங்க தவறினால் அதன் உலக நீதி உங்களுக்கான பாடங்களை எதிர்காலத்தில் கற்றுத்தரும் அதே போல் கடந்த காலங்களில் கற்றுக் கொண்ட பாடங்களை ஞாபகத்தில் கொள்வது நல்லது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

சுற்றுலாத்துறை மாநாட்டுக்கு ஹிஸ்புல்லாஹ்வுக்கு அழைப்பு

wpengine

வவுனியா வெடுக்குநாறி ஆலய விவகாரம்; வழக்கு விசாரணை எதிர்வரும் 24ம் திகதி வரை ஒத்திவைப்பு!

Editor

மஹிந்தவுடன் இணைந்த சுதந்திர கட்சி

wpengine