பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் குற்றச்செயல் மற்றும் போதைப்பொருள் சுற்றிவளைப்புகளுக்கு அமைய 30,000க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (15) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, இந்த நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி தொடங்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில் குறித்த நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதன்படி, குற்றச் செயல்களில் ஈடுபட்ட 920 பேரும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 14,000 பேரும், போதைப்பொருள் குற்றங்களுக்காக 16,000 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அத்துடன் மதுபோதையில் வாகனம் செலுத்திய 11,757 பேருக்கு எதிராகவும் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சுற்றிவளைப்புகளின் போது 197 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக கூறிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அவற்றில் தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளும் அடங்குவதாக குறிப்பிட்டார்.
போதைப்பொருள் சோதனைகளின் போது, 14 கிலோ கிராம் ஹெராயின், 20 கிலோ கிராம் ஹஷிஷ், 33 கிலோ கிராம் ஐஸ் மற்றும் 1,123 கிலோ கிராம் கஞ்சாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில், இந்த ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பாக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் இந்த ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு 13 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் 7, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சம்பவங்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதுடன் இரண்டு பேர் காயமடைந்தனர்.