பிரதான செய்திகள்

“சீனி உற்பத்தியில் தன்னிறைவு பெற்று இறக்குமதியை குறைப்போம்”-அமைச்சர் றிஷாத்

(சுஐப் காசிம்)

நாட்டின் கரும்புச்செய்கையில் தன்னிறைவுபெற்று வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சீனியின் கொள்ளளவினை வெகுவாக குறைப்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். 

பெல்வத்த சீனி தொழிற்சாலை அடங்கியுள்ள பிரதேசத்தில் செய்கை பண்ணப்பட்டுள்ள கரும்பினை அறுவடை செய்யும் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (2) காலை 7 மணியளவில்இடம்பெற்றது. அமை

ச்சர் றிஷாத் கரும்பு அறுவடையினை ஆரம்பித்து வைத்த பின்னர் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்தார்.

லங்கா சீனிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் நவீன் அதிகார தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறி, ஊவா மாகாண சபை உறுப்பினர் தர்மசேன மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி பௌசர் உட்பட பல அதிகாரிகள் பங்கேற்றனர்.

அமைச்சர் மேலும் உரையாற்றியதாவது, சீனி உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதே எமது இலக்காகும். லங்கா சீனி கூட்டுத்தாபனத்தின் நிர்வாகத்தின் கீழே இயங்கிவரும் பெல்வத்த சீனி தொழிற்சாலையையும் செவனகல சீனி தொழிற்சாலையையும் நவீன தொழில் முறைகளைப்பயன்படுத்தி மேலும் உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலே நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேபோன்று மூடிக்கிடக்கும் கந்தளாய் சீனி தொழிற்சாலையையும்ஆரம்பிக்க முயற்சிக்கிறோம்.

பெல்வத்த சீனி தொழிற்சாலையின் உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் கைத்தொழில் அமைச்சு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் இயந்திராதிகளையும் உபகரணங்களையும் இறக்குமதி செய்துள்ளோம். கரும்பு உற்பத்தியாளர்களுக்கு உற்பத்தித் துறையில் இருக்கும் இடர்பாடுளை படிப்படியாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெல்வத்த சீனி தொழிற்சாலையை நம்பியிருக்கும் 11 ஆயிரம் கரும்பு உற்பத்தியாளர்களின் நலன்களையும் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு இன்னும் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த வரவு செலவு திட்டத்தில் நிதியமைச்சரினால் முன்மொழியப்பட்டவாறு ஒரு மெற்றிக்தொன் கரும்புக்கு ஐயாயிரம் ரூபா வீதம் வழங்கப்படுவது ஆரோக்கியமானதென கருதுகின்றோம்,

லங்கா சீனி கூட்டுத்தாபனத்தை நாம் பொறுப்பேற்றபோது அதிக நஷ்டத்தில் இயங்கியது. எனினும், புதிய நிர்வாகத்தின்ஒத்துழைப்புடன் ஒரு பில்லின் நஷ்டத்தில் இயங்கிய இந்தக் கூட்டுத்தாபனத்தை ஒரு பில்லியன் இலாபத்துக்கு கொண்டுவர முடிந்தது. அத்துடன், நிலுவையில் இருந்த அனைத்து வரிகளையும் இறுக்க முடிந்தது. இது நமக்குக் கிடைத்த வெற்றியாகக் கருத முடியும்.

கரும்பு உற்பத்தியாளர்களுடனும் வியாபாரிகளுடனுமான வர்த்தக உறவுகளில் வெளிப்படைத்தன்மை (Transparency) பேணப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. கரும்புத் தொழிலில் தன்னிறைவு பெற்று தொழிலாளர்களின் வாழ்க்கை வசதிகளை மேம்படுத்துவது மாத்திரமன்றி பாவனையாளர்களுக்கும் நன்மை பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் குறிக்கோளாகும். இதற்கு, ஜனாதிபதியினதும் பிரதமரினதும் வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் எமக்கு துணை செய்கின்றன.

அரசாங்கத்தின் நிறுவனங்களிலும் கூட்டுத்தாபனங்களிலும் இயங்கிவரும் தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களின் நலன்களுக்கு குரல் கொடுக்கும் போர்வையில் தமது சொந்த அரசியல் செயற்பாடுகளுக்கும் தனிப்பட்டவர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கும் துணைபோகக் கூடாது. நிறுவனங்களின் செயற்பாடுகளை ஆக்கபூர்வமாகமுன்னெடுப்பதற்கு உதவிகளை நல்கினால் தொழிலாளர்களின் சலுகைகளை இலகுவாக பெற்றுக்கொடுக்க முடியும்.

தொழிற் சங்கங்களை வைத்துக் கொண்டு தமது சுய இலாபங்களுக்காக அதனைப் பயன்படுத்த முனையக் கூடாது. அதற்கு, நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.

எனது அமைச்சின் கீழான அரச வர்த்தகக் கூட்டுத் தாபனம் லக்சல, சதோச, மற்றும் சீனிக் கூட்டுத் தாபனம் ஆகியவை எம்மிடம் கையளிக்கப்பட்டபோது அவை பாரிய நஷ்டத்தில் இயங்கிய நிறுவனங்களாக இருந்தன. இந்த நிறுவனங்களின் நிர்வாகப் பொறுப்புக்களை அந்தந்தத் தலைவர்களிடம் ஒப்படைக்கும்போது ஒரு வருடக் காலத்துக்குள் இவற்றை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றுமாறு கூறியிருந்தோம்.அதற்கிணங்க அனைவரின் ஒத்துழைப்புடனும் அவை முன்னேற்ற பாதையில் இயங்கிவருவது மகிழ்ச்சி தருகின்றது. –என்று அமைச்சர் கூறினார்.

Related posts

அரசியல்வாதிகள் வலியுறுத்தினாலும்! சமஷ்டி தீர்வை மக்கள் விரும்பவில்லை.

wpengine

மீண்டும் இனவாதம் பேசும்! அம்பிட்டிய சுமணரத்ன தேரர்

wpengine

பேஸ்புக் வேலைக்கு 10லச்சம் கொடுக்கும் சஜித்,கோத்தா

wpengine