பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

சில சிங்கள அரசியல்வாதிகளின் கையாலாகாத்தனத்தையும், தேர்தல் வெற்றிக்கான பிரச்சாரம்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில்,  ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) ஆகிய நாம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுகிறோம்.

முப்பதாண்டு கால ஆயுதப் போராட்டம் முடிவடைந்த பின்பு,  கடந்த பத்தாண்டுகளாக முன்னெடுக்கப்பட்டுவந்த தமிழர்களின் போராட்ட வழிமுறைகள் எதிர்பார்த்த அளவு பலனை எமது மக்களுக்கு கொடுக்கவில்லை.

வன்னியிலும்,  கிழக்கு மாகாணத்திலும் இன நல்லிணக்கத்தின் பெயராலும், நல்லாட்சியின் பெயராலும் முன்னெடுக்கப்பட்ட  அரசியல் மற்றும் சமூக அபிவிருத்தி நடவடிக்கைகள் யாவும் தமிழர்களின் இருப்பை பலவீனப்படுத்துகின்ற,  அச்சுறுத்துகின்ற வகையிலேயே திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டிருந்தன.

அடுத்த நாடாளுமன்றத்தில், சிறுபான்மை இன மக்களுக்கு பாதுகாப்பாயுள்ள சட்டங்களை நீக்கும் நோக்கோடு,  மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இலக்கு வைத்து,  பேரினவாத நிகழ்ச்சி நிரலை விரைவாக நடைமுறைப்படுத்த துடித்துக் கொண்டிருக்கும் தற்போதைய ஆட்சியாளர்களின் ‘செயலணி’ச் செயற்பாடுகள்கூட கடந்த காலங்களைவிட மிக வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன.

நல்லிணக்கம் என்ற பெயரில் முஸ்லீம் தலைவர்களுடன் எமது தலைவர்கள் சிலர் செய்து கொண்ட உடன்படிக்கைகள் முஸ்லீம்களால் உதாசீனபடுத்தப்பட்டிருந்ததோடு துரோகமும் இழைக்கப்பட்டிருந்தது. நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளால் உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தில் நல்லதே நடக்கும்,  தீர்வு வரும் என்று கூற வைக்கப்பட்டு எமது மக்களும் அவர்களது நாடாளுமன்றப் பிரதிநிதிகளும் ஏமாற்றப்பட்டிருந்தனர்.

ஆனாலும் கடந்த பத்தாண்டுகளாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் தலைமைத்துவம் மட்டுமே தமிழர்களுக்கு பாதகமான சிங்கள அரசியல் தலைவர்களின் எண்ணங்களையும்,  தீர்வு தேவை என எண்ணுகின்ற ஒரு சில சிங்கள அரசியல்வாதிகளின் கையாலாகாத்தனத்தையும்,  தேர்தல் வெற்றிகளுக்காக பௌத்த பீடாதிபதிகளுடனும் பேரினவாத சக்திகளுடனும் அவர்கள் மேற்கொள்ளுகின்ற சமரசப் போக்குகளையும் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்ததோடு யதார்த்தமான தமிழர் தரப்பு அரசியல் நிலைப்பாட்டையும் வலியுறுத்தி வந்துள்ளது.

ஆயுதப் போராட்டத்தை அழித்து விட்ட திமிரோடு சிங்கள பௌத்த பேரினவாதமானது  தொடர்ச்சியாக இன்றுவரை தமிழ்த் தேசியத்தை சிதைவுறச் செய்யும் கைங்கரியத்தை திட்டமிட்டு செய்து வருகிறது.  எமது சமூகம் மற்றும் தமிழ்த் தேசியம்,  தமிழர்களின் ஒன்றுபட்ட பலம் யாவும் கடந்த பத்தாண்டுகளில் பேரினவாத முகத்தோடும் நல்லாட்சி முகத்தோடும் மாறிமாறி சிதைக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே இன்று வடக்கிலும் கிழக்கிலும் ஏராளமான தமிழ் வேட்பாளர்கள் பல்வேறு கட்சிகளின் பெயரிலும் சுயேட்சைக் குழுக்களாகவும் போட்டியிட வைக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழர்களின் வாக்குப் பலத்தை சிதறடிப்பதன் மூலம்,  தமிழர் தாயகத்தில் நெடுந்தீவு முதல் பொத்துவில் வரை அனைத்து தமிழ் மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கூட்டமைப்பை பலவீனப்படுத்தி அதன் மூலம் நாடாளுமன்றத்தில் தமிழ்ச் சமூகத்தினை பலவீனப்படுத்துவதுவதே அதன் நோக்கமாகும்.

கூட்டமைப்புக்கு எதிரானவர்கள்கூட தமக்குள் ஓரணியாக நின்று உறுதியான பிரதிநிதித்துவத்தை, தலைமைத்துவத்தை வழங்கமுடியாதவகையில், திட்டமிட்டு பிரித்தாளப்பட்டு தனித்தனியே வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வைக்கப்பட்டுள்ளனர்.  

வன்னியில்,  கடந்த காலங்களில் எமது கட்சி மேற்கொண்ட தந்திரோபாயங்களே யுத்த காலத்திலும் அதன் பின்னைய காலங்களிலும் எமது மக்களைப் பாதுகாத்ததோடு,  அரசியல் உரிமைக்கும் அபிவிருத்திக்குமான போராட்டங்களை சமாந்தரமாக முன்னெடுக்க வாய்ப்ப்புகளை தந்தது. 1994 ஆம் ஆண்டில் எமது கட்சி நாடாளுமன்றத்திற்கு முதன்முறையாக தெரிவுசெய்யப்பட்டபோது நாம் மேற்கொண்ட அரசியல் அணுகுமுறையையே இன்று அநேகமான தமிழ்க் கட்சிகள் பின்பற்ற முற்படுகின்றன.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எமக்கு வழங்கப்படும் வாய்ப்பானது அரசியல் உரிமை, சமூக அபிவிருத்தி என இரண்டு விடயங்களிலும் யதார்த்தமான புதிய அணுகுமுறையை பின்பற்றி வடக்கு, கிழக்கில் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கும் எமது மக்களின் சமூக மேம்பாட்டிற்கான பொருத்தமான சூழலை உருவாக்கவும் பலம் சேர்க்கும் என்பதை உறுதியளிக்கிறோம்.

அதேநேரத்தில்,  கூட்டமைப்பு குறித்து கடந்த சில வருடங்களாக பொதுவெளியில்  முன்வைக்கப்பட்ட விமர்சனங்களை உறுதியாக மறுதலிக்க முடியாத வகையிலேயே கூட்டமைப்பின் சில உறுப்பினர்களின் செயற்பாடுகள் அமைந்திருந்தன என்பதையும் நாம் மனச்சாட்சியுடன் ஏற்றுக்கொள்கிறோம். கூட்டமைப்பின் பதிவு தொடர்ச்சியாக தள்ளிப் போவதும்,  போராட்டத்தில் சம்பந்தப்படாதவர்கள் நாடாளுமன்றக் குழு எனும் அதிகாரத்தோடு தமிழ் மக்களின் தலைவிதியை தீர்மானிக்க முயற்சிப்பதுமே குற்றச்சாட்டுகளின் அடிப்படையாக அமைந்திருக்கின்றன.

ஆனாலும்,   தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் ஒருமித்த பலத்தோடு செயற்பட  வேண்டும் எனும் ஒரே நோக்கத்துக்காக, அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாம் நிறைய விட்டுக்கொடுப்புகளை செய்திருந்ததோடு சகிப்புத்தன்மையையும் வெளிப்படுத்தியிருந்தோம்.

கூட்டமைப்பு மீதான அண்மைக்கால விமர்சனங்கள் பற்றிய சந்தேகங்கள் உங்கள் மனங்களில் இருக்கிறது என்பதற்கான மாற்றுவழி, தமிழர் ஒற்றுமையை பலவீனப்படுத்துவதோ அல்லது கூட்டமைப்பை சிதைப்பதோ அல்ல. தமிழர்களின் ஒருமித்த பலத்தை சிதறடிக்க வேண்டும் என்று பேரினவாத நிகழ்ச்சி நிரலுடன் தனித்தனியே களமிறக்கப்பட்டுள்ள குழுக்களை ஆதரிப்பதும் அல்ல.

நிரந்தரமான, நியாயமான அரசியல் தீர்வுக்காக பெரும்பான்மையான தமிழ் மக்களினதும் சர்வதேசத்தினதும் ஆதரவோடு தொடர்ச்சியாக செயற்பட்டுவரும் கூட்டமைப்புக்கு மாற்று என்பது இன்னொரு அரைகுறை அரசியல் அமைப்பாக இருக்க முடியாது. கூட்டமைப்புக்குள்ளேயே மக்கள் விரும்பும் மாற்றத்தை உருவாக்கும் வாய்ப்புகளை,  வருகின்ற தேர்தலில்  வாக்களிக்கும் முறைமையே உங்களுக்கு வழங்குகின்றது.

அதன் மூலம்,  நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் புதிய அணுகுமுறையை முன்னெடுத்து, எமது அரசியலுரிமைக்கான செயற்பாடுகளில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து தரப்புகளையும் கையாள  நாம் அனைவரும் ஒருமித்த பலத்துடன் முயற்சிக்க வேண்டும்.

அதற்கான ஒரு தெரிவாக,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்தில்  யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்புத் தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் ஐந்து வேட்பாளர்களையும் வெற்றி பெற வைக்க வேண்டும் என அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக் கொள்கிறோம்.

தகவல், பிரச்சார வெளியீட்டுப் பிரிவு,
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)

27.06.2020.

Related posts

அஸ்ரப் சிஹாப்தீன் மொழிபெயர்ப்புச் செய்த சிறுகதை நூலான “பட்டாம்பூச்சிக் கனவுகள்” வெளியீடு.

wpengine

தரச் சான்றிதழ் வழங்காமையால் துறைமுகத்தில் தேங்கிக்கிடக்கும் 20 இலட்சம் இந்திய முட்டைகள்!

Editor

தெய்வீக பிணைப்பை எடுத்துகாட்டும் ஹஜ் பெருநாள் ஜனாதிபதி

wpengine