பிரதான செய்திகள்

சிறுபான்மையினரின் அபிலாஷைகள் பேணப்படுவதற்கு இந்தியா அக்கறை தலையிட வேண்டும்

புதிய அரசியலமைப்பில் சிறுபான்மையினரின் அபிலாஷைகள் பேணப்படுவதற்கு இந்தியா அக்கறை காட்ட வேண்டுமென, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தில், நேற்று (25) தூதுவர் கோபால் பாக்லேயைச் சந்தித்துக் கலந்துரையாடிய ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், புதிய அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில், இந்தியத் தூதுவருடன் கலந்துரையாடியது.

மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலமுள்ள புதிய அரசாங்கம் பிராந்திய, சிறுபான்மை கட்சிகளைக் கேளாமால் அரசியலமைப்பை மாற்றுவதற்கு எடுக்கும் முயற்சிகளால் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் அதிருப்தியடைந்துள்ளதால், இவ்விடயத்தில் இந்தியா அவசரமாக அக்கறை செலுத்துவது குறித்தும், இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயிடம் இக்குழுவினர் விளக்கிக் கூறினர்.

கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில், பிரதித் தலைவர் ஹாபிஸ் நஸீர் எம்.பி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசீம், எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

புதிய அரசாங்கம் அமைந்த பின்னர், நாட்டில் ஏற்படவுள்ள பிரதான மாற்றங்கள் பற்றியும், இந்த மாற்றங்களால் சிறுபான்மை சமூகங்களின் அபிலாஷைகள் இல்லாமல் செய்யப்படுவதைத் தடுக்கும் வகையிலும், இந்தியா உதவ வேண்டுமென்றும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக, அரசியலமைப்பின் 13 ஆவது சரத்தை மேலும் பலப்படுத்தி, மாகாண சபைகளின் அதிகாரங்களை மேலும் அதிகரிக்க வேண்டுமென, இதில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நஸீர் கேட்டுக்கொண்டார்.

இலங்கைக்கு வழங்கப்படும் இந்திய வீட்டுத்திட்ட உதவிகள், கிழக்கு மாகாணத்திற்கு கிடைக்காதுள்ளமை தொடர்பிலும், இந்திய தூதுவருக்கு இதன்போது அவர் எடுத்துரைத்தார். இவ்வாறான பாரபட்சங்களால் இலங்கை முஸ்லிம்கள், இந்தியாவின் நடவடிக்கைகளில் அதிருப்தியுற்றுள்ளனர். எனவே, இவற்றைக் கருத்திற்கொண்டு செயற்படுமாறும் இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள விமான நிலையச் சேவைகளை இந்தியாவுக்கு விஸ்தரித்தல், இதனூடாக வர்த்தக தொடர்பாடலை ஏற்படுத்தல் மற்றும் மீனவர் துறைமுகத்தை அமைத்து, மட்டக்களப்பு மாவட்ட மீனவர்களின் தொழில் வாய்ப்புக்களுக்கு உரிய சந்தை வாய்ப்பை ஏற்படுத்தவும் இந்தியா உதவ வேண்டுமென ஹாபிஸ் நஸீர் எம்.பி இதன்போது கேட்டுக்கொண்டார்.

மேலும், கிழக்கின் இயற்கை வளங்களை பொருளாதார அபிவிருத்திக்கு பயன்படுத்துவதற்கேற்ப பயிற்சிகளை வழங்கும் பொருட்டு, தொழில்நுட்ப பயிற்சி நிலையங்களை கிழக்கில் ஸ்தாபித்தல், கைத்தறித் துறையை நவீனமயப்படுத்தி இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்குவது பற்றியும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுவினர், இந்தியத் தூதுவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சந்திப்பில் இந்திய பிரதித் தூதுவர் வினோத் கே. ஜேகப் மற்றும் அரசியல், அபிவிருத்தி ஒத்துழைப்பு தலைமை அதிகாரியும் கவுன்சிலருமான திருமதி. பானு பிரகாஷ் ஆகியோரும் உடனிருந்தனர்.

Related posts

கடற்படை முகாமுக்கும் ,நில அளவைக்கும் எதிர்ப்பு தெரிவித்து சிலாவத்துறை மக்கள் ஆர்ப்பாட்டம் (வீடியோ)

wpengine

கால்நடை அறுப்பதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்றக் குழுவிடம் சமர்ப்பித்தார்.

wpengine

சரண் பிணை கைது மீண்டும் பிணை! ஞானசாரரின் மின்னல் வேகம்

wpengine