பயங்கரவாதி சஹ்ரான் தப்பித்துச் செல்வதற்கு உதவியதாக பாதுகாப்புத் துறையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் அளித்த கருத்துக்கு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு, தனது சட்டத்தரணி சாஹா சம்ஸ் அவர்களினூடாக, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், ஆணைக்குழுவின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
ரிப்கான் பதியுதீனின் சட்டத்தரணி அனுப்பி வைத்துள்ள அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,
புலனாய்வுத்துறை முன்னாள் பணிப்பாளர் ஒருவர், ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வழங்கிய சாட்சியங்களால், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரான தனது சேவையாளர் ரிப்கான் பதியுதீன், கடுமையாக அபகீர்த்திக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் எனவும், குறிப்பிட்ட அதிகாரி வெளிப்படுத்திய கருத்துக்கள், இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் பெரும் பிரசித்தப்படுத்தப்பட்டு, வெளிப்படுத்தப்பட்டமை தொடர்பிலும் அவர் ஆணைக்குழுவின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பயங்கரவாதி சஹ்ரான், 2018 ஆம் ஆண்டு, நாட்டைவிட்டு தப்பிச்செல்ல, மன்னார் படகுத்துறையில் படகு வழங்கியதாக, முன்னாள் புலனாய்வுத் துறை பணிப்பாளர் தெரிவித்திருந்தமையை தனது சேவையாளர் முற்றிலும் மறுப்பதுடன், அவ்வாறு சாட்சியமளித்தவரின் அடிப்படையற்ற கருத்துக்களினால், தனது சேவையாளரான ரிப்கான் பதியுதீனின் நற்பெயர் பாதிக்கப்பட்டுள்ளமையையும், சட்டத்தரணி தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
“எனது சேவையாளரின் உண்மையான நிலைப்பாட்டினை வெளிப்படுத்துவதற்கும், அவரது கருத்தினை பெற்றுக்கொள்வதற்கும் வசதியாக ஜனாதிபதி ஆணைக்குழு, அவர் சாட்சியமளிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும்” இவ்வாறு அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
புலனாய்வுத் துறையைச் சார்ந்த முன்னாள் பணிப்பாளர் ஒருவர், நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்துள்ள இந்த ஆணைக்குழுவில், இவ்வாறான ஆதாரமற்ற கருத்துக்களை சுமத்துவது, இந்த விடயத்தில் எந்தவிதமான தொடர்புமே இல்லாத ரிப்கான் பதியுதீனை மோசமாக பாதித்துள்ளதாகவும், அவரது சட்டத்தரணி மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த பொறுப்பற்ற கருத்துக்கு எதிராக, தனது சேவையாளரின் உண்மை நிலைப்பாட்டை பெற்றுக்கொள்ள, அவருக்கு கால அவகாசம் வழங்குவது பக்கச்சார்பற்ற விசாரணைக்கு உதவும் எனவும் சட்டத்தரணி, ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

