கட்டுரைகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

சமகால முஸ்லிம் அரசியலும் உள்ளூராட்சித் தேர்தலும்.

(வை எல் எஸ் ஹமீட்)

முதல் இரண்டு பாகங்களிலும் தலைவரின் மறைவுக்குப்பின் முஸ்லிம் காங்கிரஸ் அபிவிருத்தி அரசியலிலும் உரிமை அரசியலிலும் விட்ட சில பிரதான தவறுகள் சிலாகிக்கப்பட்டன. மு காவின் பிழைகளை எழுதுவதாயின் இன்னும் பல பாகங்கள் தொடர்ச்சியாக எழுதலாம். ஆயினும் நாணயத்தின் இப்பக்கம் கடந்த 17 ஆண்டுகளாக பலராலும் பார்க்கப்பட்டு வந்திருக்கிறது; இன்னும் பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது; என்ற அடிப்படையில் நாணயத்தின் மறுபக்கத்தையும் பார்க்க வேண்டிய தேவையின் அவசியத்தையும் அவசரத்தையும் கருத்திற்கொண்டு இக்கட்டுரை அதற்குள் நுழைகின்றது.

இன்று பலருக்கு மு காவின் மீதும் அதன் தலைமைத்துவத்தின் மீதும் ஒருவகை சலிப்பும் வெறுப்பும் ஏற்பட்டிருக்கின்றது. இதனை யாரும் தவறு எனக் கூறமுடியாது. இந்த சலிப்பு, வெறுப்பு காரணமாக எங்காவது போய் விழுவோம்; என நினைப்பதில்தான் தவறு மாத்திரமல்ல, ஆபத்தும் இருக்கின்றது. சட்டி சுடுகின்றது என்பதற்காக அடுப்புக்குள் போய் விழமுடியாது. இங்குதான் உணர்ச்சியை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு அறிவுக்கு வேலை கொடுக்க வேண்டும்.

தலைவர் இருந்தபோது மு கா 24 கரட் சுத்தத்தங்கமாக இருந்தது. அவரின் மறைவுக்குப்பின் அது 18 கரட் தங்கமாகியது உண்மைதான். நமது உள்ளூர் பரிபாசையில் கூறுவதானால் ‘ ஆண்களும் அணியக்கூடிய தங்கம்’. தங்கத்தின் தரம் குறைந்து விட்டதனால் ஏற்பட்ட விரக்தியில் போய் பேயும் வாங்க விரும்பாத 14 கரட் தங்கத்தை வாங்க முற்படலாமா? விரக்தி நியாயம்தான்; அதற்காக அது அறிவை மழுங்கடிக்கலாமா?

இருப்பவை எல்லாம் பிழையானவை, மோசமானவை, ஆனால் அதற்குள் ஒன்றைத் தெரிவுசெய்துதான் ஆகவேண்டும், வேறு வழியில்லை; என்றால் அதற்குள் ஆகக்குறைந்த பிழையானதை, அல்லது மோசமானதை தெரிவுசெய்வதுதான் அறிவுடமை மாத்திரமல்ல இஸ்லாமுமாகும். அதற்காக நாம் தெரிவு செய்யும் ஆகக்குறைந்த பிழையானதில் பிழை இல்லை; எனக்கூறமுடியாது. சிறந்த ஒன்றைத் தேடிக்கண்டுபிடிக்கும்வரை மாற்றுவழியில்லை. எனவே, இங்கு உணர்ச்சிவசப்படுவதில் பிரயோசனமில்லை; என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

ரவூப் ஹக்கீமின் தலைமைத்துவத்தை மாற்றல்
——————————————-
இத்தேர்தலில் ரவூப்ஹக்கீமின் தலைமைத்துவத்தை மாற்றுவதற்காக மு கா விற்கெதிராக ஒன்றுபட்டு வாக்களிக்குமாறு கோசமெழுப்புகின்றனர். இது அவர்களின் சிந்திக்கும் ஆற்றலின் பஞ்சத்தின் வெளிப்பாடா? அல்லது மக்களுக்கு சிந்திக்கும் ஆற்றலில்லை, அவர்கள் மாக்கள், மடையர்கள்.,சற்று உணர்ச்சிவசப்பட்டு எதைச்சொன்னாலும் நம்பிவிடுவார்கள்; என்ற தப்புக்கணக்கா?

தயவுசெய்து நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்; எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் ஶ்ரீ மு காங்கிரசின் உயர்பீடக்கூட்டமுமல்ல; பேராளர் மாநாடுமல்ல, ரவூப் ஹக்கீமை நீக்குவதற்கு. தலைமைத்துவத்தை இந்த நாட்டு மொத்த முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்தாலும் சட்டரீதியாக மாற்ற முடியாது, மேற்கூறிய இரண்டு சபைகளையும் தவிர.

இல்லையாம், இத்தேர்தலில் மு கா வைத் தோற்கடித்துவிட்டு ஏனைய எதிரணிக்கட்சியிலுள்ளவர்களெல்லாம் ஒன்றுசேர்ந்த்து ஒரு தலைமைத்துவத்தை உருவாக்குவார்களாம். யார் அந்த தலைமைத்துவம் என்ற கேள்வி ஒருபுறமிருக்க, இந்தத் தேர்தலில் மு காவைத் தோற்கடித்துவிட்டால் ரவூப் ஹக்கீம் தலைமைப்பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஓடிவிடுவார்; என்று உங்களுக்கு யாராவது உத்தரவாதம் தந்தார்களா? மேற்சொன்ன இரு சபைகளும் தீர்மானிக்காதவரை ரவூப் ஹக்கீமின் தலைமைத்துவத்தை மாற்றமுடியாது; என்பதுதான் யதார்த்தமானால் அவரது தலைமைத்துவத்தை இத்தேர்தல் மூலம் மாற்றப்போவதாக கூறுவது தேர்தலில் மக்களைத் திசைதிருப்புவதற்காக செய்யப்படும் போலிப் பிரச்சாரமில்லையா?

அது ஒரு புறமிருக்க, ரவூப் ஹக்கீமின் தலைமைத்துவத்தை நீக்கிவிட்டு ஏனைய அணியிலுள்ளவர்களெல்லாம் ஒன்றுசேர்ந்து மு கா விற்கு புதிய தலைமைத்துவத்தை உருவாக்கப்போவதாக கூறுகிறீர்களே! அவ்வாறு நீக்கி, நீங்களெல்லாம் ஒன்றுசேர்ந்து புதிய தலைமைத்துவத்தை உருவாக்குவது, அந்தத்தலைமைத்துவம் யார்; என்ற கேள்விகள் ஒருபுறமிருக்க, தற்போதைக்காவது ரவூப் இருக்க ஏனையவர்களாவது ஒன்றுபட முடிந்தததா? ஏன் முடியவில்லை.

ரவூப் ஹக்கீமை நீக்கினால்தான் ஒன்றுபடுவீர்களா? ரவூப் ஹக்கீமை நீக்கிவிட்டால் உங்களுக்கு குறைகூறி அரசியல் செய்வதற்கு ஆள் இல்லாமல் போய்விடுமே! என்ன செய்வீர்கள்? நீங்கள்தான் உங்கள் சாதனைகளைச் சொல்லி அரசியல் செய்கின்றவர்கள் இல்லையே! 15 வருடங்கள் கழிந்தும் ரவூப் ஹக்கீமின் பிழைகளைச் சொல்லித்தான் அரசியல் செய்கிறீர்கள். அப்படிப்பட்ட நீங்கள் ரவூப் ஹக்கீம் இல்லாமல் எப்படி அரசியல் செய்வீர்கள்?

மு காவை அழித்து இன்னுமொரு மு காவை உருவாக்குது
—————————————–
இத்தேர்தலில் மு கா வைத் தோற்கடிப்பதன் மூலம் ரவூப் ஹக்கீமை நீக்கி மு காவை கைப்பற்ற முடியாது. ஆனால் மு கா வை அழிக்கலாம். அதில் பிரச்சினையில்லை. அதற்குப் பகரமாக இன்னுமொரு மு காவைத் தருவதற்கு தயாரான, தகுதியானவர் யார்? குறிப்பிடமுடியுமா? அவ்வாறான ஒரு உண்மையான மு கா சை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எனும் வடிவத்தில் வழங்க வை எல் எஸ் ஹமீட் முயற்சிக்கின்றார்; என்பதற்காகத்தானே நயவஞ்சகத்தனமான முறையில் வஞ்சிக்கப்பட்டார். உண்மையான மு காங்கிரஸாக இதுமாறினால் தமது அரசியல் வியாபாரத்தைச் செய்யமுடியாது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது. அதையெல்லாம் மேடைகளில் பேசி மக்களை மடையர்களாக்க மாத்திரம் வைத்துக்கொள்ள வேண்டும். நடைமுறையில் வியாபார காங்கிரஸ் நடாத்த வேண்டும். இது புரியாத வை எல் எஸ் ஹமீட்டை வைத்திருந்தால் தொழிலுக்கு நட்டம்; என்றுதானே தண்டிக்கப்பட்டார்.

இந்த 14 கரட் தங்கங்களால் உண்மையான மு கா வைத் தரமுடியுமா? எதை வைத்து இவர்கள் 14 கரட் என்கின்றீர்கள்? என்றுதானே கேட்கின்றீர்கள். எதிர்வரும் தொடர் பாகங்களில் அதை இன்ஷாஅல்லாஹ் காண்பீர்கள். அதற்குள் செல்லமுன் இவர்கள் இத்தேர்தலில் மு கா விற்கும் அதன் தலைவருக்கும் எதிராக முன்வைக்கும் ஒரு சில குற்றச்சாட்டுக்கள், இவர்கள் எவ்வளவு மோசமான கபடதாரிகள்; மக்களை எவ்வளவு கீழ்த்தரமான முட்டாள்களாக எடைபோட்டிருக்கின்றார்கள்; என்பதைக் காட்டவில்லையா? என்று உங்கள் பகுத்தறிவிடம் கேளுங்கள்.அதில் ஒன்று யானைக்கு மு கா அடகுவைக்கப்பட்டுவிட்டது; என்பதாகும். வன்னியில் யானையில் போட்டியிடுகின்ற அமைச்சர், ‘அம்பாறையில் யானைக்கு அளிக்கும்
வாக்குகள் முஸ்லிம்களை அடிமைகளாக்கும்’ என்று கூறியிருக்கின்றார்.

அவ்வாறாயின் அம்பாறைக்கு வேறு யானை, வன்னியில் வேறு யானை போட்டியிடுகின்றதா? வன்னியில் ஹலால் ஆன யானை, அம்பாறையில் எவ்வாறு ஹறாமானது; என்ற கேள்விக்கு அந்த அமைச்சர் பதிலளிப்பாரா? இல்லையெனில் ஏன்?

மறைந்த தலைவர், ‘ரணில் சாரதியாக இருக்கும்வரை ஐ தே கட்சி எனும் வாகனத்தில் ஏறமாட்டேன்’ எனத் தெரிவித்திருந்தார்;’ எனவே இவர்கள் எவ்வாறு அந்த யானையில் பயணிக்க முடியும்; எனக் கேட்கின்றார்கள். தலவர் மரணித்தது 2000 மாம் ஆண்டு. 2001 ம் ஆண்டு மு கா யானையில் பயணித்தபோது இவர்களெல்லாம் மு காவில்தான் இருந்தார்கள். அப்பொழுது மறைந்த தலைவரின் அந்தவார்த்தை அந்த ஞாபகம் வரவில்லையா?

2004 ம் ஆண்டு அதே யானையில்தான் மு கா பயணித்தது? அப்போதும் இவர்கள் மு கா வில் இருந்தார்கள். அப்பொழுது தலைவரின் வார்த்தை ஞாபகம் வரவில்லையா? 2010 ல், 2015ல் மு கா யானையில் பயணித்தபோது இவர்களில் பலர் அங்குதான் இருந்தார்கள். அப்பொழுதெல்லாம் ஞாபகம் வராத தலைவரின் வார்த்தை இம்பொழுது மாத்திரம் ஞாபகம் வருவதேன்? இது இவர்களின் அரசியல் வங்குரோத்துத் தனத்தைக் காட்டவில்லையா?

இவர்களது உள்ளத்தில் நேர்மையிருந்தால் இவர்கள் மேடைகளில் பேசும் வார்த்தைகளில் சத்தியம் இருந்தால் அன்று பிழையாகத் தெரியாத, அன்று இவர்களும் கூடவே இருந்து அங்கீகரித்த ஒரு விடயம் இன்று பிழையாகத் தெரிவதேன்? இதற்கான பதில் என்ன? ஒரே விசயத்தை, இவர்கள் கூடவே இருக்கும்போது ‘ சரி’ என்பார்கள், மக்களும் அதை ஏற்றுக்கொண்டு வாக்களிக்க வேண்டும்; பிரிந்து வரும்போது அதே விசயத்தைப் பிழை என்பார்கள்; மக்கள் அதனையும் ஏற்றுக்கொண்டு அவர்கள் சொல்வதுபோல் எதிர்த்து வாக்களிக்க வேண்டுமென்றால் மக்களின் வாக்குரிமையையும் சேர்த்து இவர்களிடமே வழங்கிவிடலாமே! இவர்களுக்கு தேவையான போது ஒரு விடயத்தை சரியென எடுத்துக்கொண்டு மு காவுக்கு ஆதரவாகவும் இவர்களின் தேவை மாறுகின்றபோது அதே விடயத்தைப் பிழையாக எடுத்து, மு காவுக்கு எதிராகவும் மக்களின் சார்பில் இவர்களே வாக்களிக்கலாமே!

ஒரே விடயம், ஒரு நாள் சரியாவதும் இன்னொரு நாள் பிழையாவதும் எப்படி?

ஒரே விடயம் ஒரு மாவட்டத்தில் சரியாவதும் இன்னோர் மாவட்டத்தில் பிழையாவதும் எப்படி? பதில் கூறுவார்களா?

தயாகமகேயும்  உள்ளூராட்சித் தேர்தலும்
—————————————

அம்பாறையில் யானைக்குப் போடக்கூடாது; என்பதற்கு தயாகமகேயை சிலர் காரணம் காட்டுகின்றார்கள். உள்ளூராட்சித் தேர்தலுக்கும் தயாவுக்கும் எந்த வகையில் முடிச்சுப் போடுகிறீர்கள்; என்று இந்த மகா தலைவர்களில் எவராவது தெளிவுபடுத்த முடியுமா?

பாராளுமன்றத் தேர்தல் மொத்த மாவட்டத்திற்குமானது. அதில் யானையில் கேட்டால் சிலவேளை அதில் முஸ்லிம் வாக்குகள் இனவாதி தயாவுக்கு உதவலாம், சிலவேளை சிங்கள வாக்குகள் முஸ்லிம்களுக்கும் உதவலாம். அது சூழ்நிலையைப் பொறுத்தது. முஸ்லிம் பிரதேசங்களுக்கான உள்ளூராட்சித்தேர்தலில் தயாகமகே எவ்வாறு பிரயோசனமடைவார்; என்று முடிந்தால் கூறுங்கள்.

மாயக்கல்லி மலைக்கும் தயாவுக்கும் உள்ளூராட்சித்தேர்தலில் மு கா யானையில் போட்டியிடுவதற்கும் முடிச்சுப்போட முற்படுவது எவ்வளவு நயவஞ்சகத்தனமானது.  ( மாயக்கல்லிமலைப் பிரச்சினை வேறாகப் பேசப்பட வேண்டும்; அதற்குள் நான் தற்போது வரவில்லை). உங்களுக்கு முடிந்தால் இந்தத் தேர்தலை இந்த மாயக்கல்லி மலையுடனும் தயாவுடனும் எவ்வாறு முடிச்சுப் போடுகின்றீர்கள்; என்று பகுத்தறிவு ரீதியாக விளக்கம் தாருங்கள். முடியுமா உங்களுக்கு?

அதேநேரம் தயாகமகேவை கிழக்கு முதலமைச்சராக்கி அழகுபார்க்க முற்பட்டவர்கள் யார்? அதற்கு குறுக்கே நின்றது யார்? என்ற வரலாற்று உண்மைகளும் வெளிக்கொணரப்படவேண்டிய நேரம் வந்திருக்கின்றது. இன்ஷாஅல்லாஹ்

மு கா விற்கு வாக்களிப்பதும் வாக்களிக்காமல் விடுவதும் வேறு விடயம். ஆனால் நேர்மையாகப் பேசுங்கள். உண்மையைப் பேசுங்கள். உண்மையுமில்லாத, நேர்மையுமில்லாத நீங்கள் மு காவிற்கு மாற்றீடாக முடியுமா? நீங்கள் 24 கரட் ஆக முடியுமா?

நாங்கள் பொய்யர்களா? நயவஞ்சகர்களா? ஊழல் வாதிகளா? என்றெல்லாம் பார்க்காதீர்கள். ரவூப் ஹக்கீம் பிழை, எனவே எங்களுடன் சேருங்கள்; எங்களுக்கு வாக்களியுங்கள்; என்கீறீர்கள்.

ரவூப் ஹக்கீம் பிழைதான் மறுக்கவில்லை; ஆனால் ரவூப் ஹக்கீமைவிட எந்தவிதத்தில் நீங்கள் சிறந்தவர்கள்; எனக் கூறுங்கள். நாளை உங்கள் மேடையில் ஏறுவதற்கு வருகின்றேன்!

முடியுமா உங்களால்???

Related posts

சமூகத்திற்கு ஆபத்து என்றால் எதற்கும் அடிபணிய மாற்றோம் -அமைச்சர் றிஷாட் (விடியோ)

wpengine

அரசியல் சாக்கடையில் காலம் என்னையும் வீழ்த்தியது – யாழில் மஸ்தான் எம்.பி தெரிவிப்பு

wpengine

மாயக்கல்லி மலையில் பௌத்த வழிபாடுகள்! முஸ்லிம் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் எங்கே?

wpengine