அண்மையில் திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற முஸ்லிம் ஆசிரியை மீது நிகழ்த்தப்பட்ட சம்பவத்திற்கு எமது வருத்தங்களை தெரிவித்துக் கொள்கின்றோம். குறித்த சம்பவத்திற்கு யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்கள் தமது கண்டனங்களை பதிவு செய்து கொள்கின்றனர்.
ஒரு சில அரசியல் பிரதிநிதிகள் தமது சுயலாப அரசியல் நடவடிக்கைகளுக்காக கல்விச் சமூகத்தைப் பயன்படுத்தி தமக்கு சார்பான ஊடகங்களின் வாயிலாக வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களாக ஒன்றுமையுடன் இணைந்து வாழ்ந்து வரும் தமிழ் முஸ்லிம் மக்களை பிரிக்க நினைக்கும் செயற்பாடே மீண்டும் அரங்கேற்றப்பட்டிருக்கின்றது.
இவ்வாறு தமிழ் பேசும் மக்களை தமது சுயநல அரசியல் இலாபத்திற்காக கூறுபோட நினைக்கும் சதிகாரர்களின் எண்ணங்கள் நிறைவேற ஒரு போதும் நாம் அனுமதிக்க முடியாது. இவ்வாறான சதி முயற்சிகளை ஆரம்பத்திலேயே நாம் அப்புறப்படுத்த வேண்டும். இது தொடர்பில் மக்கள் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக சிந்தித்து தமது உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
எந்த தீய மற்றும் அரசியல் சதி முயற்சிகளும் தமிழ் பேசும் மக்களை பிரிக்க முடியாது என்பதை இங்கு மீண்டும் ஒருமுறை கூறி, இவ்வாறான சதி முயற்சிகளை தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இனியும் மேற்கொள்ள நினைப்போர் தமது முயற்சிகளை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம்.
எனவே இனியும் தாமதிக்காமல் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்கள் ஒன்றினைந்து சதிகாரர்களின் முயற்சிகளை தோக்கடித்து தமிழ் பேசும் மக்களின் ஒன்றித்த முன்னோக்கிய பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்வோமாக என்று பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றோம். இதனை மக்கள் தமது செயற்பாடுகளில் முன்போன்று காட்டுவார்கள். அதுவே உண்மை. தமிழ் – முஸ்லிம் மக்களை ஒருபோதும் பிரித்து கூறுபோட முடியாது என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்துவதுடன், நாம் “தமிழ் பேசும் மக்களாக” தொடர்ந்தும் முன்னோக்கி பயணிப்போம்.
வஸ்ஸலாம் – இவ்வண்ணம்
யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்கள் சார்பாக
என்.எம். அப்துல்லாஹ்
தலைவர்
என். மில்ஹான் பாரிஸ்
செயலாளர்
யாழ் முஸ்லிம் இளைஞர் கழகம்