கொழும்பு, கொட்டாஞ்சேனையில் நேற்றிரவு நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் சந்தேக நபர்கள் இருவரும் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர்.
பிலியந்தலை, மடபாத்தை பிரதேசத்தில் வசித்த 32 வயதான அருண லக்மால் ஜயவர்த்தன மற்றும் கொழும்பு முகத்துவாரம் பிரதேசத்தைச் சேர்ந்த விஜயகுமார் பிரகாஷ் ஆகியோரே பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரான சசிகுமார் என்பவர் உயிரிழந்திருந்தார். உயிரிழந்தவர் தலவாக்கலை, பேவல் தோட்டத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
T-56 துப்பாக்கியை பயன்படுத்தி அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு, கொலையாளிகள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற நிலையில், ஒருகொடவத்தையில் வைத்து பொலிஸாரால் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், சந்தேக நபர்கள் இருவரும் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை காட்டுவதற்காக பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில், பொலிஸாரின் துப்பாக்கியைப் பறித்து பொலிஸார் மீதே துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டுள்ளனர்.
இதனால் பொலிஸாரின் பதில் துப்பாக்கிச் சூட்டில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.