[ எம்.ஐ.முபாறக் ]
இஸ்லாமியப் பேரரசு [கிலாபத் ] என்ற சுலோகத்தோடு 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தோன்றிய ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பு சிரியாவின் ஒரு பகுதியையும் ஈராக்கின் ஒரு பகுதியையும் கைப்பற்றி சுயாட்சியைப் பிரகடனப்படுத்தியது.
தங்களுடன் இணையுமாறு உலக முஸ்லிம்களுக்கு இந்த இயக்கம் அழைப்பு விடுத்தது.இஸ்லாமிய பேரரசு என்ற பதத்தால் கவரப்பட்ட-ஏமாற்றப்பட்ட ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் இதில் இணைந்து கொண்டனர்.இன்னும் இணைவு தொடர்கின்றது.ஐரோப்பாவைச் சேர்ந்த இளைஞர்களே இதில் அதிகம்.
சுன்னி முஸ்லிம் பிரிவாகத் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட ஐ.எஸ்.,ஈராக்கிலும் சிரியாவிலும் உள்ள ஷிஆ அரசுகளை எதிர்த்துப் போராடி வருவதாகக் காட்டிக் கொண்டி எல்லாவிதமான பயங்கரவாத செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றது.இந்த இயக்கத்துக்கு எதிராக விமானத் தாக்குதல்களை அமெரிக்கா 2014 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் தொடங்கி இப்போது வரை நடத்திச் செல்கின்றது.ஆனால்,எந்தப் பயனும் இதுவரை கிட்டவில்லை.
சிரியாவில் போராடும் ஐ.எஸ் இயக்கத்துக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவதற்காக சிரியா ஜனாதிபதி பசார் அல் அசாத் உலக நாடுகளின் உதவியை நாடினார்.ரஷ்யா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் உதவிக் கரங்களை நீட்டின;ஐ.எஸ்.இலக்குகள் மீது விமானத் தாக்குதல்களை நடத்துகின்றன.

இதற்குப் பலி வாங்கும் விதமாக ஐ.எஸ் இயக்கம் ரஷ்யாவின் பயணிகள் விமானம் ஒன்றைக் குண்டு வைத்து அழித்ததோடு பிரான்ஸ் தலைநகர் பரீஸிலும் பெல்ஜியத்திலும் குண்டுத் தாக்குதலை நடத்தி அப்பாவிப் பொதுமக்களைக் கொன்றது.
இதனைத் தொடர்ந்து ஐ.எஸ்கள் மீதான விமானத் தாக்குதல்களை தீவிரப்படுதுவதாக அமெரிக்கா கூறியது.
இருந்தாலும்,இவ்வாறான தாக்குதல்கள் ஐ.எஸ்.இயக்கத்தை முற்றாக ஒழித்துக்கட்டுவதற்கான தாக்குதல்கள் அல்ல எனப்ததுதான் உண்மை.
அமெரிக்கா 2014 ஓகஸ்ட் முதல் இப்போது வரை ஐ.எஸ் அமைப்பு மீது 8000 இற்கு மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளபோதிலும்,இந்தத் தாக்குதல்களால் ஐ.எஸ்.அமைப்பு பலவீனமடைந்ததாகத் தெரியவில்லை.அதைப் பலவீனப்படுத்துவதற்கான தேவையும் அமெரிக்காவுக்கு இல்லை.அந்த அதிகரித்த விமானத் தாக்குதல்களால் மக்களுக்குத்தான் அதிக சேதங்கள் ஏற்படுகின்றன.அந்த நிலைமை மக்களின் ஆதரவை ஐ.எஸ் இயக்கத்துக்குப் பெற்றுக் கொடுத்துவிடுகிறது.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள்மீது அமெரிக்கா நடத்தி வரும் விமானத் தாக்குதல்கள் இதற்கு நல்ல உதாரணமாகும்.இந்தத் தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான்.இதனால் பொதுமக்களின் ஆதரவு தலிபான்களுக்கு அதிகரித்துள்ளதை ஏற்றே ஆகவேண்டும்.அதேபோல்,ஐ.எஸ் மீதான அமெரிக்காவின் விமானத் தாக்குதல்களும் ஐ.எஸ் இயக்கத்துக்கு மேலும் உறுப்பினர்களைச் சேர்க்கும் பிரசாரமாக அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
.ஐ.எஸ்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் ஒரு நாடகம் என்பதை அறியாத முஸ்லிம் இளஞர்கள் அந்த இயக்கத்துடன் தொடர்ந்தும் இணையவே செய்கின்றனர்.ஒருபுறம்,ஐ.எஸ்கள் மீது தாக்குதல்கள் நடத்துவதாக-அவர்களை அழித்தொழிப்பதாகக் காட்டிக் கொண்டு மறுபுறம்,ஐ.எஸ்கள் இயக்கத்தை பலப்படுத்தும் வேலையைத்தான் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் செய்து வருகின்றன.
இதுவரை காலமும் இளைஞர்களை மாத்திரம் குறி வைத்து தங்களது அமைப்பில் சேர்த்து வந்த ஐ.எஸ்கள் இப்போது சிறுவர்கள்மீதும் குறி வைத்துள்ளனர்.சிறுவர்கள் மனங்களில் சிறுவயது முதலே ஆயுதங்கள் மீதான கவர்ச்சி ஏற்பட்டு அவற்றை அவர்கள் நாடும் நிலையை ஐ.எஸ்கள் ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த ஆயுதங்களின் படங்களை உதாரணங்களாகக் கொண்டு சிறுவர்களுக்கு அரபி மொழியைக் கற்பிக்கும் மென்பொருள் ஒன்றை ஐ.எஸ்கள் தயாரித்து வெளியிட்டுள்ளனர்.சிறுவர்களைக் கூட விட்டுவைக்காது அனைவரையும் இந்த ஆயுதக் கலாசாரத்துக்குள் இழுத்துப் போட்டு பேரழிவை ஏற்படுத்துவதுதான் இந்த இயக்கத்தின் நோக்கமாகும்.
2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐ.எஸ் அமைப்பின் சிறுவர் போராளிகள் பயிற்சி பெறும் வீடியோ ஒன்றையும் அவர்கள் வெளியிட்டிருந்தனர்.அதனைத் தொடர்ந்தே இப்போது இவர்கள் மேற்படி மென்பொருளை வெளியிட்டுள்ளனர்.
இதன் மூலம் கிலாபத் என்பது இதுதான்.உலக ஆட்சி முறைமைக்கு எந்தவையிலும் ஒத்துப் போகாததுதான் இந்த கிலாபத் முறைமை என்ற ஒரு பொய்யான செய்திக்கு மேலும் வலுவூட்டுவதற்காகவே ஐ.எஸ்களின் இந்தச் செயற்பாடுகள் இருக்கின்றன.
தமது செயற்பாடுகள் பயங்கரவாதத்தைச் சார்ந்தது என்று அறியாத அப்பாவி இளைஞர்கள் அதைப் புனிதப் போராகக் கருதுகின்றனர்.அதனால்தான் அவர்கள் அவர்களின் பெறுமதிமிக்க உயிர்களைக் கொடுத்துத் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கும் தயங்குவதில்லை.
அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவதும் சொத்துக்கள் சூறையாடப்படுவதும் சரியே என இந்த இளைஞர்களுக்கு அவர்களது பயங்கரவாத முதலாளிமார் போதித்துள்ளனர்.மற்றவர்களுக்கு த் தொல்லை ஏற்படுமாக இருந்தால் புனித குரானைக் கூட சத்தமின்றி ஓதுமாறு போதித்த இஸ்லாத்தை ஏற்றுள்ள இந்த இளைஞர்கள் அந்தப் போதனைக்கு மாற்றமாகச் செயற்படுகின்றனர்.இஸ்லாத்தின் போதனையை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு இஸ்லாத்துக்காக எதைச் செய்தாலும் அது நியாயம்தான் என அவர்கள் நினைக்கும் அளவுக்கு அவர்களுக்கு இஸ்லாம் பிழையாகப் போதிக்கப்பட்டுள்ளது.மூளை நன்கு சலவை செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாத்தை உலகிற்குப் பிழையாகச் சித்திரித்துக் காட்டுதல்,உலக நாடுகளில் இஸ்லாத்தை வளரவிடாமல் தடுத்தல் மற்றும் முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒரு பேரரசின் கீழ் [கிலாபத்தின் கீழ்]வந்துவிடாமல் தடுத்தல் போன்ற பல நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக இந்த ஆயுதப் போராட்டங்கள்-பயங்கரவாதச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.முஸ்லி ம் நாடுகளில் மட்டும் இவை இடம்பெறுவதால் அதன் நோக்கம் மிகத் தெளிவாகத் தெரிகின்றது.
ஐ.எஸ் மற்றும் போகோ ஹராம் போன்ற அமைப்புகளின் செயற்பாடுகளை உற்றுநோக்கினால் இஸ்லாத்தை அவமதிப்பதற்கான-அதை ஓர் அடிப்படைவாத மதமாகக் காட்டுவதற்கான-இஸ்லாத்தை இந்த உலகில் இருந்து துடைத்தெரிவதற்கான பாரிய சதித் திட்டம் ஒன்று இந்தச் செயற்பாடுகளின் பின்னல் இருப்பதைக் காணலாம்.
உலக நாடுகளுக்கு இந்த ஐ.எஸ்.அமைப்புப் பெரும் தலை இடியாக மாறியுள்ளது.முஸ்லிம்களைக் கொண்டே முஸ்லிம்களை அழிப்பதற்கும்,அகன்ற இஸ்ரேல் திட்டத்தை நிறைவேற்றுவதற்கும், அமெரிக்காவுக்கு எதிரான ஆயுதக் குழுக்களை அழிப்பதற்கும் உருவாக்கப்பட் இந்த அமைப்பு மிக விரைவில் ஒழித்துக்கட்டப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.