பிரதான செய்திகள்

களஞ்சியசாலைகளில் உள்ள நெல்லை விடுவிக்க தீர்மானம்: அரிசி இறக்குமதியில் மாற்றமில்லை

சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டிற்கு தீர்வு வழங்கும் வகையில், அரசாங்கத்தின் களஞ்சியசாலைகளில் உள்ள ஒன்றரை இலட்சம் மெட்ரிக் தொன் நெல்லை விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது அரசாங்கத்தின் கையிருப்பிலுள்ள இரண்டு இலட்சம் மெட்ரிக் தொன் நெல்லில் 75 வீதத்தை அரிசி உற்பத்திக்காக விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதுபற்றி அகில இலங்கை கமநல சேவை சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர், நாமல் கருணாரத்ன தெரிவித்ததாவது,

28 அல்லது 34 ரூபாவிற்கு இடைப்பட்ட தொகையில் கொள்வனவு செய்த நெல்லையே அரிசியாக மாற்றி விற்கவுள்ளனர். இதனை 60 ரூபாவிற்கு வழங்க முடியும். எனினும், 90 ரூபாவிற்கு விற்பனை செய்கின்றனர். இந்த பின்புலத்தில் பிரதான மூன்று அரிசி ஆலை உரிமையாளர்களிடம் 10 இலட்சம் மெட்ரிக் தொன் நெல் கையிருப்பில் உள்ளது. எனினும், அரசாங்கத்திடம் 2 இலட்சம் நெல்லே உள்ளது. இதன்மூலம் சர்வாதிகார நிலைமை உருவாகியுள்ளது. தம்புத்தேகம பிரதேச களஞ்சியசாலையிலுள்ள நெல்லை, நாட்டின் பிரபல ஆலை உரிமையாளர் ஒருவருக்கு வழங்கியுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்மூலம் அமைச்சர்களுக்கு தரகுப்பணம் கிடைக்கிறது. எனவே, இதுகுறித்து எமக்கு பாரிய சந்தேகம் நிலவுகின்றது.

என தெரிவித்தார்.

இதேவேளை, நெல் விடுவிப்பின் போது சிறிய மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த ஆலை உரிமையாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் நெல்லை அரிசியாக்கி சந்தையில் விடுவிக்கும் போது அரிசிக்கு நிலவும் தட்டுப்பாடு நீங்கும் என்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் எனவும் நெல் சந்தைப்படுத்தல் சபைத் தலைவர் எம்.பீ.திசாநாயக்க குறிப்பிட்டார்.

தமது கையிருப்பிலுள்ள நெல்லை அரிசி உற்பத்திக்காக விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள போதிலும், அரிசி இறக்குமதி செய்வதற்கான தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை.

ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் அரிசி தேவைப்படுகின்ற நிலையில், பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களிலேயே அடுத்த போகம் வரவுள்ளமையால், பாதுகாப்புக் கருதி அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

Related posts

பதில் கடமையாற்றும் அதிபர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை

wpengine

அதிக விலையில் உரம் விற்பனை முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்.

wpengine

உள்ளூராட்சி மன்ற திருத்தச் சட்டமூலம் – உயர் நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு!

Editor