பிரதான செய்திகள்

கல்விப்பணி புரிந்தோரை காலம் அழிக்காது

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

“கற்பவனாய் இரு கற்பிப்பவனாய் இரு கல்விக்கு உதவுபவனாய் இரு” என்ற வசனத்திற்கு ஏற்ப வாழ்ந்த ஓய்வு பெற்ற அதிபரும் முன்னைநாள் குவாசி நீதிபதியுமாகிய எஸ். ஆதம்பாவா எம்மை விட்டும் மறைந்து இன்றுடன் ஒன்பது வருடங்களாகின்றன.

ஆர்ப்பரிக்கும் கடலும் பச்சைப் பசேலென்ற வயல் வெளியும் சூழ்ந்திருக்கும் தென்கிழக்கின் முக வெற்றிலையாம் கல்முனையில் கல்முனைக்குடிக்கிராமத்தில் மீராலெப்பை சிக்கந்தருக்கும் காசிம் பாவா அவ்வாஉம்மாவிற்கும் தலைமகனாக 1930. 08.07ஆம் திகதியன்று பிறந்தார்.

தனது ஆரம்பக்கல்வியை இன்று கமு/ அல்-அஸ்ஹர் வித்தியாலயம் என்று அழைக்கப்படுகின்ற கல்முனைக்குடி அரசினர் ஆண்கள் பாடசாலையில் கற்றார்.1943ஆம் ஆண்டு இலங்கையின் வரலாற்றில் முதற்தடவையாக நடைபெற்ற5ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து காத்தான்குடி மத்திய கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார். இவருடன் அதேபாடசாலையிலிருந்து முன்னாள் வர்த்தக வாணிப அமைச்சர் சட்டத்தரணி ஏ.ஆர். மன்சூரும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்விப் பொதுத்தராதர பரீட்சையில் சித்தியடைந்ததன் பின்னர் தனது சொந்தச் செலவில் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் இருவருட ஆசிரியர் பயிற்சியை முடித்துக் கொண்டார். அதன் பின்னர் முதல் ஆசிரிய நியமனம் 1.06.1954 இல் ஹம்பாந்தோட்டை முஸ்லிம் வித்தியாலயத்திற்குக் கிடைத்தது. அப்பாடசாலை இன்று ஹம்பாந்தோட்டை ஸாஹிறா கல்லூரி என்று அழைக்கப்படுகின்றது. எஸ். ஆதம்பாவா அதிபரிடம் கல்வி கற்ற பலர் இன்று உயர் பதவிகளை வகிக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து சாய்ந்தமருது ஆண்கள் வித்தியாலயம் கல்முனைக்குடி ஆண்கள் வித்தியாலயம் மற்றும் ஓட்டமாவடி முஸ்லிம் மஹா வித்தியாலயம் போன்றவற்றிலும் ஆசிரியராகக் கடமையாற்றினார். மீண்டும் 01.01.1962 இல் தான் கற்ற பாடசாலையான  கல்முனைக்குடி ஆண்கள் வித்தியாலயத்திற்கு மீள நியமனம் கிடைத்ததும் அன்றிருந்த அரசியல்வாதிகள் மூலம் இப்பாடசாலையை அபிவிருத்தி செய்தார்.

தனது சிறப்பான சேவையின் காரணமாக 01.01.1963ஆம் ஆண்டு அதிபராகப் பதவி உயர்வு பெற்று அ/ கஹட்டகஸ்திலிய முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபராகப் பதவியேற்றார். அக்காலத்தில் சிங்களப்பாடசாலையின் ஒரு பகுதியாக விளங்கிய அப்பாடசாலையை தனிப்பாடசாலையாக அமைத்து ஆறரை வருடங்கள் கடமையாற்றி அப்பாடசாலையை மஹா வித்தியாலயமாக தரமுயர்த்தினார். இதனை அப்பகுதி மக்கள் இன்றும் நினைவு கூருகின்றனர்.

பின்பு 01.10.1968 இல் கல்முனை அல்- மிஸ்பாஹ் வித்தியாலயத்தில் கடமையேற்று அப்பாடசாலையின் அபிவிருத்திக்காக பாடுபட்டார். இவரது அதிபர் சேவையின் அதிகமான காலத்தை அன்றைய கடற்கரை பாடசாலை என்றழைக்கப்பட்ட இன்றைய அல்- பஹ்ரியா மஹா வித்தியாலயம் பெற்றுக் கொண்டது. 01.11.1974 இல் இப்பாடசாலையின் அதிபராகக் கடமையேற்று தான் ஓய்வுபெறும் வரை சுமார் பதினேழு ஆண்டுகள் இப்பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றினார். இப்பாடசாலை பெயர் மாற்றம் பெற்றதோடு, பாடசாலையின் பௌதீக கல்வி வளர்ச்சியில் அதீத அக்கரை காட்டினார். தனது பாடசாலை நண்பனான அன்றிருந்த மக்கள் பிரதிநிதி ஏ.ஆர். மன்சூர் மூலம் பாடசாலையின் கட்டிடத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டன. பாடசாலை கல்வி ரீதியிலும் வளர்ச்சி கண்டது. இவரது சேவை காரணமாக 61 வயது மட்டும் சேவை நீடிப்பு வழங்கப்பட்டது. அன்றைய காலத்தில் இலங்கையில் இத்தகைய சேவை நீடிப்பு வழங்கப்பட்டவர்கள் இருவரே இருந்தனர். ஒருவர் எஸ். ஆதம்பாவா மற்றையவர் முன்னைநாள் டீ. எஸ். சேனநாயக்க கல்லூரி அதிபர். ஆர். ஐ.ரி. அலஸ்.

தான் கல்விச் சேவை புரிந்து கொண்டிருந்தபோது சமூக சேவையிலும் அதீத ஈடுபாடு காட்டுபவராக இருந்து வந்தார். கல்முனைக் குடி ஜும்ஆப் பள்ளிவாசலின் நம்பிக்கையாளராக 1975ஆம் ஆண்டு தொடக்கம் 1989ம் ஆண்டு வரை கடமை புரிந்தார். இவர் நம்பிக்கையாளராக இருந்த காலத்திலேயே பள்ளிவாசல் புனரமைப்புப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அகில இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினராகவும் கல்முனை மாவட்டக் கிளைத்தலைவராகவும் கடமையாற்றினர்.

இவ்வாறு பல பணிகளில் ஈடுபட்ட இவர், 1996ஆம் ஆண்டு தொடக்கம் 2004ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் முழுக்கரைவாகுப்பிரதேசத்திற்குமான குவாசி நீதிபதியாப் பணியாற்றினார். சமாதான நீதவானான ஆதம்பாவா தான் வாழ்ந்த சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல்வேறு வழிகளிலும் முன்னின்று உழைத்தார். கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளராக மரணிக்கும் வரை சுமார் 15 ஆண்டுகள் கடமையாற்றினார்.

எழுத்து ஆக்கத் துறையில் ஈடுபாடு காட்டிய அவர், நாடாரிலக்கியத்தில் பாண்டித்தியம் பெற்றவர். இவருடைய ஆக்கங்கள் பல புத்தகங்களிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன.

ஹாஜி உஸ்மான் சாஹிபுடன் இணைந்து கல்முனைக்குடி ஜும்ஆப்பள்ளிவாசல் வரலாறு மற்றும் வரலாற்று பேழை ஆகிய நூல்களை இணையாசிரியராக இருந்து வெளியிட்டார்

என்றும் கோட் அணிந்தவராக புன்முறுவல் பூத்த முகத்துடன் தன்னை நாடி வருவோருக்கு சேவை செய்பவராகவே இருந்து வந்தார்.

கல்முனைக்குடியின் முதல் பயிற்றப்பட்ட பெண் ஆசிரியையான ஓய்வு பெற்ற அதிபர் ஆயிஸா ஆதம்பாவாவை தனது வாழ்க்கைத் துணையாக கரம் பிடித்த எஸ். ஆதம்பாவாவுக்கு இரு பெண் பிள்ளைகள். சிரேஸ்ட புதல்வி ஆத்திகா சேகு முகம்மட் கல்முனை அல்- மிஸ்பாஹ் வித்தியாலய ஆசிரியை, இவரது கணவர் எம். எஸ். முகம்மட் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றுகின்றார். கனிஸ்ட புதல்வி சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிகா காரியப்பர் இவரது கணவர் சிரேஷ்ட சட்டத்தரணி முகம்மட் ஷாரிக் காரியப்பர்.  ஏழு சகோதர சகோதரிகளுடன் பிறந்த அதிபர் எஸ். ஆதம்பாவாவின் மூத்த சகோதரியின் மகனே விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சர் சட்டத்தரணி. எச். எம். எம். ஹரீஸ் ஆவார்.

தான் வாழும் போதே பிறருக்கு உதவுவதையும் வழிகாட்டுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தவர். இப்பிரதேசத்தில் இன்று ஆசிரியர்களாக இருப்பவர்கள் அத் தொழிலைப் பெற்றுக் கொள்ள உந்து சக்தியாக இருந்தவர்.

தனது ஓய்வு நிலையில் மார்க்கப் பணிகளில் அதிகம் ஈடுபாடு கொண்டிருந்தவர் தனது மனம் போன்று தனது உடன்பிறப்புகள் பிள்ளைகள் சுற்றத்தவர் சூழ்ந்திருக்க றமழான் மாதம் 26ஆம் நாளன்று 2008ஆம் ஆண்டு செப்டம்பர்27ஆம் திகதி தனது 78ஆம் வயதில் இறையடி சேர்ந்தார்.

Related posts

28ஆம் திகதி ஐ.நா கூட்டத்தொடர் இலங்கை, மியன்மார், ஆப்கான் தொடர்பில் கூடுதல் கவனம்

wpengine

வித்தியா கொலை! 7பேருக்கு மரண தண்டனை

wpengine

5வது உதா கம்மான தயா கம்மான விட்டுதிட்டத்தை திறந்துவைத்த சஜித்

wpengine