பிரதான செய்திகள்

கல்விக்காக அதிக நேரம் செலவழித்த அரசியல்வாதி என்றால் நான் தான்

எல்லோரும் ஒற்றுமைப்பட்டு அரசியல் ரீதியான ஒரு முடிவு எடுக்க வேண்டிய நேரத்திற்குள் தள்ளப்பட்டு உள்ளோம் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார்.


அமீர் அலி பௌன்டேசனின் ஏற்பாட்டில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும், வருடா வருடம் வழங்கப்படும் சிஹாப்தீன் மௌலவி விருது வழங்கும் நிகழ்வும் மீராவோடை அல் ஹிதாயா வித்தியாலய வளாகத்தில் இன்று காலை இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

எதிர்வரும் காலங்களில் கல்வி, பாதுகாப்பு பற்றி பேசுவதற்கான தலைப்பே எங்களுக்கு மிஞ்சக் கூடியதாக இருக்கும் என்றே எங்களது ஐதீகம் உள்ளது. இந்த அழுத்தங்களுக்கு மத்தியில் எமது பிராந்தியம் ஒற்றுமைப்படுவது, எங்களுடைய பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக் கொள்வது என்பது எல்லாக் காலங்களிலும் கல்விக்கும் பாதுகாப்புக்குமான ஒரு உறவாக இருக்கும் என்பதால் நான் உங்களோடு பேசுகின்றேன்.


இலங்கையில் கல்விக்காக அதிக நேரம் செலவழித்த அரசியல்வாதி என்றால் என்னை விட யாரும் இருக்க மாட்டார்கள் என்பது எனது மனச்சாட்சி சொல்லும் நியாயமாக உள்ளது. எனது பிரதேசம் கல்வியில் கொடி கட்டி பறக்க வேண்டும். எமது பிரதேசம் கல்வியின் மூலம் உயர் பதவிகளை பலர் பெற வேண்டும் என்ற அவா என்னிடத்தில் உள்ளது என்றார்.


அமீர் அலி பௌன்டேசனின் பிரதி தலைவர் வைத்தியர் எஸ்.ஏ.ஏ. அப்தாப் அலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஹலீல், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச பாடசாலை அதிபர்கள், கல்வியலாளர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.


இதன்போது ஓட்டமாவடிக் கல்விக் கோட்டத்தின் கீழ் உள்ள பாடசாலைகளில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், சிஹாப்தீன் மௌலவி விருது ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். ஹலீலுக்கு வழங்கி வைக்கப்பட்டது.


அத்தோடு கல்விக்கு உதவி வழங்கும் பள்ளிவாயல் என்ற வகையில் மீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாயல் நிருவாகத்தினருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

Related posts

மன்னார், நறுவிலிக்குளம் காற்றாலை மின் சக்தி நிலையத்திற்கு எதிராக மக்கள் எதிர்ப்பு போராட்டம்!

Editor

கொத்து ரொட்டி விவகாரம் கொலையில் முடிந்தது! ஒருவர் மரணம்

wpengine

“எழுக தமிழ்” எழுச்சி பெற! பா.டெனிஸ்வரன் அழைப்பு

wpengine