பிரதான செய்திகள்

ஒற்றுமையை குலைக்கும் சக்திகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்

இலங்கையில் மிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம் நாட்டில் வன்முறையை தோற்றுவித்து இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை குலைக்கும் சக்திகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு உட்பட பல பிரதேசங்களில் ஞாயிற்றுக் கிழமை மேற்கொள்ளப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இந்த சம்பவத்தை யார் செய்தாலும் அவர்களுக்கு எதிரான அனைத்து கடுமையான நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்க வேண்டியதுடன், இவ்வாறான மிலேச்சத்தனமான சம்பவங்களின் பின்னணி தொடர்பில் கண்டறிந்து இந்தநாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் சக்திகளை இனம் கண்டு அவற்றை துடைத்தெறிந்து மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

அப்பாவி கிறிஸ்தவ மக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியமை கண்டிக்கத்தக்கது.

இவ்வாறான பயங்கரவாத செயற்பாடுகளால் இதனை மேற்கொண்டவர்கள் எத்தகைய இலாபத்தை அடையப்போகின்றார்கள் என்பது தெரியவில்லை.

இது போன்ற மனித நேயமற்ற தாக்குதல்களை ஒரு போதும் எம்மால் ஏற்றுக் கொள்ளமுடியாது. குறிப்பாக இஸ்லாமியர்கள் ஒரு போதும் வன் முறைகளை நாடியதில்லை என்பதற்கு எமது நாட்டில் பல உதாரணங்களை கூறலாம்.

இஸ்லாமிய மதம் எந்த சந்தர்ப்பத்திலும் ஏனைய சகோதரர்களின் உயிரினை பறிக்கும் அதிகாரத்தினை எவருக்கும் வழங்கவில்லை என்பதை தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.

சமாதானம், சாந்தி அகிம்சை என்பனவற்றை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் மதமாக இஸ்லாம் இருக்கின்றது. குறிப்பாக பல்லின சமூகங்கள் வாழும் நாட்டில் இவ்வாறானதொரு குரூரச் சம்பவம் மனித மனங்களால் நினைத்தும் பார்க்க முடியாததொன்று.

இந்த தாக்குதலின் பின்னணி கண்டறியப்படல் வேண்டும், அதற்கான துரித செயற்பாடுகளை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் மேற்கொள்ள வேண்டும்.

இந்த அநாகரிகமான செயலை மேற்கொண்ட எவராயினும், தகுதி, தராதரம், சாதி, இனம், மதம் பாராது உரிய தண்டனை வழங்கப்படல் வேண்டும் என அமைச்சர் விசேட அறிக்கை ஒன்றின் மூலம் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.

Related posts

ஆணொருவர் புர்கா அணிந்து சென்ற சம்பவத்தால் பதற்றம்

wpengine

ஒரு மூடை உரத்திற்கு 2,500 ரூபா கட்டுப்பாட்டு விலை! ஜனாதிபதி அறிவிப்பு

wpengine

மரிச்சிகட்டி பகுதியில் வாகன விபத்து (படம்)

wpengine