பிரதான செய்திகள்

“என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், 15 இலட்சம் ரூபா வரை பிணை இன்றி இலகுகடன் வசதி!!!

“என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், 15 இலட்சம் ரூபா வரை பிணை இன்றி இலகுகடன் வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.


இந்த இலகுக் கடனுக்காக வருடத்துக்கு 6.5% வீத வட்டி மட்டுமே செலுத்த வேண்டும்.

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் ஆலோசனையில், நிதி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் “என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களின் வியாபார நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கான குறைந்தபட்ச வட்டி நிவாரணக் கடன்களை வழங்குவதை நடைமுறைக்கு கொண்டு வருவதே, இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.

அந்த வகையில் “என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா” தேசிய கண்காட்சித் தொடரின் 03 வது கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நேற்று (07) ஆரம்பமானது. இந்த நிகழ்வில் பங்கேற்க நிதி அமைச்சர் மங்கள சமரவீர கடந்த வெள்ளிக்கிழமை (07) யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

அந்தவகையில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விதவைகள், இளம் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் தங்கள் சுயதொழில் வியாபாரங்களை ஆரம்பிப்பதற்காகவும், வியாபாரங்களை விரிவுபடுத்துவதற்காகவும் நிதியை பெற்றுக்கொள்வதில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து, யாழ்ப்பாணம், மாவட்ட செயலகத்தில் நிதி அமைச்சரின் தலைமையில், இன்று (08) கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இரண்டு கட்டமாக இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், சுயதொழில் முயற்சிகளுக்காக கடன்களை பெற்றுக்கொள்வதில் காணப்படும் சிக்கல்கள் மற்றும் அவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில், விரிவாக ஆராயப்பட்டது.

சுயதொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கான கடன்களை பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் இருக்குமானால் அவற்றை அரச வங்கிகளுடன் இணைந்து எவ்வாறு தீர்ப்பது? என்ற விடயம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

முன்னாள் போராளிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த இலகு கடன் திட்டத்தில் விஷேட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலகு கடன் தொடர்பிலான அவர்களினது பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர் மங்கள சமரவீர, அவற்றுக்கான தீர்வுகளை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி துரிதகதியில் பெற்றுக்கொடுத்தார்.

இந்தக் கூட்டத்தில் யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்ணல்ட், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், நிதி அமைச்சின் உயரதிகாரிகள் மற்றும் அரச வங்கிகளின் பிராந்திய முகாமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்தனர் சுமந்திரனும், சாணக்கியனும்!

wpengine

எங்களது இராணுவம் பல சாதனைகளைபடைத்து! மக்களையும் காப்பாற்றியுள்ளது.

wpengine

சகல பாடசாலைகளும் நாளை முடங்கும்: இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கமும் ஆதரவு

wpengine