பிரதான செய்திகள்

எனது பொலிஸ் வேலையை தாருங்கள்-கண்கலங்கும் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்

பாறுக் ஷிஹான்-FAROOK SIHAN

விடுதலைப்புலி ஆதரவாளர் என குற்றஞ்சாட்டி பொலிஸ் சேவையில் இருந்து நிறுத்தி விட்டார்கள்.இப்போது கூலி வேலை செய்தும் பயிர் செய்கை செய்தும் தான் எனது குடும்பத்தை நடாத்துகின்றேன் என முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் பரமநாதன் அனுராஜ் தெரிவித்தார்.

2008 ஆம் ஆண்டு ஆயுத குழு ஓன்றினால் கடத்தி செல்லப்பட்டு சுட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் பரிசோதனைக்காக தோண்டி எடுக்கும் பணிகள் இரண்டாவது தடவையாகவும் முன்னெடுக்கபட்டு  எந்தவித மனித எச்சங்களும் இது  வரை மீட்கப்படாத நிலையில் தோண்டும் பணிகள் இடைநிறுத்தப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில்

கடந்த 2008 ஆண்டு கொக்கட்டிசோலை பகுதியில் வைத்து எனது மனைவியின் தம்பி காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.நானும் எனது மாமாவும் கொக்கட்டிசோலைக்கு வருகின்ற போது எங்களை பின்தொடர்ந்து ஆயுததாரிகள் வந்தனர்.இதனால் அச்சமடைந்த நாம் எங்கள் உயிரை மாய்த்து கொள்ளாது இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து விட்டு  அவரை தேடுவதை நிறுத்தி விட்டோம்.இதே வேளை எனது மச்சானை பொலிஸ் உத்தியொகத்தராக நான்  புலனாய்வு செய்து தேடுவதாக நினைத்து விடுதலைப்புலி ஆதரவாளர் என குற்றஞ்சாட்டி பொலிஸ் சேவையில் இருந்து நிறுத்தி விட்டார்கள்.இப்போது கூலி வேலை செய்தும் பயிர் செய்கை செய்தும் தான் எனது குடும்பத்தை நடாத்துகின்றேன்.எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.நான் அவர்கள் கறிப்பிடுவது போன்று  எவ்விதமான குற்றங்களும் செய்யவில்லை.எனது நாட்டுக்காக தான் எனது சேவையை செய்தேன்.எனது குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்பதை பொலிஸ் மா அதிபர் பொலிஸ் சேவை ஆணைக்குழுவினர் அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனக்கு இந்த விடயம் குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு தீர்வொன்றை பெற்றுத்தர வேண்டும்.எனது மைத்துனரின் சடலம் இருப்பதாக கூறி இரு தடவைகள் தோண்டும் முயற்சிகள் இடம்பெற்றது.இதுவரை எந்த தடயங்களும் கிடைக்கவில்லை.எனவே இந்த வழக்கை விரைவாக முடித்து உரிய தீர்வை பெற்றுத்தருமாறு ஜனாதிபதி பொலிஸ் மா அதிபரை கேட்டுக்கொள்கின்றேன்.நான் 1997-6-26 திகதி இலங்கை பொலிஸில் பொலிஸ் உத்தியோகத்தராக இணைந்து கொண்டேன்.10 வருடங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமை புரிந்து கண்டி மாவட்டத்திலும் 2 வருடங்கள் கடமை செய்துள்ளேன்.அந்த காலகட்டத்தில் தான் எனது மைத்துனரான பொலிஸ் உத்தியோகத்தர் காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.இந்த விடயத்தை தேடுவதற்காக நான் எடுத்த முயற்சியின் காரணமாகவே தான் என்னை பொய்குற்றச்சாட்டை முன்வைத்து பொலிஸ் வேலையை விட்டு நீக்கி இருந்தனர்.தற்போது கூட பொலிஸ் உத்தியோகத்தராக தொடர்ந்து இருக்க ஆசைப்படுகின்றேன்.இதனை உரிய தரப்பினர் நடவடிக்கை மேற்கொண்டு பெற்றுத்தர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என கூறினார்.

இதன்போது எந்தவித மனித எச்சங்களும் இது  வரை மீட்கப்படாத நிலையில் தோண்டும் பணிகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இரவு 7.30 மணி வரை அகழ்வு பணிகள் நடைபெற்று நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.பின்னர் சந்தேக நபர்கள் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு குற்றப்புலனாய்வு பிரிவினரால் அழைத்து செல்லப்பட்டனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு மட்டக்களப்பில்  கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஆயுதகுழுவின் முன்னாள் உறுப்பினர்கள் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த சடலத்தினை தோண்டு நடவடிக்கை கடந்த 11.06.2019 மாலை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மீண்டும் வியாழக்கிழமை(18)  தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான்குளத்தைச் சேர்ந்த நாகராசா பிரசாந்தன் வயது (25)  என்ற பொலிஸ் உத்தியோகத்தர் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்றிருந்த  நிலையில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் தனது இறுதி நாள் கடமையினை மேற்கொள்வதற்காக பொலிஸ் நிலையத்தில் இருந்து  வெளியில் சென்றிருந்த நிலையிலேயே இவர் காணாமல் போயிருந்தார்.

இந்த நிலையில் காணாமல் போயுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பாக குற்றப்புலனாய்வுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தாரை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில்  ஆயுதகுழுவின் முன்னாள் உறுப்பினர்களான மகிழன் என்றழைக்கப்படும் மேரி அன்ரனி போல் அஜதீபன்  மதன் என்றழைக்கப்படும்  தம்பிமுத்து செல்வராசா லிங்கன் என்றழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம்   ஆகிய 3 பேரை  சந்தேகத்தில் ஓட்டமாவடி களுவாஞ்சிகுடி கல்லடி போன்ற இடங்களில் வைத்து கடந்த மார்ச் மாதம் குற்றப்புலனாய்வுத்துறையினர் கைது செய்திருந்தனர்.

இவர்களிடம் மேற்கொண்ட விசாரனையில் காணாமல் போயுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் கடத்தப்பட்டு சுட்டு கொல்லப்பட்டு கொக்கட்டிச்சோலை முனைக்காடு மயானத்தில் புதைக்கப்பட்டதாக குற்றப்புலனாய்வுத்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த சடலத்தை தோண்டி எடுப்பதற்கு சிஜடி சப் இன்பொஸ்டர் என். நவரெட்ண மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் கடந்த மாதம் வியாழைக்கிழமை (23) அனுமதிகோரியிருந்தமையின் அடிப்படையில் சடலத்தை   மட்டக்கப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சீ.றிஸ்வான் முன்னிலையில் தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் எந்தவிதமான எச்சங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.

குறித்த சம்பவம் தொடர்பில் குற்றவாளிகலாக 7 பேர் இனங்காணப்பட்ட நிலையில் கபிலன் எனப்படும் சந்தேக நபர் ஏலவே இறந்துள்ளதுடன்  இனியபாரதி மற்றும் சின்னத்தம்பி ஆகிய இருவரும் வெளிநாட்டில் இருப்பதாதாவும் ஏனைய நால்வரில் ஒருவரான மகிழன் எனப்படுபவர் கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் சந்தேக நபர்கள் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைவாக தோண்டப்படும் இடத்திற்கு தயானந்தன்  மதன் என்றழைக்கப்படும்  தம்பிமுத்து செல்வராசா  லிங்கன்  என்றழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம்  ஆகியோர் சம்பவ இடத்திற்கு கடந்த முறை தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது அழைத்துவரப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.  

Related posts

யாழ் மாவட்டத்திற்கு வீதி அபிவிருத்திக்கு 134 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கி அமைச்சர் டெனிஸ்வரன்

wpengine

ஜப்பான்,சிங்கப்பூர்,இந்தியா நிதி உதவியில் திருகோணமலையில் அபிவிருத்தி – அமைச்சர் ஹக்கீம்

wpengine

வடக்கு முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு மீள்குடியேற்றமே!

wpengine