கட்டுரைகள்பிரதான செய்திகள்

எந்த ஒரு தேர்தலையும் மு.கா.எதிர்கொள்ள தயார்

(நவாஸ் சௌபி)
முஸ்லிம் காங்கிரஸ் பற்றிய விமர்சனங்களை முன்வைக்கின்றவர்கள் தற்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வருகின்ற எந்த தேர்தலையும் எதிர்கொள்ள அச்சம் கொண்டிருப்பதாக அதன் மீதான விமர்சனங்களை முன்வைப்பதாகத் தெரிகிறது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேர் படந்திருக்கும் கிழக்கு மாகாணத்தை அடிப்படையாக கொண்டு இவ்விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகவும் இருக்கிறது.

மாடு வரும் முன் வருகின்ற மணியோசை போன்று, தேர்தல் வருவதற்கு முன்பு முஸ்லிம் காங்கிரஸ் பற்றி இவ்வாறான விமர்சனங்கள் வருவதும் வழக்கமே.

கடந்த பாராளுமன்றத் தேர்தல்காலத்திலும் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது, என்ற பிரசாரங்களை முன்வைத்து அதனை விமர்சித்தார்கள். ஆனால் அந்த விமர்சனங்களை எல்லாம் தலைகீழாக புரட்டிப் போட்டதுபோன்று அம்பாறை மாவட்டத்தின் தேர்தல் முடிவு, மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களையும் அமோக விருப்பு வாக்குகளுடன் வெற்றி பெறச் செய்திருந்தது.

இப்படியான பிரசாரங்களுக்கும் விமர்சனங்களுக்கும் மத்தியில்தான், முஸ்லிம் காங்கிரஸ் அதன் மக்கள் பலத்தை ஒவ்வொரு தேர்தல் முடிவுகள் மூலமும் நிரூபித்தும் வருகிறது. இந்நிலையில் தற்போது முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வருகின்ற உள்ராட்சித் தேர்தலை அல்லது மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வதில் தயக்கம் கொள்வதாக அர்த்தமற்ற விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்.

இத்தகைய விமர்சனம் முன்வைக்கப்படுவதற்கு காரணமாக இருப்பது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து இறுதியாக விலகிச் சென்றிருக்கும் பஷீர் சேகுதாவுத் மற்றும் ஹஸன் அலி ஆகிய இருவரையும் வைத்து எதிர்வருகின்ற தேர்தலில் முஸ்லிம் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ{க்கு எதிராக களமிறங்கும் என்ற ஒரு ஊகமே ஆகும்.

இங்கு, முஸ்லிம் கூட்டமைப்பு என்பது ஒரு பெயர்பலகை மட்டும்தான். இதுவரைகாலமும் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து தனித்தனியாக அரசியல் செய்தவர்களும், முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகிச் சென்றதால் தேர்தலில் வெற்றிபெறமுடியாமல் தோற்றுப்போனவர்களும், முஸ்லிம் சமூக அரசியலிலிருந்து முஸ்லிம் காங்கிரஸை அடியோடு அழிக்க வேண்டும் என்று எண்ணுகின்ற அதன் நிரந்தர எதிரிகளும் இறுதியாகச் செய்ய நினைக்கும் ஒரு மொத்த வியாபார அரசியல்தான் இந்த முஸ்லிம் கூட்டமைப்பு என்ற மாயையாகும்.

முஸ்லிம் மக்கள் ஒன்றுகூடி வழங்கும் ஒரு அங்கீகாரத்தால் முஸ்லிம் கூட்டமைப்பு உருவாகப் போவதில்லை. அப்படி ஒரு அங்கீகாரத்தைக் கொடுப்பதற்கு முஸ்லிம் கூட்டமைப்புக்குள் தலைகாட்டும் அரசியல் முகங்களை முஸ்லிம் மக்கள் அறியாதவர்களுமல்ல, அவர்களின் சுயநல அரசியல் தெரியாதவர்களுமல்ல. இந்நிலையில், முஸ்லிம் காங்கிரஸ{க்கு எதிராக அரசியல் செய்கின்ற நான்கு பேர் தாமாக கூட்டுச் சேர்வதற்கு முஸ்லிம் கூட்டமைப்பு என்று பெயர்வைத்தால், அது ஒருபோதும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாஷையாக மாறிவிடாது.

இந்த முஸ்லிம் கூட்டமைப்பு என்ற கோஷத்தை முன்வைப்பவர்கள் யாரும் எமது அரசியலுக்கு புதியவர்களும் அல்ல. இவர்கள் அனைவரும் முஸ்லிம் காங்கிரஸ் என்ற மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் முகவரி பெற்றவர்கள்தான். பழைய பாணத்தை புதிய போத்தலில் அடைப்பது போன்று,  முஸ்லிம் கூட்டமைப்பு என்ற அரசியல் மாயை இருக்கிறது. எவ்வளவுதான் போத்தல் புதிதாக இருந்தாலும் உள்ளே இருக்கும் பாணம் மக்களுக்குப் புளித்துப் போனதுதான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.

சமூக அரசியலுக்காகவும் சமூக விடுதலைக்காகவும் முஸ்லிம் காங்கிரஸ் செயற்படவில்லை என்ற சமூக நோக்கோடு இவர்கள் யாரும் முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்கவில்லை. அவ்வாறு அவர்கள் சொல்லிக்கொண்டாலும் அதில் எத்தகைய நேர்மையும் இல்லை. தங்களின் சுயநலமான பதவி ஆசைகள் நிறைவேறாத போது முஸ்லிம்காங்கிரஸிலிருந்து விலகிவிட்டு, அந்தக் காரணத்தை வெளியில் தெரியாதவாறு மறைப்பதற்கு முஸ்லிம் கூட்டமைப்பு எனும் வெறும் போர்வையால் தங்களின் தலைகளை  மூடிக்கொண்டு மக்களை ஏமாற்றும் பிரசாரங்களைச் செய்துகொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறு, முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகிக்கொள்கின்றவர்கள் முஸ்லிம் காங்கிரஸையும்  அதன் தலைமையையும் விமர்சித்தால் உடனே தாங்கள் சமூகத்தின் மீது அக்கறைகொண்ட அரசியல்வாதிகள் ஆகிவிட்டோம் என்று எண்ணுகின்ற ஒரு மனோநிலை இருக்கின்றது. ஆனால் இவர்கள் யார் என்று மக்கள் இவர்கள் ஒவ்வொருவரையும் அளந்து வைத்திருப்பதை இவர்கள் அறியவில்லை போலும்.

ஆக, முஸ்லிம் கூட்டமைப்பு என்ற கோஷத்தின் பின்னாலுள்ள தேவை என்னவென்றால், பேரம் பேசுவதன் ஊடாக முஸ்லிம் சமூகத்திற்கு பேராபத்தை விளைவிக்ககூடிய பேரினவாதக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து அதன் மூலம் கிடைக்கின்ற வரப் பிரசாதங்களான, பாராளுமன்றக் கதிரைகளையும் அமைச்சுப் பதிவிகளையும் தோற்றுப்போனவர்கள் பெற்றுக்கொள்வதே ஆகும்.

இது நிறைவேற வேண்டுமானால், இன்று முஸ்லிம் சமூகத்தின் ஏக கட்சியாக முஸ்லிம் மக்களின் பெரும் ஆதரவை பெற்றிருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சமூகத்திற்கு எதிரியாகக் காட்டி, அக்கட்சியின் வாக்கு பலத்தைச் சரியச் செய்ய வேண்டும் என்பதற்கு ஏற்றவாறு திட்டமிட்டு செயற்படுகிறார்கள்.

எனவே, கடந்த தேர்தல்களில் தோற்றுப் போனவர்வளும் எதிர்வருகின்ற தேர்தலில் தோற்றுப் போக இருக்கின்றவர்களும் தங்கள் கதிரைகளைப் பிடிப்பதற்கான குறுக்கு வழியாக உருவாக்க நினைக்கும் முஸ்லிம் கூட்டமைப்புக்கு காடு வெட்டி பாதை எடுக்கிறார்கள். பழைய இரும்பைக் கொண்டு புதிய கட்;டடத்தை கட்டப்பார்க்கிறார்கள்.

ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் அங்கீகாரத்தோடும், மக்களின் பலத்தோடும் முஸ்லிம் சமூக அரசியலுக்காக அடையாளம் பெற்ற ஒரு பேரியக்கமாக அதன் பணிகளை மிகவும் பக்குவமாகவும் நிதானமாகவும் செய்துகொண்டே வருகின்றது. இந்நிலையில், எதிர்வருகின்ற தேர்தல் எதுவானாலும் அதனை முஸ்லிம் காங்கிரஸ் எதிர்கொள்ள மக்கள் பலத்துடன் தயாராகவே இருக்கிறது.

இப்படி, முஸ்லிம் காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சியாக அங்கீகாரம்பெற்ற நவம்பர் 1988 காலப்பகுதியிலிருந்து இதுவரை அது எதிர்கொண்ட தேர்தல்கள் எதுவும் மிகச் சாமானியமாக நடந்தவை அல்ல. அவை ஒவ்வொரு தேர்தல்களும் தேசிய அரசியலின் பெரும் சூழ்ச்சிகளுக்குள்ளும் முஸ்லிம் சமூகத்தின் எதிர் அரசியல் செய்கின்றவர்களின் பெரும் சதிகளுக்குள்ளும் வெற்றிகண்டுவந்த வரலாற்றுத் தேர்தல்களாகவே இருக்கின்றன.

குறிப்பாக இதுவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்கொண்ட தேர்தல்களை பின்னோக்கிப் பார்த்தால், அவை ஒவ்வொன்றினதும் வரலாறு உயிர் இழப்புகளாலும் இரத்தம் வடிந்த உழைப்புகளாலும் ஆனதாகவே இருக்கிறது.

1988 இல் நடைபெற்ற முதலாவது கிழக்கு மாகாணசபைத் தேர்தல் ஆயுத முனையில் நடைபெ;றற போது, வேட்பாளர்கள் உயிரை தியாகம் செய்வதாக சத்தியம் செய்தே வேட்பு மனுவில் கையெழுத்திட்டு அத்தேர்தலை டம்மிப் பெயர்களில் எதிர்கொண்டார்கள். மறைந்த தலைவர் மர்ஹ{ம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் ‘உங்களில் யார் மௌத்தாகத் தயாரானவர்கள்?’ என்று கேட்டே அதற்கு துணிந்தவர்களை வேட்பாளர்களாக இட்டிருந்தார்.

அந்த மாகாணசபைக் காலத்தில், மாகாணசபை உறுப்பினர்களாக இருந்த சம்மாந்துறை எம்.வை மன்சூர், அக்கரைப்பற்று அலி உதுமான் ஆகியோர் ஆயுதக்குழுக்களின் துப்பாக்கிகளுக்கு தங்கள் உயிர்களைப் பறிகொடுத்தும் இக்கட்சி மீதான பற்றுதலைக் காட்டியிருக்கின்றார்கள்.

மேலும், 1994 இல் நடைபெற்ற  உள்@ராட்சிமன்றத் தேர்தலில், “அம்பாறை மாவட்டத்தில் ஒரு சபையைக்கூட முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றாதுவிடுமாக இருந்தால் நான் எனது பாராளுமன்றப் பதவியை இராஜினாமா செய்துவிடுவேன்” என்று பெரும் தலைவர் மர்ஹ{ம் அஷ்ரஃப் அவர்கள் மேடையில் பிரசாரம் செய்து அளித்த வாக்குறுதியை, நிந்தவூர் பிரதேச சபை தோற்றதும், உடனே தனது பாராளுமன்ற பதவியை சொன்னபடி இராஜினாமச் செய்து காட்டினார்.

இந்தவரிசையில், கடந்த 2008 இல் நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலையும் நாம்  நினைவில் கொள்ள வேண்டும். திடீரெனத் தோன்றிய மின்னல் போன்று தலைவர் ரவூப் ஹக்கீம் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தானே கேட்பதாக எடுத்த முடிவு அமைந்திருந்தது. அத்தேர்தலில் தன்னோடு சேர்த்து கூடவே, பஷீர் சேகுதாவுத் மற்றும் ஹஸன் அலி ஆகியோரையும் இணைத்துக்கொண்டு தங்களது பாராளுமன்ற பதவிகளைவிட்டு, கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் களமிறக்கிய அதிரடி முடிவாக அத்தேர்தல் அமையப்பெற்றிருந்தது.

கிழக்கு மாகாணம் பிரிந்த நிலையில் முதலாவதாக நடைபெற்ற அத்தேர்தலில் ஒரு முஸ்லிம் முதலமைச்சரை வரலாற்றில் நாம் முதலில் பெறவேண்டும் என்ற முழுநோக்கோடும்தான் அம்முடிவு அப்படி அதிரடியாக எடுக்கப்பட்டது.

அவ்வாறு. ஒரு முஸ்லிம் முதலமைச்சரை கிழக்கில் பெற்றால் முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் செல்வாக்கு இன்னும் அதிகரித்துவிடும், தங்களது அரசியல் எதிர்காலம் பாதித்துவிடும் என்று முஸ்லிம் சமூகத்தை காட்டிக்கொடுப்பது போல் அதற்கு எதிராக சதி செய்தவர்கள்தான் இன்று முஸ்லிம் கூட்டமைப்பு என்று தலை நீட்டுகின்றார்கள்.

ஆனாலும் முஸ்லிம் காங்கிரஸ் ஒரு முதலமைச்சரை பெறவேண்டும் என்ற தனது இலக்கை தற்போது அடைந்துகாட்டி இருக்கிறது. மாத்திரமல்லாமல் கிழக்கில் ஒரு முதலமைச்சரை கொடுத்தால் தனக்கு சவாலாக ஆகிவிடும் என்று தலைவர் ரவூப் ஹக்கீம் கிழக்கிலுள்ள ஒருவருக்கு முதலமை;சசர் பதவியை கொடுக்க விரும்பாது இருக்கிறார் என்றும் இதனை பலவிதமாக பேசிய வாய்களையும் தலைவர் ரவூப் ஹக்கீம் இதன்மூலம் இறுக மூடவைத்திருக்கிறார்.

இப்படி, முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை எதிர்கொண்ட 3 உள்@ராட்சித் தேர்தல்கள், 3 மாகாண சபைத் தேர்தல்கள், 7 பாராளுமன்றத் தேர்தல்கள் அதுபோன்று முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளித்த 5 ஜனாதிபதித் தேர்தல்களின் கடந்தகால வரலாற்றை பின்னோக்கிப் பார்ப்பவர்கள் யாரும் தேர்தல்களைக் கண்டு முஸ்லிம் காங்கிரஸ் அச்சப்படுகிறது என்று விமர்சனம் செய்யமாட்டார்கள்.

இதற்கமைய, எதிர்வருகின்ற தேர்தல் எதுவானாலும் அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ப, தீவிர முடிவுகளை எடுத்து முஸ்லிம் காங்கிரஸ் அதன் வியூகங்களை வகுத்து தேர்தலை வெற்றிகொள்ளும் பலத்துடன் என்றும் இருக்கிறது. மாறாக தேர்தலை எதிர்கொள்ள திராணியற்று அது ஒருபோதும் புறமுதுகு காட்டி பயந்தோடுகின்ற நிலையில் இல்லை.

Related posts

எம்.பி பதவியைக் கொடுத்து சமாளிக்கும் முயற்சியா?

wpengine

ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான இடங்களைத் தேடி அலைய வேண்டாம்.

wpengine

விசாரணை இல்லாமல் அனுர சேனாநாயக்க

wpengine