தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக வங்கி 600 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. முதற்கட்டமாக 400 மில்லியன் டொலர்கள் விரைவில் வழங்கப்படும் என உலக வங்கியின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி திருமதி சியோ கெண்டா (Chiyo Kanda) தெரிவித்துள்ளார்.
உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கும் இடையில் இன்று (26) பிற்பகல், கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே திருமதி சியோ கெண்டா இதனைத் தெரிவித்தார்.
மருந்து மற்றும் சுகாதாரத் தேவைகள், சமூகப் பாதுகாப்பு, விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் எரிவாயு தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த நிதி பயன்படுத்தப்படும். தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்குவதாகவும் உலக வங்கி பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

உலக வங்கியின் இந்நாட்டு ஆலோசகர் ஹூசாம் அபுதாகா (Husam Abudagga), மனித அபிவிருத்தித் தலைவர் ரெனே சோலானோ (Rene Solano), நிதி அமைச்சர் அலி சப்ரி, வர்த்தக மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், நிதி அமைச்சின் செயலாளர் கே.எம்.எம். சிறிவர்தன, தொழில் அமைச்சின் செயலாளர் எம்.பி.டி.யு.கே மாபா பத்திரன, திறைசேரியின் பிரதிச் செயலாளர் ஆர்.எம்.பி. ரத்நாயக்க மற்றும் தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர்.எச்.டபிள்யூ.ஏ.குமாரசிறி ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
26.04.2022