பிரதான செய்திகள்

உயர் நீதிமன்றின் பரிந்துரை ஜனநாயகத்தின் வெளிப்பாடு -ஹிஸ்புல்லாஹ்

(ஆர்.ஹஸன்)
20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் நாடளுமன்றத்துக்கு வழங்கியுள்ள பரிந்துரையானது நாட்டின் ஜனாநாயகம், நீதித்துறையிலுள்ள சுயாதீனத்தன்மையை வெளிப்படுத்துவதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:

ஜனநாயக நாட்டில் மக்களின் எதிர்பார்ப்புக்கள் – அபிலாஷைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அந்தவகையில் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் ஊடாக சகல மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்துதல், வட மத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல்களை ஒத்திவைத்து மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு மாற்றமான முறையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும், 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் தனது பரிந்துரையை சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அனுப்பி வைத்திருந்தது. அவர் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற அமர்வின் போது ‘சபாநாயகர் அறிவிப்பு நேரத்தில்’ அறிவித்தார். அதில் சட்டமூலத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மூன்றலிரண்டு பெரும்பான்மை பெறப்பட வேண்டும் என்பதற்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தது.

இதனால், இச்சட்டமூலம் நிறைவேற்றப்படாமல் கைவிடப்படுவதற்கான அதிக வாய்ப்புக்கள் உள்ளன. நீதிமன்றத்தின் பரிந்துரையானது ஜனநாயகத்தின் வெளிப்பாடு என்பதுடன், மக்கள் நீதித்துறை மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு சான்றாகும்.
மக்கள் மாகாண சபைகளுக்கு வழங்கிய ஆணைக்கு மேலதிகமாக ஒரு நாளைக்கூட மேலதிமாக வழங்க முடியாது. கிழக்கு மாகாண சபை உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளினும் கால எல்லை நிறைவடைந்ததும் கலைத்து விட்டு உடனடியாக தேர்தல் அறிவிக்கப்படும்.

இதேவேளை, மாகாண சபைகளுக்கு பாதகமாக அமைந்துள்ள 20ஆவது திருத்தத்தை ஆய்வு செய்யாமல் தமது சொந்த இலாபத்துக்காக ஆதரவு வழங்கிய கிழக்கு மாகாண சபையின் செயற்பாடு கண்டிக்கத்தக்கதாகும். – என்றார்.

Related posts

நுரைச்சோலை அனல் மின்நிலையம், கற்பிட்டி கடற்படை பகுதியில் கமரா

wpengine

பாடசாலை விடுமுறையில் திருத்தம் கல்வி அமைச்சு வெளியிட்ட புதிய தகவல்!

Editor

வடகொரியாவில் 15 கப்பல்களில் அழுகிய நிலையில் சடலங்கள்

wpengine