ஈரான் மற்றும் ஈராக் வடக்கு எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 170 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் மேற்கு கெர்மான்ஷா மாநிலத்தில் மாத்திரம் குறைந்தது 164 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில ஊடகம் அறிவித்துள்ளது.
அதேவேளை ஈராக்கில் ஆறுபேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளதுடன் சேதங்களும் அதிகமாக காணப்படுவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றே கூறப்படுகின்றது.
இவ்வாறிருக்க ஈராக்கிய தலைநகரான பாக்தாத்தில் அமைந்துள்ள மசூதிகளில் ஒலிபெருக்கிகள் மூலம் பிரார்த்தனை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.
ஈரானில் பாரிய நிலநடுக்கம்: நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு!
ஈரான் மற்றும் ஈராக் எல்லைப்பகுதில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதில் சிக்குண்டு நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதோடு மேலும் நுாற்றுக்கணக்கானோா் காயமடைந்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இரண்டு நாடுகளுக்குமான எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஈரானின் ஹோ்மன்ஷா மாநிலத்தில் மத்திய கிழக்கு நேரப்படி நேற்று நள்ளிரவு, ரிக்டர் அளவுவில் சுமாா் 7. 3 அளவிலான சக்தி வாய்ந்த இந் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுவரையில் சுமாா் 130 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரானிய செய்திகள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கம் காரணமாக பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதனால் உயிரிழப்புக்கள் அதிகமாக ஏற்பட்டள்ளதுடன் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளனர். இந்நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது.
சுமார் 8 கிராமங்கள் இந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மின்சாரம் மற்றும் தொலைதொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது என்று ஈரான் நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, நிலநடுக்கம் ஈராக்கிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கிய செய்திகளின் அடிப்படையில், ஈராக்கில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமாா் 50 போ் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மீட்புப் பணிகள் தொடா்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.