பிரதான செய்திகள்

இஸ்லாமிய ஆண்களுக்கு ஏன் நான்கு திருமணம் அவசியம்.

(பாத்திமா சூபா துல்கர் நயீம் BA, PGDE, MA(Sociology)

முஹம்மத் (ஸல்) அவர்கள் நபியாக மக்கள் மத்தியில் தெரிவு செய்யப்பட்டு இஸ்லாம் மார்க்கமானது அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாக பெண்களின் நிலை பற்றி அல் குர் ஆன் குறிப்பிடுகையில் “ அவர்களில் ஒருவனுக்கு பெண்குழந்தை பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கறுத்து கவலைப்பட்டவனாகி விடுகின்றான். அவனுக்கு கூறப்பட்ட (கெட்டதென கருதி) செய்தியினால் சமுதாயத்தில் இருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக்கொள்வதா? அல்லது மண்ணில் உயிருடன் புதைப்பதா?  என்று எண்ணுகிறான்.

அறிந்து கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகக்கெட்டது”  அல் குர் ஆன் (16:58:59)

“சுபஹானல்லாஹ்”! இஸ்லாத்திற்கு முன்னரான அய்யாமுல் ஜாஹிலியா காலத்தினை குறிப்பிடும் பொழுது பெண்கள் ஒரு மோகப்போருளாக பார்க்கப்பட்டனரே தவிர அவர்களை ஒரு இனமாகவே கருதப்படாதவர்களாகவே வாழ்ந்திருக்கின்றனர். இஸ்லாத்தின் வருகைக்குப்பின்னரே பெண்கள் கண்ணியப்படுத்தப் பட்டனர். இதன்மூலமாக பெண்களுக்கு

  • Ø  எழுத்துச் சுதந்திரம்
  • Ø  பேச்சுச் சுதந்திரம்
  • Ø  கணவனை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம்
  • Ø  சொத்துரிமை
  • Ø  தொழில் செய்யும் உரிமை
  • Ø  விவாகரத்து உரிமை

போன்ற இன்னும் பல உரிமைகளின் மூலமாக அல்லாஹ் பெண்களை மிக மிக கண்ணியப்படுத்தியுள்ளான்.

பெண்களின் படைப்புப் பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகையில்  “பெண்கள் வளைந்த எலும்பு போன்றவர்கள்; அதனை நிமிர்த்த முயன்றால் அதனை உடைத்து விடுவாய், அந்த வளைவு இருக்கும் நிலையிலேயே அவளை விட்டுவிட்டால் அவளிடம் இன்பம் பெறுவாய்! என்று நபி நாயகம் கூறினார்கள்” அறிவிப்பவர் அபூ ஹுரைரா (ரலி), (நூல் புகாரி, 3331, 5184, 5186)

மற்றுமொரு ஹதீசில் “பெண்களை நல்ல முறையில் நடத்துங்கள்; அவர்கள் உங்களிடம் அடைக்கலமாக உள்ளவர்கள்; அதைத்தவிர அவர்களிடம் உங்களுக்கு வேறு எந்த உரிமையும் இல்லை; என்று நபியவர்கள் கூறினார்கள்” அறிவிப்பவர் அம்ரு பின் ஆஸ் (ரலி), (ஆதாரம் முஸ்லிம்)

திருமண பந்தத்தில் நுழைகின்ற ஒரு பெண்ணுக்கு என்னென்ன தகுதி இருக்க வேண்டும் என இஸ்லாம் குறிப்பிடுகின்றது?

  • Ø  குடும்ப வாழ்வினை எடுத்துச்செல்வதற்கான அறிவு
  • Ø  உடற் தகுதி

இவை இராண்டும் இருப்பின் அவர்கள் திருமணம் முடிக்க தயாராகின்றனர்.

ஆனால் ஆணுக்கு அவ்வாறல்ல. அவன்

  • Ø  குடும்பத்தினை நடாத்திச் செல்வதற்கான போதிய வருமானத்துடன் காணப்படல்.
  • Ø  தன்னை நம்பி இருக்கும் மனைவி, பிள்ளைகளுக்கு உணவு, உடை, உறையுள் வழங்குதல்.
  • Ø  பராமரிப்பு, பாதுகாப்பு, சுகாதார வசதி போன்றவைகளை ஏற்படுத்திக்கொடுத்தல்.

போன்றவைகள் காணப்படக்கூடிய ஒருவனாக இருத்தல் வேண்டும்.

ஏன் இஸ்லாம் திருமணத்தை அனுமதித்தது.?

இதற்கு நிறையவே காரணங்கள் காணப்படுகின்றது. சமூகச்சீர்கேடுகளில் இருந்து மனிதனை  பாதுகாத்துக் கொள்வதற்காவே திருமணம் அனுமதிக்கப்பட்டது.

ex: விபச்சாரம், சிறுவர் துஸ்பிரயோகம்

அதற்காக அனைத்து ஆண்களும் திருமணம் முடித்தாகவேண்டும் என எப்போதுமே பணித்ததில்லை. “திருமணம் செய்வதற்கு இஸ்லாம் தகுதி வாய்ந்தவர்களைத் தவிர; ஏனையோர் நோன்பிருக்கட்டும்” என்றே சொல்கிறது.

கணவன் மனைவிகளுக்கிடையே ஏற்படுகின்ற புனிதமான உறவானது எவ்வாறிருக்க வேண்டும்.?

“அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவர் மன அமைதியை பெறுவதற்கு படைத்தான்” (அல் குர் ஆன் 7:189)

இதிலிருந்து திருமணத்தின் மூலமாக இருவரும் “மன அமைதி” பெற வேண்டும் என குறிப்பிடப்படுகின்றது.

இன்னுமொரு ஹதீஸில் “ இறை நம்பிக்கையுள்ள ஒரு ஆண் இறை நம்பிக்கையுள்ள தன் மனைவியை வெறுத்துவிட வேண்டாம்.  அவளது ஒரு குணத்தை அவன் வெறுத்தால் அவன் விரும்பக்கூடிய இன்னொரு குணத்தை அவளிடம் அவன் காணலாம். என்று நபி (ஸல்) கூறினார்கள்” அறிவிப்பவர்:அபூ ஹுரைரா (ரலி), (நூல்:முஸ்லிம் 2672)

ஏன் நான்கு திருமணத்திற்கு இஸ்லாம் அனுமதி வழங்கியது?

ஆரோக்கியமான இல்லற வாழ்வில் ஏற்படுகின்ற சங்கடங்களை தவிர்த்துக் கொள்வதற்காகவே இஸ்லாம் நான்கு திருமணங்களை அனுமதித்தது.

அதாவது மனைவிக்கு தீராத உடல், உள நோய்கள் ஏற்பட்டு அவரால் கணவனுடன் திருப்திகரமான இல்லறத்தினில் ஈடுபட முடியாத சூழ்நிலை ஏற்படுகின்றபோது கணவரின் ஆரோக்கியமான நிலை தனில் “ஒருவனுக்கு ஒருத்தி எனும் நிலை” ஏற்படின் சமூக சீர் குலைவுகள் ஏற்படும். இதனைத் தவிர்ப்பதர்காகவே இஸ்லாம் அழகிய வழியில் ஆண்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்த ஓர் சலுகையே தவிர; இது “பர்ளோ சுன்னத்தோ” கிடையாது. இது பொதுச்சட்டமல்ல. இது ஒரு விசேட சட்டமே.

எனவே ஒரு கணவன் சமூகத்தாரிடம், அயலவர்களிடம் இன்னும் சொல்லப்போனால் அனைவரிடமும் நல்ல மனிதன் என போற்றப்படுகின்றவர் தன் மனைவியிடம் சிறந்த முறையில் நடந்துகொள்ள வில்லையாயின் அவர் சிறப்பான மனிதராக இருக்க முடியாது என இஸ்லாமிய மார்க்கம் குறிப்பிடுகின்றது. இதிலிருந்து இஸ்லாம் பெண்களை எந்த அளவிற்கு கண்ணியப்படுத்துகின்றது எனப்பாருங்கள்.

“முஃமீன்களில் முழுமையானவர் குணத்தால் அழகானவரே! உங்களில் சிறந்தவர் தம் மனைவியரிடம் குணத்தால் சிறந்தவராக இருப்பவரே! என்று நபி (ஸல்) கூறினார்கள்.  ஆதாரம் : (திர்மிதி 1082)

“நல்ல குணம் கொண்டவர்களே இறை நம்பிக்கையில் முழுமை பெற்றவர்களாவர். உங்களில் சிறந்தவர் தங்கள் மனைவியரிடம் நல்ல முறையில் நடந்துகொள்பவர்களே. என்று நபி (ஸல்) கூறினார்கள்.” அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்கள்: (அஹ்மத் 7095, திர்மிதி:1082)

பலதார மனமும் இன்றைய விமர்சனமும்

“பெண்களில் உங்களுக்கு மனம் விரும்பியவர்களில் இரண்டு இரண்டாக மூன்று மூன்றாக நான்கு நான்காக திருமணம் முடித்துக்கொள்ளுங்கள். அவர்களிடம் நீதமாக நடந்துகொள்ள நீங்கள் பயந்தால் ஒரு மனைவியே உங்களுக்கு போதுமானதாகும்.” என அருள்மறை அல் குர்ஆனின் சூரா அந்-நிசாவின் மூன்றாவது வசனம் எடுத்துரைக்கும் பலதார மண உரிமை ஒரு விசேட சட்ட ஏற்பாடே தவிர; அது ஒரு பொதுச்சட்ட ஏற்பாடல்ல. என்பதை ஆண் வர்க்கம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

இஸ்லாத்தின் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) திருமணம் முடிக்கும்போது அவருக்கு வயது 25. விதவையான கதீஜா (ரலி) அவர்களுக்கு வயது 40. தன்னிலும் பார்க்க 15 வயது மூப்பான ஒரு பெண்ணை முஹம்மத் (ஸல்) அவர்கள் முடித்து அவர்களோடு சந்தோசமாக சுமார் 26 வருடங்கள் (கதீஜா ரலி மரணிக்கும் வரை) பலதார மணம் புரியாமல் முதல் மனைவியுடனேயே வாழ்ந்தமை பற்றி ஆண் வர்க்கம் சிந்தித்துப்பார்க்க வேண்டும். நபி (ஸல்) அவர்களின் 51 ஆவது வயதில் கதீஜா நாயகி மரணித்த ஆண்டை “துக்க ஆண்டாக பிரகடனப்படுத்தியதன்” மூலம் முதல் மனைவி கதீஜாவுக்கு எவ்வாறான உயர்ந்த இடத்தை வழங்கியிருந்தார்கள் என்பதையும் ஈமானிய நெஞ்சங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இஸ்லாத்தை பரப்பல், விதவைகளுக்கு வாழ்வளித்தல், அனாதைகளை அரவணைத்தல் போன்ற பல நியாயமான காரணங்களுக்காகவே முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் பலதார மணம் புரிந்ததாக இஸ்லாமிய ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது பலதார மனத்தை தூக்கிப்பிடிக்கும் ஆண்களிடம் மேற்படி நியாயங்கள் தென்படுகின்றதா?

பெண் சமூகத்தை அகௌரவப்படுத்தும் வகையில் பலதார மணக் கோஷங்களை சமூக வலைத் தளங்களில் வெளியிடுவதை தயவு செய்து ஆண் வர்க்கம் அல்லாஹ்வுக்காக நிறுத்திக்கொண்டு இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள அந்தஸ்த்து என்ன? , கணவன் மனைவி உரிமைகள், கடமைகள், தொடர்பாடல்கள் எப்படி அமைய வேண்டும் என்பது தொடர்பான ஆக்கபூர்வமான ஆலோசனைகளை சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் கருத்துக்களை வெளியிடுங்கள்.

“அல்லாஹ் நம் அனைவருக்கும் தெளிவான சீரான சிந்தனையை வழங்கி பெண்களின் அந்தஸ்த்தை பாதுகாப்பவர்களாக ஆக்குவானாக.! ஆமீன்”

 

இஸ்லாமிய ஆண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக என்னால் எழுதப்பட்ட இக்கட்டுரையை தங்கள் தளத்தில் பிரசுரிக்குமாறு தயவாய் கேட்டுக்கொள்கிறேன்.

Related posts

தேர்தல் தொடர்பான சுகாதார ஒழங்கு வீதிகள்

wpengine

புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டியின் பிரதம அதிதியாக றிசாட்

wpengine

பல இளம் பெண்களை ஏமாற்றி பணம் பெற்றவர் கைது – அவிசாவளையில் சம்பவம்!

Editor