கட்டுரைகள்பிரதான செய்திகள்

இலவு காத்த கிளிபோல் ஆகக்கூடாது.

(எம்.ஐ.முபாறக்)

வடக்கு-கிழக்கு தமிழர்கள் அவர்களின் நீண்ட காலப் பிரச்சினைக்கான தீர்வைப் பெறுவதற்கு எந்த வழிமுறைகளை நாட்டினாலும்,அவர்கள் இறுதியாகவும் உறுதியாகவும் நாடும் வழிமுறை சர்வதேசம் ஒன்றுதான்.இலங்கை ஆட்சியாளர்கள் தம்மைக் கை விட்டாலும் சர்வதேசம் அப்படிச் செய்யாது என்று நம்பி அவர்களின் பிரச்சனைகளை அதிகம் அதிகாமாக சர்வதேசமயப்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக,அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளையும் ஐ.நாவையும் அவர்கள் பெரிதாக நம்பி இருக்கின்றனர்.ஐ.நவைப் பொறுத்தவரை அது தொடர்ச்சியாக தமிழர் பக்கம் நின்றே செயலாற்றி வருகின்றது.யுத்தம் முடிந்ததில் இருந்து ஐ.நாவின் இந்த நிலைப்பாடு மேலும் இறுக்கமாக இருந்து வருகின்றது.

இறுதி யுத்தத்தின்போது தமிழருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோசத்தை ஐ.நா தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.ஐ.நாவின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகின்றபோதெல்லாம் அவர்கள் தமிழர் பகுதிகளுக்குச் சென்று உண்மை நிலைமையை கண்டுவிட்டுத்தான் செல்கின்றனர்.அந்த நிலைமையை ஐ.நா தமிழருக்கு சாதகமாகப் பரிசீலிக்கின்றது.

இது தமிழரின் போராட்டத்துக்கு பலம் சேர்க்கும் விடயமாக அமைந்துள்ளது.அந்த அடிப்படையில்தான் ஐ.நாவின் பொது செயலாளர் பாங்கி மூனின் இலங்கைக்கான விஜயமும் நோக்கப்படுகின்றது.

இந்த மாதம் இறுதியில் இலங்கைக்கு வருகை தரவுள்ள மூனின் விஜயத்தை தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.தமிழருக்கு தீர்வு வழங்குவதில் காட்டப்படும் கால தாமதத்தால் அவர்களுள் சிலர் விரக்தியடைந்து காணப்பட்டாலும் ஐ.நா மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை அவர்கள் முழுமையாக இழக்கவில்லை.அந்த வகையில் மூனின் விஜயத்தைத் தங்களுக்கு சாதகமாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்.

மூனுக்கு இது இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயமாகும்.யுத்தம் முடிந்தவுடன் 2009 இல் அவர் முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை இலங்கைக்கு மேற்கொண்டார்.யுத்தத்தின் பின்னரான தமிழர்களின் நிலைமையைப் பார்த்துச் சென்றார்.யுத்தக் குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட தமிழர்களின் அனைத்துப் பிரச்சினைகளும் சர்வதேசமயப்படுவதற்கு அவரது அந்த விஜயம் காரணமாக அமைந்தது.

அந்த விஜயத்தின்போது பல விடயங்களில் மூனுக்கும் அப்போதைய ஜனாதிபதி மஹிந்தவுக்கும் இடையில் இணக்கம் ஏற்பட்டது.இருவரும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் பல வாக்குறுதிகளை மஹிந்த வழங்கி இருந்தார்.அனால்,மஹிந்த ஆட்சியில் இருந்து கவிழ்க்கப்படும்வரை அவர் எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.இதனால் ஐ.நாவுக்கு மஹிந்தவுக்கு இடையில்  முறுகல் ஏற்படத் தொடங்கியது.

மஹிந்த இவ்வாறு வாக்குறுதியை மீறிச் செயற்பட்டதால் கடுப்பாகிப்போன ஐ.நா மஹிந்தவைப் பலி வாங்கத் துடித்தது.அவருக்கு எதிராகப் பல பிரேரணைகளைக் கொண்டு வந்து நிறைவேற்றியது.இந்த நிலைமை தமிழர்களின் போராட்டத்தை-பிரச்சினையை மேலும் சர்வதேசமயப்படுத்தியது.

இந்த நிலையில்தான் மஹிந்தவின் ஆட்சியும் கவிழ்ந்தது.இதனைத் தொடர்ந்து மஹிந்த வழங்கிய அதே வாக்குறுதிகளை புதிய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று ஐ.நா விரும்பியது.புதிய அரசும் அதற்கு சாதகமாகவே தலை அசைத்தது.

யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பில் ஐ.நாவால் கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு இலங்கை அரசு இணை அனுசரணை வழங்கியதோடு இந்த விசாரணைக்காக உள்ளகப் பொறிமுறை ஒன்று அமைக்கப்படும் என்று வாக்குறுதியும் வழங்கியது.இந்த வாக்குறுதியை நிறைவேற்ற வைப்பதற்காக ஐ.நா இப்போது நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இலங்கை அரசின் அந்த வாக்குறுதியின் முன்னேற்றம் தொடர்பாகவும் தமிழர்களின் தற்போதைய நிலைமை தொடர்பாகவும் ஆராய்வதற்காக பாங்கி மூன் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல்-ஹுசைனை அண்மையில் இலங்கைக்கு அனுப்பி வைத்திருந்தார்.அதனைத் தொடர்ந்து மூணும் இப்பொது வரப் போகின்றார்.

ஹுசைனின் விஜயம் இலங்கை அரசுக்கு சாதகமாகவே அமைந்திருந்தது.இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகப் பொறிமுறைகள் நல்ல நிலையில் இருப்பதாகத் தெரிவித்து யுத்தக் குற்ற விசாரணை இலங்கையின் உள்ளகப் பொறிமுறையால்தான் நடத்தப்பட்ட வேண்டும் என்று அவர் கூறி இருந்தார்.அது மாத்திரமன்றி,விசாரணையில் கண்டறியப்படுகின்றவை மனித உரிமை மீறல்களா அல்லது யுத்தக் குற்றங்களா என்று இலங்கை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் கூறி இருந்தார்.

இவ்வாறு அவரது விஜயத்தைத் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அரசு மூனின் விஜயத்தையும் சாதகமாகவே பயன்படுத்துவதற்கு முற்படும்.மூனின் விஜயத்தில் இருந்து  உச்ச பயனை அடைவதற்கு தமிழர் தரப்பு என்ன செய்யப் போகின்றது;எவ்வாறான யுக்திகளைக் கையாளப்  போகின்றது என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது.

மூன் அவரது பதவிக் காலத்தின் இறுதிக் காலத்தில்தான் இந்த விஜயத்தை மேற்கொள்கிறார்.இந்த நிலையில்,அவர் எடுக்கும் முடிவுகள் முக்கியமானதாகப் பார்க்கப்படும்இதனால்தான்  தமிழர்கள் மிக ஆர்வத்துடன் அவரது விஜயத்தை எதிர்பார்க்கின்றனர்.

இலங்கையின் தற்போதைய அரசு ஐ.நாவுடன் இணங்கிச் செயற்படுவதால் இலங்கை அரசுக்கு சாதகமாக மூன் நடந்துகொள்வாரா அல்லது மஹிந்தவின் ஆட்சியில் அவர்  மேற்கொண்ட விஜயத்தினைத் தொடர்ந்து எடுத்த அதே நிலைப்பாட்டை எடுப்பாரா என்ற கேள்வியும் தமிழர் தரப்பால் முன்வைக்கப்படுகின்றன.

சர்வதேச பிரதிநிதிகள் வருவதும் போவதுமாக இருக்கின்றனர்.எதுவும் நடப்பதில்லை என்ற விரக்தி மனப்பான்மையில் இருந்து தமிழர்கள் விடுபடுவதற்கு மூனின் விஜயம் சாதகமாக அமைய வேண்டும்.தமிழருக்கு நல்லது செய்தார் என்ற நல்ல பெயருடன் அவர் ஓய்வு பெற வேண்டும் என்று தமிழர்கள் விரும்புகின்றனர்.

போர்க் குற்ற விசாரணை விரைவாகத் தொடங்கப்பட்ட வேண்டும் என்ற தேவைக்கு அப்பால் மீள்குடியேற்றம்,காணாமல் போனோர் தொடர்பான விசாரணை,அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் நீக்கம் போன்றவையும் உடனடியாக மேற்கொள்ளப்பட்ட வேண்டி இருக்கின்றன.

இந்த விடயங்கள் தொடர்பில் மூன் நல்லதொரு முடிவைப் பெற்றுத் தருவார் என்று தமிழர்கள் ஆவலாய்க் காத்துக்கொண்டிருக்கின்றனர்.அவர்களின் எதிர்பார்ப்பு-காத்துக் கிடப்பு இலவு காத்த கிளியின் நிலைமை போல் ஆகிவிடக்கூடாது என்பதே அனைவரினதும் விருப்பமாகும்.

Related posts

மன்னாரில் ஒன்பது கைக்குண்டுகள் மீட்பு!

wpengine

முசலி பிரதேச செயலக வாழ்வாதார மோசடி! சல்லடை போட்ட பொது கணக்காய்வு திணைக்களம்.

wpengine

என்ன விலைக்கு நெல்லினை கொள்வனவு செய்தாலும், அரிசி 100 ரூபாய்க்கு மேல் எமது ஆட்சிக் காலத்தில் விற்பனை செய்ய மாட்டோம்

wpengine