பிரதான செய்திகள்விளையாட்டு

ஆசிய கிண்ண கனிஷ்ட குறிபார்த்து சுடுதல் போட்டியில் இலங்கை வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தது.

தாய்லாந்தின் பாங்கொக்கில் நடைபெற்று வருகின்ற 14ஆவது ஆசிய வான் துப்பாக்கி மற்றும் கைத் துப்பாக்கி கிண்ண 2025 (Asian Rifle and Pistol Cup – 2025) கனிஷ்ட பெண்களுக்கான அணி நிலை போட்டியில் இலங்கை வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்து வரலாறு படைத்ததுடன் இலங்கையின் கனிஷ்ட வீராங்கனை உமயா ஆகர்ஷனி, இலங்கைக்கான கனிஷ்ட சாதனையை நிலைநாட்டி பெருமை பெற்றார்.

கனிஷ்ட பெண்களுக்கான 10 மீற்றர் காற்றழுத்த துப்பாக்கி (10m Air Pistol) அணி நிலை சுடுதல் போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணியினர் 3ஆம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தனர்.

வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கை கனிஷ்ட அணியில் ரெய்னியா ரணசிங்க (கண்டி, கலம்போ இன்டர்நெஷனல் ஸ்கூல்), திசங்கி கீத்மா (ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்), வினுத்மீ செனவிரட்ன (காலி, சவுத்லண்ட் கல்லூரி) ஆகிய மூவர் இடம்பெற்றனர்.

இதேவேளை, 10 மீற்றர் காற்றழுத்த வான்துப்பாக்கி சுடுதல் (10m Air Rifle) போட்டியில் பங்குபற்றிய இலங்கையின் கனிஷ்ட குறிபார்த்து சுடுதல் வீராங்கனை உமாயா ஆகர்ஷனி 618.3 மற்றும் 654 புள்ளிகளைப் பெற்று புதிய இலங்கை கனிஷ்ட சாதனையை நிலைநாட்டினார். 616.2 மற்றும் 654 புள்ளிகளே முந்தைய இலங்கை கனிஷ்ட சாதனையாக இருந்தது.

இலங்கை கனிஷ்ட சாதனையை நிலைநாட்டிய பன்னிப்பிட்டி தர்மபால வித்தியாலயத்தில் தரம் 11இல் கல்வி பயிலும் ஆகர்ஷனி, எதிர்காலத்தில் சர்வதேச பதக்கங்களை இலங்கைக்கு வென்று கொடுக்கக்கூடியவர் என அனுமானிக்கப்படுகிறது.

எதிர்வரும் 22ஆம் திகதிவரை தொடரவுள்ள 14ஆவது ஆசிய வான் துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கி கிண்ண குறிபார்த்து சுடுதல் போட்டியில் இலங்கை சார்பாக 7 வீராங்கனைகளும் ஒரு வீரரும் பங்குபற்றுகின்றனர்.

இலங்கை அணியில் பங்குபற்று ஏனைய வீர, வீராங்கனைகள்: 10 மீற்றர் காற்றழுத்த துப்பாக்கி சுடுதல் கனிஷ்ட ஆண்கள்: ஆரியன் சேனாரத்ன (நாலந்த கல்லூரி),

10 மிற்றர் காற்றழுத்த துப்பாக்கி சுடுதல் கனிஷ்ட பெண்கள்: சினாதி கொடிகார (விசாக்கா வித்தியாலயம்), அஹன்சா விஜேநாயக்க (நுகேகொடை, சுஜாதா வித்தியாலயம்)

10 மீற்றர் வான் காற்றழுத்த துப்பாக்கி சுடுதல் கனிஷ்ட பெண்கள்: சியத்தி கலகெதர (ஹவுஸ் ஓவ் ஷூட்டர்ஸ் ஸ்போர்ட்ஸ் ஷூட்டர்ஸ் அக்கடமி).

Related posts

மட்டக்களப்பு இளைஞர்களுக்கு T shirt வழங்கிய அமீர் அலி

wpengine

பெண் வன்முறைகளுக்கு துரித நீதி கோரி மட்டில கவனயீர்ப்புப் போராட்டம்! இருண்ட பங்குனியாகவும் பிரகடனம்

wpengine

கல்வி திட்டத்தில் கோத்தா புதிய முறை! நவீன உலகுடன் முன்னோக்கிச் செல்ல

wpengine