‘அரகலய’ போராட்டத்தின் போது – வீடுகள் எரிக்கப்பட்ட அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வியத்புர வீட்டு வளாகத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகள் எரிக்கப்பட்ட அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகைக்கு மேலதிகமாக இந்த வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
பன்னிபிட்டிய, வீர மாவத்தையில் அமைந்துள்ள வியத்புர வீட்டு வளாகத்தின் 05வது தொகுதியில் வீடுகளை வழங்குமாறு மொத்தம் 26 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அப்போதைய நாடாளுமன்ற சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன் விளைவாக, இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த வளாகத்திலிருந்து வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
பொதுவாக, அந்த வளாகத்தில் வீடுகளைப் பெறும்போது, வீட்டின் மதிப்பில் 50 வீதத்தை முன்கூட்டியே செலுத்தி, மீதமுள்ள தொகையை ஒரு வருடத்துக்குள் செலுத்த வேண்டும்.
இருப்பினும், மேற்கூறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்பணம் செலுத்தும் தொகையை 25% ஆகக் குறைத்து, மீதமுள்ள தொகையை 15 ஆண்டுகளுக்குள் செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சாதாரண பொமக்களுக்கு வழங்கப்படும் விலையிலும் குறைவாகவே, இவர்களுக்கு இந்த வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப்பின் பெயரும் – வீடுகளைப் பெற்றுக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவருக்கு வழங்கப்பட்டுள்ள வீடு – சாதாரண பொதுமக்களுக்கு 15.79 மில்லியன் ரூபாய்க்கு வழங்கப்படும். ஆனால் முஷாப்புக்கு அந்த வீடு 13.16 மில்லியன் ரூபாய்க்கு வழங்கப்பட்டுள்ளது.
அந்தத் தொகையில், 3.29 மில்லியன் ரூபாயை முஷாரப் முற்பணமாக செலுத்தியுள்ளார். மிகுதி 9.87 மில்லியன் ரூபாயை 15 வருடங்களில் அவர் செலுத்த வேண்டியுள்ளது.
இருந்தபோதிலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப்புக்கு சொந்தமான எந்தவொரு வீடும், அரகலய போரட்டத்தின் போது, தீ வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து நேற்று (07) நாடாளுமன்றில் பேசிய பிரதியமைச்சர் ரி.பி. சரத், “வீடுகளுக்கு வேண்டுமென்றே தீ வைக்கப்பட்டதாக என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். தமது வீடுகளின் ஜன்னல்கள் எரிந்தவர்களும், அரசாங்கத்திடமிருந்து வீடுகளை வாங்கியுள்ளனர். வீடுகளை இவ்வாறு வாங்கியோர் மொத்தம் 76 பேர் உள்ளனர். அவர்களில் 26 பேரின் பட்டியல் உள்ளது” என்றார்.
