எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் மரச் சின்னத்தில் தனித்துக் களம் இறங்கவுள்ளது என்று கட்சி தலைவர் ரவூப் ஹக்கீம்(Rauff Hakeem) தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒலுவில் தனியார் விடுதியில் (கிறீன் விலா) நேற்று மாலை நடைபெற்ற கட்சியின் அமைப்பாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
“கடந்த காலங்களைப் போல் அல்லாது இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அதிகப்படியான ஆசனங்களைக் கைப்பற்றி அதிகார சபைகளை எமது ஆளுகைக்கு உட்படுத்துவது அமைப்பாளர்களின் கரங்களிலேயே தங்கியுள்ளது.
இதற்காக எமது மகளிர் அணி, இளைஞர் அணி என்பவற்றை உற்சாகப்படுத்தி பட்டியல் வேட்பாளர்களாக களம் இறக்க அத்தனை அமைப்பாளர்களும் ஒன்றுபட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர், கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். எஸ். உதுமாலெப்பை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் .ஐ .எம். மன்சூர் மற்றும் கட்சியின் பிரதிச் செயலாளர் நாயகம் மன்சூர் ஏ. காதர் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.
☀️ வன்னிநியூஸ் வட்ஸ்ப் குழுவில் இணைய: https://chat.whatsapp.com/ECH9aFFlKIJB0htsdAdJyg