இணையதள தகவல் சேவைக்கு கொள்கைகளை வகுக்க கோரும் மனு தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
கர்மான்ய சிங் சரீன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
வாட்ஸ்அப் வகுத்துள்ள புதிய கொள்கையின்படி தனது பயன்பாட்டாளர்கள் பற்றிய தகவல்களை தனது தாய் அமைப்பான ‘பேஸ்புக்’கிடம் (முகநூல்) பகிர்ந்து கொள்ள முடியும். இதனால் தனிப்பட்ட ஒருவர் குறித்த தகவல்கள் மீதான சுதந்திரம் ஆபத்துக்கு உள்ளாகும் நிலைமை ஏற்பட்டு இருக்கிறது.
அரசியல் சாசனத்தின் 19-வது அட்டவணை தனிப்பட்டவரின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறி இருக்கிறது. எனவே மத்திய அரசு இதில் தலையிட்டு நாட்டு மக்களின் தனிப்பட்ட உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏனெனில் வாட்ஸ்அப் 15 கோடி பேருடன் பொதுபயன்பாட்டில் உள்ளது. இவ்வாறு அதில் கூறி இருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் வக்கீல் ஹரீஸ் சால்வே ஆஜராகி வாதாடுகையில், “தனிப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் பாதுகாக்கப்பட சமூக ஊடகங்களுக்கு என்று கொள்கைகளை மத்திய அரசு வகுக்க வேண்டும்” என்றார்.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், “வாட்ஸ்அப் என்பது தனக்கென விதிமுறைகளை கொண்டதொரு தனியார் சேவை என்றால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். அல்லது விட்டு விடுங்கள்” என்றனர்.
பின்னர் மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரலிடம் நீதிபதிகள் கூறும்போது, இந்த பிரச்சினையில் கோர்ட்டுக்கு நீங்கள் உதவிட வேண்டும் என்றனர்.
தொடர்ந்து நீதிபதிகள், “இந்த மனு தொடர்பாக 2 வாரங்களுக்குள் மத்திய அரசு, இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), வாட்ஸ்அப், பேஸ்புக் ஆகியவை பதில் அளிக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டனர்.