மன்னார் மாவட்டத்தை இந்தியாவுக்கு வழங்குவதால் ஏற்படும் அழிவுகள் குறித்து தமிழ் தலைமைகள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னனியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று நடந்த ஊடக சந்திப்பொன்றில் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

வடபகுதியில் பல்வேறு மாவட்டங்கள் பல்வேறு சவால்களை எதிர் கொண்டுள்ளது. இதில் சில பகுதிகளை சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியா பங்கு போடும் பரிதாபமான நிலையில் இலங்கை மாறிக் கொண்டிருக்கின்றது.

இதன்போது தென்னிலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு கொடுத்த போது இந்தியாவுக்கு பலாலியை கொடுத்தார்கள். சுரியவேவ விளையாட்டு மைதானத்தை சீனாவுக்கு கொடுத்த போது இந்தியாவுக்கு துரையப்பா விளையாட்டு அரங்கு வழங்கப்பட்டது.

காலியில் இருந்து மாத்தறை துரித கதி ரயில் பாதை அமைக்கப்பட்ட போது இந்தியாவுக்கு யாழ்தேவி ரயில் பாதை அமைத்து கொடுக்கப்பட்டது.

நுரைசோலை அனல் மின் நிலையத்தை சீனாவுக்கு வழங்டகப்பட்ட போது இந்தியாவுக்கு சம்பூர் வழங்கப்பட்டது.

இவ்வாறு தேடிப் பார்க்கின்ற போது சீனாவுக்கு போட் சிற்றி கொடுக்கப்பட்ட போது இந்தியாவுக்கு கிழக்கு முனையம் வழங்கப்பட்டது. அது தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக மேற்கு முனையாக மாறியுள்ளது. 

சீனாவின் கப்பல் வருகையின் பின் ஏற்பட்ட இராஜதந்திர பிரச்சனைகள் என்பவற்றை தொடர்ந்து மன்னார் மாவட்டம் இன்று ஆபத்தை எதிர்கொண்டுள்ளது.

கடந்த காலங்களில் காற்றலை மின் உற்பத்தி மேற்கொள்வதற்கு சீனாவிடம் வழங்கப்பட்டது. அப்போது தமிழ் கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டது என்பது இந்திய மக்களுக்கு அல்ல. இந்தியாவின் அதானி கம்பனிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவினுடைய மக்களையே வதைக்கின்ற ஒரு கம்பனி அதானி என்பது அனைவருக்கும் தெரியும்.

இதன்போது அதானி கம்பனிக்கு கற்றாலை அமைப்பதற்காக தீவுப் பகுதிகள் வழங்கப்படுகின்றன.மன்னார் மாவட்டத்திற்கு பாதிப்பு வரும் என மன்னார் பிரஜைகள் கூறுகிறார்கள்.

புல்மோட்டையில் கனிய மணல் இருக்கிறது. இலங்கைக்கு தேவையான கனிய வழங்களை அவுஸ்ரேலியாவுக்கு தாரை வார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்திலும் இவ்வாறான செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது. மன்னார் மாவட்டம் கடல் மட்டத்தில் இருந்து தாழ்வான பகுதியாகும். எதிர்காலத்தில் இந்தப் பகுதியில் இருந்து மணல் அகழ்கின்ற போது மன்னார் தீவுக்கே அழிவு ஏற்படும் என மன்னார் பிரஜைகள் குழு மூலம் மக்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் இயற்கை, மீன்வளம், தீவு என்பவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் என அவர்கள் கூறுகிறார்கள். இதற்கு இந்த அரசாங்கம் செவிசாய்க்கவில்லை. ரணில் ராஜபக்ஸ அரசாங்ம் இந்தியா, சீனா என எல்லா பக்கமும் அவர்கள் போடும் தாளத்திற்கு ஆடும் கூட்டமாக மாறியிருக்கிறார்கள்.

ஆகவே, மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் அமைப்பதன் மூலம் ஏற்படும் ஆபத்து, மணல் அகழ்வுகளால் ஏற்படும் ஆபத்துக்கள் தொடர்பாக தமிழ் அரசியல் தலைவர்கள், தமிழ் கட்சிகள் வாய் மூடி மௌனிகளாக இருக்கிறார்கள்.

ஐயா சம்மந்தன், ஐயா சித்தார்த்தன், சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்களே, தமிழ் தேசத்திற்காக போராடும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களே அனைவரும் ஒன்று சேர்ந்து மன்னார் மாவட்டத்திற்கு ஏற்படும் ஆபத்து தொடர்பில் போராட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னனி கோருகின்றது.

எதிர்காலத்திலும் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாடவும், இது தொடர்பில் மன்னார் சென்று கலந்துரையாடுவதற்கும் நடவடிக்கை எடுப்பதுடன் மன்னாரை பாதுகாக்க நாம் குரல் கொடுப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.  

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *