அண்மையில் வாட்ஸ் அப் அறிமுகப்படுத்திய பாதுகாப்பு வசதி நாட்டுக்கு அச்சுறுத்தலை உண்டாக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் மத்திய அரசின் விதிகளை மீறி பாதுகாப்பு அம்சங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


உலகின் முன்னணி தகவல் பரிமாற்ற கருவியான வாட்ஸ் அப், அனைவரின் செல்பேசிகளில் இன்றியமையாத ஒன்றாகி விட்டது. எஸ்.எம்.எஸ் எனப்படும் குறுஞ்செய்தி அனுப்பிய காலம் போய், எழுத்தாகவும், ஒலியாகவும், ஒளியாகவும், படங்களாகவும், கோப்புகளாகவும் உடனுக்குடன் தகவல்களை பரிமாறிக்கொள்ள வாட்ஸ் அப் உதவி புரிகிறது.

100 கோடி பேரை தொட்ட தனது பயனாளர்களுக்கு, தகவல் பரிமாற்றத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய வாட்ஸ் அப் புதிய வசதியை அறிமுகப்படுத்தியது. அதன் படி, தகவல்களை பரிமாறிக்கொள்ளும் இருவருக்கிடையே வேறொருவர் இடைமறித்து தகவலை திருட முடியாது என்றும் வாட்ஸ் அப் தெரிவிக்கிறது.

ஆனால், இந்தியாவில் இது தேச விரோத செயலுக்கு வழி வகுக்கும் என்றும், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் பாதுகாப்பு முகமைகள் தெரிவிக்கின்றன.

அதாவது, சமூக விரோதிகளுக்கிடையே நடக்கும் தகவலை இடைமறித்து, அதனை முறியடிக்க முடியாத சூழல் ஏற்பட்டு விடும் என்று பாதுகாப்பு முகமைகள் கருதுகின்றன.

ஆப்பிள் நிறுவனத்திற்கும், அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.க்கும் இடையே பாதுகாப்பு அம்சத்தை உடைக்கும் விவகாரத்தில் மோதல் உருவாகியுள்ளது. ஆப்பிள் செல்பேசிகளில் உள்ள தகவலை ஹாக் செய்வது தொடர்பாக எப்.பி.ஐக்கு ஆப்பிள் உதவ முன்வரவில்லை. தனது வாடிக்கையாளர்களின் தனியுரிமையில் தலையிடுவதாகிவிடும் என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வாட்ஸ் அப்பின் தற்போதைய நடவடிக்கையும் ஆப்பிளின் போக்கிற்கு இணையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், என்கிரிப்ஷன் எனப்படும் குறியாக்க முறையில் சில கட்டுபாடுகளை மத்திய அரசு ஏற்கனவே விதித்துள்ளது.

வாட்ஸ் அப் பயன்படுத்தும் என்கிரிப்ஷன் முறை மத்திய அரசின் விதிகளை மீறி உள்ளதாக கூறப்படுகிறது. எனினும், தகவல் தொழில்நுட்ப விதிகளில் தெளிவான குறிப்பு இல்லாததால் மத்திய அரசின் தலையீடு வாட்ஸ் அப் விவகாரத்தில் இருக்காது என்று கூறப்படுகிறது. அதாவது, தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த விதிகள் பொருந்துவதாகவும், வாட்ஸ் அப், ஸ்கைப் உள்ளிட்டவைகளில் இந்த விதிகள் பொருந்தாது என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *