ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலையுடன் தொடர்புடையதாக கூறப்படும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவுடைய “சிறிலிய” சமூக நல அமைப்பின் டிபெண்டர் வாகனத்தை பெற்றுக்கொள்வதற்கு நீதிமன்றத்துக்கு வருமாறு கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேட் நீதவான் கிஹான் பிலபிடிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த வாகனம் ஹோமாகம பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்தபோது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த வாகனம் இலங்கை செஞ்சிலுவைச் சங்க கிளையின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த டிபெண்டர் சில காலம் பிரபுக்களின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அத்துடன், சீ.எஸ்.என். தொலைக்காட்சி பணிப்பாளரின் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுப் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இரசாயனப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட இந்த டிபெண்டர் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்துள்ளதனால், வாகனத்தை முதல்தர உரிமையாளருக்கு ஒப்படைக்குமாறு குற்றப்புலாய்வுப் பிரிவு நீதிமன்றத்திடம் விடுத்த வேண்டுகோளையடுத்து நீதிபதி இதனைப் பெற்றுக் கொள்ள இலங்கை செஞ்சிலுவைச் சங்க பணிப்பாளருக்கு நீதிமன்றத்துக்கு வருமாறு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 11 திகதி இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *