(மொஹமட் பாதுஷா)

‘கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்’ என்று சொல்வார்கள். அரசியலில், ஒரே தன்மையுள்ள இரண்டாவது கட்சி உருவாகிவிட்டால், முதலாவது கட்சிக்காரர் தன்னுடைய செயற்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டி ஏற்படும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கும் இடையில், தேர்தல் காலங்களிலும் வேறு சில பருவ காலங்களிலும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற அரசியலை இந்த ‘கீரைக்கடை அரசியல்’ என்றும் சொல்லலாம்.

இரு கட்சிகளுக்கும் இடைப்பட்ட அரசியல் என்று கூறுவதைக் காட்டிலும், ரவூப் ஹக்கீமுக்கும் ரிஷாட் பதியுதீனுக்கும் இடைப்பட்ட அரசியல் என்று இதைச் சொல்வதே சாலப் பொருத்தமாக இருக்கும். ரிஷாட் பதியுதீன் எதையாவது செய்யப் போகின்றார் என்றால், அதற்கு சமமான எதையாவது ஒன்றை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ரவூப் ஹக்கீமுக்கும், ரவூப் ஹக்கீம் ஏதேனும் காரியங்களைச் செய்தால், அதற்குச் சமமானது எனத்தோன்றும் ஏதாவது ஒரு பணியை செய்து காண்பிக்க வேண்டிய தேவைப்பாடு, ரிஷாட் பதியுதீனுக்கும் ஏற்பட்டிருக்கின்றது.

அவர்களே மறுத்தாலும், இது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அவதானிப்புக்களே. இவ்விருவரும், கடந்த வாரம் அம்பாறை மாவட்டத்துக்கான விஜயங்களை சமகாலத்தில் மேற்கொண்டிருந்தனர். இதில், யாரது பயணம் முதலில் திட்டமிடப்பட்டது என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. ஆனாலும், இரு கட்சித்தலைவர்களும் கொழும்பிலுள்ள தமது வேலைப்பழுக்களை எல்லாம் விட்டுவிட்டு, அம்பாறை மாவட்டத்தில் முகாமிட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. இப் பயணத்தின் போது, ரவூப் ஹக்கீம் பல நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

தேசிய மாநாட்டுக்கு உதவியோருக்கு விருந்துபசாரம் வழங்கி நன்றி தெரிவித்தார். பிரதேச மத்திய குழுக் கூட்டத்தில் பங்குகொண்டார். ஒலுவில் மற்றும் சம்மாந்துறையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் பங்கு கொண்டார். மத்திய மற்றும் மாகாண சுகாதார அமைச்சர்களின் முயற்சியால் எடுத்துவரப்பட்ட சாதனங்களை வைத்தியசாலைக்கு, தன் கையால் வழங்கி வைத்தார். இன்னும் பலவற்றையும் செய்தார். நிஜமாக சொல்வதென்றால், மு.கா. தலைவரின் இவ்விஜயத்தில் பிரதானமாக எதிர்பார்க்கப்பட்ட விடயம் நடக்காமல் போயிருக்கின்றது.

தேசிய மாநாட்டுக்கு அடுத்தபடியான இந்த விஜயத்தில், அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு ரவூப் ஹக்கீம் வருவார் என்றும் அங்கு வைத்து தேசியப்பட்டியல் எம்.பி.க்கான அறிவிப்பை விடுப்பார் என்றும் ஒரு நப்பாசை, அவ்வூரின் கட்சி ஆதரவாளர்களுக்கு இருந்தது. ஆனால், அவ்வூரில் காணப்படும் உள்ளக நிலைவரங்களின்படி, தலைவர் ஹக்கீமினால் அவ்வறிப்பை விடுவது சிக்கலானது என்பது ஊரறிந்த இரகசியமே. ‘தேசியப்பட்டியல் எம்.பி.யை அட்டாளைச்சேனைக்கு வழங்குவது என்ற முடிவை, தலைமை எடுக்காத வரைக்கும், அவ்வூருக்கு வருவதற்கான நிகழ்ச்சி நிரலைத் தலைவர் மாற்றிக் கொள்வார்’ என்று, இப்பக்கத்தில் எழுதிய கடந்தவார பத்தியின் முடிவில் குறிப்பிட்டிருந்தோம். அதுவே நடந்திருப்பதாகத் தெரிகின்றது.

அட்டாளைச்சேனை நகர்ப்பகுதியில், எந்த முக்கிய நிகழ்விலும் மு.கா. தலைவர் உரையாற்றவில்லை. அங்கு கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் அது கடைசி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இதற்கு காரணம், மேலே நாம் குறிப்பிட்டதல்ல என்றும் வேறு சில விடயங்கள் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். எது எப்படியோ, ரவூப் ஹக்கீமின் பாணியில் சொல்வதென்றால், அட்டாளைச்சேனையில், பொது மேடை ஒன்றில் மக்கள் முன்னே முன்னிலையாவதை ‘மிக லாவகமான முறையில்’ தவிர்த்துக் கொண்டுள்ளார் அவர். ஆனால், மாநாட்டின் வெற்றிக்காகப் பாடுபட்டவர்களுக்காகத் தன் கையாலே சோறு பரிமாறினார் தலைவர் என்பது பலரையும் மெய்சிலிர்க்க வைத்திருக்கின்றது.

அம்பாறை மாவட்டத்துக்கான விஜயத்தின் போது, மு.கா. தலைவரும் அவருக்கு அடுத்தபடியான கட்சி முக்கியஸ்தர்களும் தெரிவித்த கருத்துக்கள் முரண்நகைத் தன்மையைக் கொண்டிருந்ததை, அவருடைய  பேச்சுக்களை கவனமாக கேட்போரால் அவதானிக்க முடிந்தது. ஒரு இடத்தில், ‘பதவியாசை இல்லாதவர்களை உருவாக்க வேண்டும்’ என்ற தொனியில் சிலரை இலக்கு வைத்தாற்போல் பேசினார். இன்னுமொரு இடத்தில் கட்சியின் செயலாளரை தளபதிகள் போட்டுத் தாக்குவதை ஆமோதித்துவிட்டு, இன்னுமொரு கூட்டத்தில் செயலாளர் எம்.ரி. ஹசன் அலியுடனான உறவுகளை பலப்படுத்தும் விதத்தில், மிகவும் வரவேற்கத்தக்க உரையொன்றை நிகழ்த்தினார்.

இதைப் பார்க்கின்ற போது இது, ரவூப் ஹக்கீமின் சாணக்கியமா, குழம்பிய இராஜதந்திரமா? என்று கூறுவது சிரமமாகவே உள்ளது. மறுபக்கமாக, ரிஷாட் பதியுதீன், அம்பாறைக்குச் சென்றார். கட்சி ஆதரவாளர்களைச் சந்தித்தார். வேறு சிலருக்கு தனிப்பட்ட உதவிகளைச் செய்தார். பல இடங்களில் ச.தொ.ச விற்பனை நிலையத்தை மேளதாளங்களுடன் திறந்து வைத்தார். முக்கியமாக அவர் தனதுரையில், ‘அம்பாறை முஸ்லிம் பிரதேசங்களைக் கணக்கிலெடுக்காது படுத்துறங்கிக் கொண்டிருந்தவர்களை ஓடித்திரிய வைத்துள்ளோம்’ என்று கூறியிருக்கின்றார்.

மக்கள் காங்கிரஸின் வரவு, முஸ்லிம் காங்கிரஸில் ஏற்படுத்தியிருக்கின்ற தாக்கத்தை, கீரைக்கடை அரசியலில் ஏற்பட்டிருக்கின்ற விளைவை அவர் சொல்லியிருக்கின்றார்.  இரண்டு கட்சிகளின் தலைவர்களும் முஸ்லிம்கள் செறிவாக வாழும் அம்பாறை மாவட்டத்துக்குப் பயணித்தமை எந்த நோக்கத்துக்காக இருந்தாலும் சரி, மிகவும் சந்தோசமளிப்பதே. இவ்வாறு, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்கள், வன்னித் தேர்தல் மாவட்டம் போன்று, சிறுபான்மை மக்கள் வாழ்கின்ற எல்லாப் பிரதேசங்களுக்கும், நல்ல நோக்கங்களின் அடிப்படையில் விஜயம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்தல் சிறந்தது. அவ்வாறு செய்து வந்தால், மடிப்பிச்சை கேட்பது போல தேர்தல் காலங்களில் வாக்குப் பிச்சை கேட்டுக் குட்டிக்கரணம் அடிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலை, முஸ்லிம் கட்சிகளுக்கு ஏற்படாது.

சமூக நோக்கில் இங்கு ஒரு விடயத்தை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கின்றது. அது என்னவென்றால், முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கின்ற சேவைகளுக்கும் அரசியல் தலைமைகள் செய்கின்ற பணிகளுக்கும் இடையிலான ஒவ்வாமையாகும். அந்த கோணத்தில் நோக்கினால், மு.கா. தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் ஆகியோர், அம்பாறையில் மேற்கொண்டது போன்ற பணிகள், ஓர் அமைச்சருக்குரிய கடமைகளே அன்றி, கட்சித் தலைவருக்குரிய கடப்பாடுகளை அல்ல என்பதைக் கவனிக்க வேண்டியிருக்கின்றது. ஹக்கீம், நீர்வழங்கல் அமைச்சராக இருக்கின்ற போது, அவரின் கீழுள்ள நீர்வழங்கல் வடிகாலiமைப்புச் சபையின் ஊடாக குறிப்பிட்ட ஒரு பிரதேசத்துக்கு நீர் வழங்குவது போன்ற சேவைகள், அதற்குப் பொறுப்பான அமைச்சருக்குரிய பணிகளாகும். இந்த இடத்தில் யார் இருந்தாலும் அதைச் செய்தேயாக வேண்டும்.

அப்பதவியில் சிங்களவர் ஒருவர் இருந்திருந்தால், பல தமிழ் முஸ்லிம் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கும். அப்படிப்பார்த்தால், ஒரு முஸ்லிம் அமைச்சராக இருப்பதால், தமிழ், முஸ்லிம் பிரதேசங்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றார் என்பது உண்மையே. ஆனால், அமைச்சரின் பொறுப்புக்களை நிறைவேற்றி விட்டு, கட்சித் தலைவரின் பணியை ஹக்கீம் செய்து விட்டார் என்பது போல் காட்ட முனைவது நல்லதல்ல. அவ்வாறே, மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் கைத்தொழில் அமைச்சராக பதவி வகிக்கின்றார்.

அவரின் கீழ் பல நிறுவனங்கள் வருகின்றன. அவ்வாறான நிறுவனங்களின் கீழ் ஒரு பணியை மேற்கொண்டு விட்டு, அன்றேல், ஊருக்கு ஊர், ச.தொ.ச விற்பனை நிலையங்களுக்குத் திறப்புவிழா நடத்திவிட்டு, அதைக் கட்சித் தலைவர் என்ற வகையில் செய்ததாகச் சொல்ல முடியாது. மேலே சொன்னது போல், நம்மவர் ஒருவர் அப்பதவியில் இருப்பதாலேயே இத்தனை காலகெதியில் ச.தொ.ச திறக்கப்படுகின்றது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், இவ்வாறான சேவையைச் செய்வதானது கைத்தொழில் அமைச்சருக்கான கடமையே அன்றி, அதை சொல்லிக் காட்டி மக்கள் காங்கிரஸின் தலைமைத்துவம் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுகின்றது என்று சொல்லிவிட முடியாது. கட்சித் தலைவர்களாகவும் அமைச்சர்களாகவும் இருக்கின்ற ரிஷாட் பதியுதீனும் ரவூப் ஹக்கீமும் இரட்டை முக்கியத்துவங்களை கொண்டவர்கள். ஒன்று, அவர்கள் அரசாங்கத்தின் அமைச்சர்கள். இரண்டாவது, கட்சிகளின் தலைவர்கள்.

எனவே, மற்றைய முஸ்லிம் அரசியல்வாதிகளை விட, இவர்களுடைய பொறுப்பு மிக அதிகமானதாகும். தாம் இருவரும் பரம விரோதிகள் போல காட்டிக் கொண்டு, மக்களையும் கட்சி வாரியாகப் பிளவுபடுத்துகின்ற வழக்கமான கைங்கரியத்தைச் செய்வதில் காட்டுகின்ற அக்கறையையும் கரிசனையையும் இவர்கள் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதிலும் அபிலாஷைகளை நிறைவு செய்வதிலும் காட்ட வேண்டும். அமைச்சருக்குரிய பணி என்ன என்பது அப்பதவியால் வரையறுக்கப்படுவதாகும்.

தலைவருக்குரிய பொறுப்பு என்பது, மக்களால் எதிர்பார்க்கப்படுவதும் காலத்துக்காலம் மாறிக் கொண்டு போவதுமாகும். எனவே இவை இரண்டையும் ஒன்றாக நினைத்துக் கொள்ளலாகாது. அமைச்சருக்குரிய பணியைச் செய்து விட்டு, கட்சித் தலைவர் என்ற பொறுப்பின் ஒரு பகுதியை நிறைவேற்றுதாக எண்ணிக் கொள்ளக் கூடாது. மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம், ம.கா தலைவர் ரிஷாட் பதியுதீன் ஆகியோரின் தீவிர ஆதரவாளர்கள்  ‘இதோ தலைவர் சாதித்துக் காட்டிவிட்டார்’ என்ற தோரணையில் தம்பட்டம் அடிப்பதை  நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஆனால், கப்பல் துறைமுகங்கள் அமைச்சராக இருந்த மர்ஹும் அஷ்ரப், ஒலுவில் துறைமுகத்துக்கு அடித்தளமிட்டது போல, மேற்படி தலைவர்கள் இருவரும் தம்முடைய அமைச்சின் ஊடாக பாரிய அபிவிருத்தித் திட்டங்களை தூரநோக்கோடு மேற்கொள்வார்களோயானால், அவை இவ்விமர்சனத்துக்கு விதிவிலக்காக அமையும். கட்சித் தலைவர் என்ற பொறுப்பை நிறைவேற்றிய ஒரு சந்தர்ப்பமாக அதைக் கருதலாம். எதிர்கால சமூகத்தையும் கருத்திற்கொண்டு, தென்கிழக்குப் பல்கலைக்கழகம் போன்ற ஒரு திட்டத்தை முன்வைத்தால் அதைக் கொண்டாடலாம்.

அமைச்சருக்கான பணியைத் தலைவரின் பணியாக காட்ட முனைவதானது, தலைவருக்கான பெரும் பொறுப்பை அமைச்சுப் பதவிகளுக்குள் முடக்கிக் கொள்வதாகும். அப்படிப் பார்;த்தால், கட்சித் தலைவராக இல்லாத எத்தனையோ முஸ்லிம் அமைச்சர்கள், எம்.பி.க்கள் இதைக்காட்டிலும் பாரிய செயற்றிட்டங்களை முன்னெடுத்திருக்கின்றார்கள். அமைச்சருக்கான கடமைகளை நீங்கள் செய்யாவிட்டால், அதைப் பின்னர் ஒரு நாளில் செய்வதற்கான வாய்ப்பு கிட்டலாம். ஆனால், கட்சி என்ற வகையில் உரிய நேரத்தில் ஒரு கடமையை நிறைவேற்றத் தவறினால், அது பெரும் வரலாற்றுத் தவறாகவே வந்து முடியும்.

ஆதலால், முஸ்லிம் கட்சிகளின் தலைமைகளான ஹக்கீம், ரிஷாட், ஏன் இன்று நாடாளுமன்ற உறுப்புரிமையையும் இழந்திருக்கின்ற அதாவுல்லா மீதும் இருக்கின்ற கடப்பாடு மிகப் பெரியதாகும். விஷேடமாக, இதில் முதல் இரண்டு பேர் மீதும் இச்சமூகம் பாரிய எதிர்பார்ப்புக்களைக் கொண்டுள்ளது. அது மிக விசாலமானதும் ஆழமானதும் ஆகும். அரசியலமைப்பு, இனப்பிரச்சினை, சிவில் நிர்வாகம் என பல்வேறு பொறிமுறைகளில் சிறுபான்மை முஸ்லிம்களின் பாத்திரத்தை உறுதிப்படுத்துவது தொடக்கம், வரையறையற்ற பல அபிலாஷைகளை ரவூப் ஹக்கீமும் ரிஷாட் பதியுதீனும் நிறைவேற்ற வேண்டியதாக உள்ளது.

இந்த முஸ்லிம் கட்சிகளின் மீதான மக்களின் எதிர்பார்ப்பு, நீர்வழங்கல் அலுவலகங்கள் திறப்பiதையும், ச.தொ.ச விற்பனை நிலையம் திறப்பதையும் தாண்டிப் புனிதமானது.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *