சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் பெண்களை விட ஆண்கள்தான் அதிக அளவில் பொய்யான தகவல்களைத் தெரிவிப்பதாக பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பேஸ்புக்கில் தங்களைப் பற்றிய சுய விபரம், ஆர்வம், பொழுதுபோக்கு போன்றவற்றைப் பகிர்வதிலேயே பெரும்பாலானோரின் பொய் தொடங்கி விடுகிறது.

தங்கள் நண்பர்கள், குடும்பத்தினரை விட தங்கள் முகநூல் பக்கம் வசீகரமாகவும், சுவாரஷ்யமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக பொய்யான தகவல்களைப் பகிர்வதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை, ஆய்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த ஆண்கள் பலரும் ஒப்புக்கொண்டுள்ளதாக
கூறப்பட்டுள்ளது.

பேஸ்புக்கின் முக்கிய அடையாளமான ப்ரொபைல் பிக்சரில் (Profile Picture) தங்களது தற்போதைய
உண்மையான தோற்றத்துடன் கூடிய படத்தை பதிவேற்றம் செய்ய பெரும்பாலானோர் விரும்புவதில்லை.

இதனை 43 சதவீத ஆண்கள் ஆமோதித்துள்ளனர். 14 சதவீத ஆண்கள் மட்டுமே தங்களுடைய தோற்றத்தை அப்படியே பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது 18 சதவீதம் பேர் மட்டுமே தங்களது இப்போதைய புகைப்படத்தையும், விபரத்தையும் சரியாக வெளியிட்டுள்ளனர்.

தங்களது ஆர்வம், பொழுதுபோக்கு, பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் போன்றவை மற்றவர்களைக் கவரும் வகையில் இருக்க வேண்டும் என்பதிலேயே பலர் கவனமாக உள்ளனர். இதனால் அவர்களது சொந்த விருப்பங்கள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன.

சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்ட கருத்துக்களால், கடுமையான விமர்சனங்களையும், கசப்பான அனுபவங்களையும், எதிர்ப்புகளையும் பெற்றுள்ளதாகவும், முன்பின் தெரியாதவர்களுடன் கூட கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளதாகவும் 25 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

அரசியல், மதம், பாலியல் போன்றவை பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கப்படும் விடயங்களாக உள்ளன.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *